Skip to main content

மீனவர்களைப் பற்றி கவலைப்படாதவர்தான் மீன்வளத்துறை அமைச்சர்... மக்கள் நீதி மய்யம் கடும் தாக்கு

Published on 18/04/2020 | Edited on 18/04/2020

மீன்பிடி தடைக் காலத்தில் பன்னாட்டு நிறுவன கப்பல்கள் நமது கடல் எல்லைக்குள் மீன்பிடிப்பது எவ்வகை நீதி என கேள்வி எழுப்பியுள்ளார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன். 
 

 

 

kkk


''ஊரடங்கில் நிலைகுலைந்த மீனவர்களை, மீன்களின் இனவிருத்திக்கான காரணம் காட்டி மேலும் 60 நாட்கள் தடை விதித்துவிட்டு, இன்று  பன்னாட்டு நிறுவனங்களின் கப்பல்கள் நமது கடல் எல்லைக்குள் மீன்பிடிப்பது எவ்வகை நீதி?'' என தனது ட்விட்டர் பக்கத்தில் கமல்ஹாசன் பதிவு செய்துள்ளார். 

 

 nakkheeran app



இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸ் நம்மிடம் பேசுகையில், கரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைக்காக ஊரடங்கு போடப்பட்டுள்ளது. இதில் மீனவர்களும் கடலுக்கு செல்லக்கூடாது என்று தடை செய்யப்பட்டனர். இதனால் அவர்கள் பாதிக்கப்பட்டனர். மேலும் அவர்கள் சிந்தாதிரிப்பேட்டையில் விற்பனை செய்ததையும் தடை விதித்தனர். இதனால் அவர்களின் அன்றாட வருமானம் பாதிக்கப்பட்டது. காய்கறிகள் விற்பனைக்காக கோயம்பேட்டில் எப்படி ஏற்பாடு செய்தார்களோ அப்படி இவர்களுக்கும் செய்திருக்கலாம் அதனை அரசு செய்யவில்லை. 
 

mmm


 

மேலும் மீன்களின் இனவிருத்திக்காக வருடம் தோறும் வரும் மீன்பிடி தடைக்காலமும் தற்போது வந்துள்ளது. இதனால் அவர்கள் மேலும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அவர்கள் நாட்டுப்படகில் கடலுக்கு சென்றபோது, கடலில் பன்னாட்டு நிறுவன கப்பல்கள் நமது கடல் எல்லைக்குள் வந்து மீன்பிடித்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். எந்த நோக்கத்திற்காக மீன்பிடி தடைக்காலம் போடப்பட்டதோ, அதன் நோக்கமே சிதைந்துவிடுமே என்று அவர்கள் வருத்தத்தில் உள்ளனர். 

 

jjj



இந்தியாவின் மிக நீளமான இரண்டாவது கடற்கரை நமது கடற்கரை. பெரும்பான்மையான சமுதாயமான மீனவர்கள் பிரிந்து பிரிந்து வசிக்கிறார்கள் கடற்கரையோரங்களில். மற்றவர்களைப் போல ஒரே இடத்தில் வசித்தால் ஓட்டுக்காக இவர்களை கொண்டாடிப்பார்கள் அரசியல் கட்சியினர். பிரிந்து வாழ்வதால் இவர்களை யாரும் கண்டுகொள்ளவில்லை. 

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மீனவர்களைப் பற்றி கவலைப்படவில்லை. யாராவது அதிமுகவைப் பற்றியோ, அதிமுக அரசைப் பற்றியோ எதிர்த்து பேசினால் அவர்களுக்கு பொறுப்பாக பதில் சொல்லாமல், நக்கலாக பதில் சொல்வதையே சாதனையாக வைத்திருக்கிறாரேயொழிய, ராயபுரத்தில் இருந்து கொண்டு மீனவர்களைப் பற்றி கவலைப்படவில்லை.  

