Skip to main content

"அவர் மேலே என்கிட்ட புகார் சொல்றியா?கல்லூரி பெண் பேராசிரியையின் கதறல்!அதிர்ச்சி ரிப்போர்ட்!

Published on 03/10/2019 | Edited on 03/10/2019

அந்தக் கதறல் வீடியோவும் அதிலிருந்த குரலும் பார்ப்பவர்களைக் கலங்க அடித்தது. பிரபல மருத்துவக்கல்லூரியில் உதவிப் பேராசிரியையாக இருப்பதாகவும், தன்னை அடைத்துவைத்து சாப்பாடுகூட கொடுக்காமல் கொடுமைப்படுத்துவதாகவும், பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபடுவதாகவும் தன்னைக் காப்பாற்றும்படியும் வெளியிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாய் பரவி பதைபதைப்பை ஏற்படுத்திக்கொண்டிருந்தது. அதுகுறித்து விசாரிக்க ஆரம்பித்தபோதுதான் பகீரூட்டும் தகவல்கள் கிடைத்தன.

 

bafila



காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூர் ரத்தினமங்களம் பகுதியில் உள்ளது, அந்தப் பெண் உதவிப் பேராசிரியை வீடியோவில் குறிப்பிட்ட பிரபல தாகூர் மருத்துவக்கல்லூரி. அதற்கருகே, தாகூர் பல் மருத்துவக் கல்லூரி வளாகத்திலுள்ள விடுதியில் தங்கியிருக்கும் பெண் உதவிப் பேராசிரியை பபிலாவை சந்திக்க முயன்றபோது, சந்திக்கவிடாமல் தடுத்தார்கள் கல்லூரி நிர்வாகத்தினர். கடுமையான எதிர்ப்புகளையும் மீறி உள்ளே நுழைந்து உதவிப் பேராசிரியை பபிலாவை சந்தித்துப் பேசினோம்.

 

bafila



நான் கே.எம்.சி. அரசு மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். முடிச்சுட்டு கோல்டுமெடல் வாங்கியவள். வெளிநாட்டுல ஸ்காலர்ஷிப்புடன் கூடிய உயர்படிப்புக்கான வாய்ப்பு கிடைத்தும் குடும்பச்சூழலால் தொடரமுடியாமல் இந்தியாவிலேயே வேலைசெய்துகொண்டு எம்.எஸ். படிக்கலாம் என்றுதான் தாகூர் மருத்துவக்கல்லூரியில் உதவிப் பேராசிரியராக சேர்ந்தேன். பாடம் தொடர்பாக மாணவிகள் என்னிடம் அதிகமா டவுட் கேட்கிறது, நான் பயிற்சி கொடுக்கும் மாணவர்கள் படிப்பில் டாப்பாக வருவது எல்லாம் எனது சீனியர் பேராசிரியர் வெங்கட்ராமயாவுக்கும் உதவிப் பேராசிரியை கிருஷ்ணேஸ்வரிக்கும் பொறாமையை ஏற்படுத்தியது. இதனால, எனக்கு டிபார்ட்மெண்டில் உட்கார சேர் கூட கொடுக்காம, ஸ்டாஃப் ரூமிற்குள்ளும் வரவிடாம தடுத்து டீஸ் பண்ண ஆரம்பித்தார்கள். இன்னொருபக்கம் ஆபீஸ் அட்மின் லட்சுமிகாந்தன் என்பவர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட ஆரம்பித்தார்.

 

principal



எனக்கு என்ன பண்றதுன்னே புரியல. இன்னொரு பக்கம் பேராசிரியர் வெங்கட்ராமயா எனக்கு எந்த வேலையும் கொடுக்காம என்னை ஒதுக்க ஆரம்பிச்சார். எனக்கு அம்மா, அப்பா இல்ல. என்னோட வேலையை வெச்சுத்தான் நான் உயர்படிப்பு படிக்கணும். எனக்குத் துணையாக இருக்கிற என்னைய மட்டுமே நம்பியிருக்கிற வயசான சித்தியையும் நான்தான் பார்த்துக்கணும். இந்தச் சூழ்நிலையில நான் வேலை பார்க்குற இடத்தில் இரண்டு விதமான டார்ச்சர்களையும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்து தாங்கமுடியாம கல்லூரி முதல்வர் சித்ராகிட்டேயும் சொன்னேன். "வெங்கட்ராமயா என்னோட சக பேராசிரியர். அவர்மேலேயே வந்து என்கிட்ட புகார் சொல்றியா?'ன்னு சொல்லி என் பக்கம் என்ன நியாயம் இருக்குன்னுகூட கேட்கல. அதுக்கப்புறம், அட்மினில் இருக்கும் செந்தில் என்பவரை வைத்து என்னோட அட்டென்டென்ஸை திருத்தி, நான் வந்த நாட்களையெல்லாம் அழித்து ஆப்செண்ட் போட வெச்சார் வெங்கட்ராமயா.

