
நாமக்கல் அருகே மாரியம்மன் கோவிலுக்குள் ஒரு தரப்பு மக்களை வழிபட அனுமதி மறுத்ததால் போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் வீசானம் பகுதியில் மகாமாரியம்மன் கோவில் ஒன்று உள்ளது. கோவிலின் திருவிழா நேற்று மாலை தொடங்கியது. இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த பட்டியலின மக்கள் அந்த கோவிலில் வழிபாடு நடத்துவதற்கு சென்றனர். கோவிலின் உள்ளே செல்லவும் வழிபாடு நடத்தவும் அனுமதி வேண்டும் என கூறியுள்ளனர். மற்ற சமூகத்தினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இன்று காலை கோவிலில் முன் நடப்பட்டிருந்த முகூர்த்தக்காலை ஒரு தரப்பினர் பிடுங்கி கிணற்றில் வீசியதாகக் கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து அங்கு மோதல் உருவாகும் போக்கு ஏற்பட்டதால் நாமக்கல் ஏஎஸ்பி தலைமையிலான போலீசார் அதிகப்படியாக குவிக்கப்பட்டனர். வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் இருதரப்பைச் சேர்ந்த முக்கிய நபர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அக்கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் அந்த கோவிலில் எல்லா சமூக மக்களும் வழிபாடு நடத்த அனுமதி உண்டு என தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதனை ஏற்காமல் எதிர்த்து ஒரு தரப்பு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதோடு கோவிலில் தஞ்சமடைந்து எதிர்ப்பு தெரிவித்து போலீசாரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வருவாய்த்துறை; இந்து சமய அறநிலைத்துறை மற்றும் காவல்துறையினர் என பலரும் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தை தோல்வி முடிந்தால் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து பட்டியலிட மக்கள் கோவிலுக்குள் சென்று வழிபட ஆயத்தமாகி வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.