Skip to main content

அடுத்த தலைமுறை அரசியல் 'ஆப்' அரசியல்?

Published on 20/02/2018 | Edited on 21/02/2018

காலத்திற்கேற்ப ஒவ்வொரு விஷயமும் மாறிக்கொண்டுதான் இருக்கிறது. அதுபோல் அரசியலும் மாறிக்கொண்டேதான் வருகிறது முன்பெல்லாம் அரசியல் கட்சி தொடங்குவோர் ஒவ்வொரு ஊர்களிலும் உள்ள மதிக்கத்தக்க பெரியவர்களை நாடி தனது கட்சிக்கான ஆதரவையும், கட்சிக்கு உறுப்பினர்களையும் சேர்ப்பார்கள். இது ஆரம்பத்திலிருந்தே அரசியல்வாதியாக இருப்பவர்கள் பின்பற்றுவது. ஆனால் சினிமாவிலிருந்து அரசியலுக்கு வருவோருக்கு அந்த பிரச்சினை கிடையாது. அவர்களது ரசிகர்களே தொண்டர்களாக கட்சி பணிகளில் ஈடுபடுவார்கள். ஆனால் சினிமாவில் வெற்றி பெற்று அரசியலிலும் ஜொலித்தவர்கள் என்றால் கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, விஜயகாந்த் இது ஒரு பட்டியல் என்றால், சிவாஜியில் தொடங்கி நவரச நாயகன் கார்த்திக் வரை அனைவரும் சினிமாவில் வெற்றிபெற்று அரசியல் கட்சித்தொடங்கி தோல்விமுகம் கண்டவர்கள் இந்த பட்டியல் நீண்டுகொண்டே போவது அடுத்த பட்டியல். இப்படி அரசியல் எனும் கடலில் குதித்து முத்தெடுக்க தயாராய் இருப்பவர்கள் வரிசையில், தற்போது ரஜினியும்,கமலும் இறங்கியுள்ளனர். கட்சித்தொடங்கும் அறிவிப்பிற்கு பிறகு கட்சியில் உறுப்பினர்களை சேர்க்க இருவரும் தனித்தனியே ஒரு செயலியை உருவாக்கி அதன் மூலம் தங்கள் கட்சிக்கு உறுப்பினர்களை சேர்க்கத் தொடங்கியுள்ளனர். இவர்களைப்போலவே விஷால், சரத்குமார் ஆகியோரும் செயலிகளை அறிமுகம் செய்துள்ளனர். இவர்கள் அறிமுகம் செய்துள்ள செயலிகளை பற்றிய ஒரு தொகுப்புதான் இது.

RR



ரஜினி மன்றம் 

கடந்த டிசம்பர் மாதம் தனது அரசியல் அறிவிப்பை அறிவித்த ரஜினி, புத்தாண்டு அன்று தனது கட்சியில் உறுப்பினராக இணைய விரும்புபவர்களுக்காக ரஜினி மன்றம் என்ற செயலியை அறிமுகம் செய்து கட்சியில் உறுப்பினராக இணைய இந்த செயலியில் பதிவு செய்யுங்கள் என்று பேசிய வீடியோவும் வெளியானது. இந்த செயலியை இதுவரை பிலே ஸ்டோரில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். 


 

KAMAL

 நாளை நமதே

ட்விட்டரில் தனது அரசியல் கருத்துக்களை பதிவு செய்து அரசியல் கட்சி தலைவர்களுடன் சொற்போர் செய்து வந்தவர். இன்று முதல் தனது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார். இதற்கு முன்பு  தன் பிறந்தநாளின் பொழுது மையம்.காம் என்ற தளத்தை அறிமுகம் செய்தார் தற்போது அதன் பெயரை மாற்றி நாளை நமதே  என்று வைத்துள்ளார். இந்த செயலியை இதுவரை 500 நபர்கள் மட்டுமே தரவிறக்கம் செய்துள்ளனர். ரஜினியிடம் செயலியில் பின்தங்கிய கமல் அரசியல் களத்தில் எப்படி இருப்பார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

SARATHKUMAR


ஆஸ்க் (Ask) சரத்குமார்

நடிகரும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமாரும் "ஆஸ்க் சரத்குமார்" எனும் செயலியை சென்ற ஆண்டு டிசம்பர் மாதத்தில் அறிமுகம் செய்தார். இதில் மக்கள் தங்களுக்கான பிரச்சனையை மற்றும் உதவிகளை செயலி மூலம் கேட்கலாம் இதற்கான பதிலை சரத்குமார் செயலியிலேயே தெரிவிப்பார். இது மக்களுக்கு உதவி செய்வதற்காக உருவாக்கப்பட்ட செயலி என்றும் "தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் கொடுக்கப்படும்" என்று இந்த செயலி அறிமுக விழாவில் சரத்குமார் கூறினார். இதுவரை ஆயிரம் நபர்கள் தரவிறக்கம் செய்துள்ளனர்.


 

V


"வி" ஷால்  

நடிகர் விஷாலும் மக்களுக்கு சமூக சேவை செய்ய சரத்குமாருக்கு முன்னாலே  "வி" ஷால் எனும் செயலியை அறிமுகம் செய்தார். இந்த செயலியின் நோக்கம் குறித்து விஷால் பேசி வெளியிட்டிருந்தார். இந்த செயலி தற்போது பிலே ஸ்டோரில் காணவில்லை.

இதுபோன்ற செயலிகள் மூலம் மட்டும் மக்களின் பிரச்சனைகளைத் தெரிந்துகொள்ள முடியாது. ஏனென்றால் இந்த தலைமுறையினர் மட்டும்தான் செயலி தரவிறக்கம் செய்வதில் ஆர்வம் காட்டுவர். மற்ற பாமர மக்களின் நிலை பற்றி அறிந்துகொள்ள வேண்டுமென்றால் அவர்களின் இடத்திற்கு சென்றால்தான் பிரச்சினைகள் குறித்து தெரிந்துகொள்ள முடியும்.