இதுகுறித்து டீன் குணசேகரன்கிட்டயும் புகார் கொடுத்தேன். ஆனா, எந்த நடவடிக்கையும் எடுக்கலை. எனக்கு 27 வயசாகுது. திருமணம் ஆகல. இதுவே, எனக்கொரு அண்ணனோ, தம்பியோ இருந்திருந்தா... அவனை ஏதாவது பண்ணியிருப்பாங்களேன்னு அழுதுக்கிட்டே கை நரம்பை கட் செய்து தற்கொலைக்கு முயற்சி பண்ணினேன். வலி தாங்கமுடியாம நானே ட்ரீட்மெண்ட் பண்ணிக்கிட்டேன். ஆனா, கையை பார்த்து கல்லூரியில கண்டுபுடிச்சுட்டாங்க.


டீன் சார் கூப்பிட்டு "நீ ஒருவாரத்துக்கு ரெஸ்ட் எடுத்துட்டு வாம்மா'ன்னுதான் சொன்னார். நான், ரூமுக்கு போய்ட்டேன். ஆனா, மெஸ்லேர்ந்து ஃபுட் வர்ல. போன் பண்ணி கேட்டா. உங்களுக்கு ஃபுட்டை நிறுத்திட்டாங்கன்னு சொன்னார் மெஸ் அண்ணா. குடிக்க தண்ணிக்கூட இல்லாம சனி, ஞாயிறு பசியோட ரூமுக்குள்ளேயே கிடந்தேன். சரி, வெளியில போயி கேண்டீன்ல ஏதாவது சாப்பிடலாம்னு கதவை திறக்கிறேன்; திறக்க முடியல. பலமுறை கதவை தட்டிய பிறகும் கதவு திறக்கல. கதவு வெளியில பூட்டு போடப்பட்டிருக்கு. பயந்துபோய் ப்ரெண்ட்ஸ், என்.ஜி.ஓ., போலீஸுக்கு புகார்ன்னு மெசேஜ் அனுப்பினேன். வீடியோ வெளியிட்டேன். என்னை காப்பாற்ற வந்த மீடியாக்களை தடுத்துட்டாங்க.

அதுக்குப் பிறகுதான், போலீஸும் என்.ஜி. ஓ.வும் கதவை உடைச்சு என்னைய காப்பாத்தினாங்க. தாழம்பூர் இன்ஸ்பெக்டர் பழனியும் சமூகநலத்துறை அதிகாரிகள் சங்கீதா உள்ளிட் டவர்களும் சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகத் தின் மீது நடவடிக்கை எடுக்காமல் என்னை பிரைன்வாஷ் செய்து இங்கிருந்து வெளியேற்றுவதிலேயே குறியாக இருந்தார்கள். ஆனால், மாமல்லபுரம் ஏ.எஸ்.பி. பத்ரிநாராயணன் ஐ.பி.எஸ். சார் மட்டும்தான் எனக்கு கேண்டீன்லருந்து சாப்பாடு கொடுக்கணும்னு உத்தரவிட்டதோட என்னோட புகாரை காதுகொடுத்து கேட்டு வழக்குப்பதிவு செய்தார். டீச்சிங்கை என்னோட உயிரா நினைச்சு பயிற்சிகொடுத்து நானும் ஹையர் பயிற்சி எடுத்துக்கலாம்னு வந்த என்னை திடீர்ன்னு வெளியேற்றி என் வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கிய கல்லூரி நிர்வாகத்தின் மீதும், சம்பந்தப்பட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கும்வரை புகாரை வாபஸ் வாங்கமாட்டேன்''’என்கிறார் உறுதியாக.

இதுகுறித்து, தாகூர் பல் மருத்துவக் கல்லூரி முதல்வர் சித்ராவிடம் நாம் கேட்டபோது, உதவிப் பேராசிரியை பபிலா கல்லூரிக்கு சரியாக வந்து பாடம் எடுக்கவில்லை. கண்டித்ததால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அதனால், அவரை பணிநீக்கம் செய்தோம். ஆனால், கல்லூரி வளாகத்திற்குள் இருக்கும் தங்கும் விடுதியை விட்டு வெளியேறாமல் நிர்வாகத்தின்மீது இப்படி பொய்யான தகவல்களை பரப்பிவருகிறார். அவர், மன அழுத்தத்தில் இருக்கிறார்'' என்றார் விளக்கமாக. பபிலாவுக்கு மனநல சிகிச்சை அளிக்கவேண்டும் என்றும், இந்த விவகாரத்தை வைத்து பெரிய அளவிலான பேரத்துக்கும் திட்டமிடப்படுகிறது என்றும் கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரும் காவல்துறை கண்காணிப்பாளரும் தீர விசாரித்தால்தான் என்ன நடந்தது என்ற உண்மை வெளிவரும்.