கரோனா வைரஸ் தாக்காமல் மக்களை பாதுகாக்க அரசு எப்படி நடவடிக்கை எடுக்கிறதோ, அதைப்போலவே மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
 

 

Next Story

கமல்ஹாசன் தேர்தல் பிரச்சார விவரம் வெளியீடு!

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
Kamal Haasan election campaign details release

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிப்பு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக தமிழக முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று முன்தினம் (22.03.2024) திருச்சி சிறுகனூரில் நடைபெற்ற பிரச்சார பொது கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு திருச்சி ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோவையும், பெரம்பலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் அருண் நேருவையும் ஆதரித்து வாக்கு சேகரித்து தனது பிரச்சாரத்தை தொடங்கினார். மேலும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (24.03.2024) மாலை வண்ணாங்கோயில் என்ற இடத்தில் பரப்புரையை தொடங்க உள்ளார்.

இந்நிலையில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியை ஆதரித்து மக்கள் நீதி மய்யத்தின் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ள விபரங்கள் வெளியாகியுள்ளன. அதன்படி மார்ச் 29 ஆம் தேதி ஈரோட்டிலும், மார்ச் 30 ஆம் தேதி சேலத்திலும், ஏபரல் 2 ஆம் தேதி திருச்சியிலும், 3 ஆம் தேதி சிதம்பரத்திலும், 6 ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சென்னையிலும், 7 ஆம் தேதி சென்னையிலும், 10 ஆம் தேதி மதுரையிலும், 11 ஆம் தேதி தூத்துக்குடியிலும், 14 ஆம் தேதி திருப்பூரிலும், 15 ஆம் தேதி கோயம்புத்தூரிலும், 16 ஆம் தேதி பொள்ளாச்சியிலும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

மத்திய அமைச்சர் மீது ஆர்.எஸ்.பாரதி புகார்

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
RS Bharati complains against Union Minister Shoba

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள ஒயிட்ஃபீல்ட் 80 அடி சாலை என்ற இடத்தில் ராமேஸ்வரம் கஃபே என்ற பிரபல உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த 1 ஆம் தேதி (01.03.2024) பிற்பகல் 01.05 மணியளவில் திடீரென யாரும் எதிர்பாராத வேளையில் அடுத்தடுத்து இரண்டு முறை மர்மப் பொருள் வெடித்தது. இந்த வெடி விபத்தில் மொத்தம் 10க்கும்  மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த வெடி விபத்தின் முதற்கட்ட விசாரணையில், இது சிலிண்டர் வெடிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. அதே சமயம் வெடி விபத்து நிகழ்ந்த இடத்தில், தடயவியல் நிபுணர்கள் குழு தடயங்களைச் சேகரித்து ஆய்வு நடத்தினர். பின்னர் அது திட்டமிடப்பட்ட குண்டு வெடிப்பு என்பது உறுதி செய்யப்பட்டது.இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (N.I.A.) மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது

இத்தகைய சூழலில் மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “பெங்களூரு ராமேஸ்வரம் கஃபேவில் நடந்த வெடிகுண்டு சம்பவம் தமிழகத்தில் இருந்து வந்தவர்களால் தான் நடைபெற்றது” எனத் தெரிவித்திருந்தார். இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. மேலும், மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலஜேயின் இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அமைச்சரின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

RS Bharati complains against Union Minister Shoba

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அ.தி.மு..க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மத்திய இணை அமைச்சரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்குள் உள்ளது.  சர்ச்சைக்குரிய மற்றும் பிளவுபடுத்தும் கருத்துக்களை அரசியல் தலைவர்கள் பேசக்கூடாது என ஏற்கெனவே தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், மத்திய இணை அமைச்சரின் பேச்சு கடும் கண்டனங்களைப் பெற்றுள்ள நிலையில், இரு மாநிலங்களுக்கு இடையே கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாகவும், தமிழ்நாட்டு மக்களை இழிவுபடுத்தியதாகவும்  திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே மீது தேர்தல் ஆணையத்தில் புகார் மனு கொடுத்துள்ளார்.