Skip to main content

இபிஎஸ், ஓபிஎஸ்ஸிற்கு ஏற்பட்ட சந்தேகம்... உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்... அதிர்ச்சியில் பாஜக, பாமக! 

Published on 23/01/2020 | Edited on 23/01/2020

நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தலை மார்ச் மாதம் 11-ந் தேதிக்குள் நடத்தி முடிக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது மாநில தேர்தல் ஆணையம். இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் விவாதித்திருக்கிறார் தேர்தல் ஆணையர் பழனிச்சாமி.

இந்த நிலையில், உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி உள்ளிட்ட மூத்த அமைச்சர்களுடனும், 9 மாவட்டங்களின் அ.தி.மு.க. நிர்வாகிகளுடனும் ஆலோசித்திருக்கிறார் எடப்பாடி. அந்த ஆலோசனையில் விவாதிக்கப்பட்ட விபரங்களை அறிந்து அ.தி.மு.க. கூட்டணியிலுள்ள பா.ஜ.க.வும் தே.மு.தி.க.வும் அதிர்ச்சியடைந்துள்ளன.

 

admk



உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் பஞ்சாயத்துராஜ் சட்டத்தின்படி இடஒதுக்கீடு, வார்டு வரையறைகள் செய்யப்படாததை எதிர்த்து உச்சநீதிமன்றத் தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது தி.மு.க. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், "புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 9 மாவட்டங்களுக்கான வார்டு வரையறைகளை முறையாக முடித்து 3 மாதத்திற்குள் தேர்தலை நடத்த வேண்டும்' என தேர்தல் ஆணையத்துக்கு கடந்த டிசம்பர் 11-ல் உத்தரவிட்டிருந்தது.

இதனையடுத்து, 9 மாவட்டங்களைத் தவிர்த்து 27 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சிகளுக்கான நேரடி தேர்தலையும், மறைமுகத் தேர்தலையும் நடத்தி முடித்த ஆணையம், தற்போது 9 மாவட்டங்களுக்கான தேர்தலை மார்ச் 11-க்குள் நடத்த வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளது.

தேர்தலை நடத்துவது குறித்து ஆணைய வட்டாரங்களில் விசாரித்த போது, "உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தேர்தலை நடத்த ஆணையம் தயாராக இருக்கிறது. வார்டு வரையறை பணிகள் முழுமையடைந்திருக்கிறது. ஆனால், மார்ச் முதல் வாரத்திலிருந்து ஏப்ரல் வரை பள்ளிகளுக்கு தேர்வு நடக்கவிருப்பதால் மார்ச் மாதத்தில் தேர்தலை நடத்த தமிழக பள்ளிக் கல்வித்துறை ஒப்புதல் தராது. அதனால் மார்ச் 28-க்குள் தேர்தலை நடத்தி முடிக்கவேண்டும். இல்லையெனில், பள்ளிகளுக்கான தேர்வு முடிந்த பிறகு மே மாதத்தில்தான் தேர்தலை நடத்த முடியும். ஆனால், இதற்கு உச்சநீதிமன்றத்தில் மேலும் சில மாதங்கள் அவகாசம் கேட்க வேண்டும். அவகாசம் கேட்டால் உச்சநீதிமன்றம் ஏற்குமா என்பது தெரியவில்லை. இதற்கிடையே, மார்ச்சில் பட்ஜெட் கூட்டமும் நடத்தப்பட வேண்டும். இவ்வளவு சிக்கல்கள் இருப்பதால், தேர்தலை பிப்ரவரி 28-க்குள் நடத்துவதா? அல்லது உச்சநீதிமன்றத்தில் அவகாசம் கேட்பதா? என்பது குறித்துதான் முதல்வரிடம் ஆலோசித்திருக்கிறார் ஆணையர் பழனிச்சாமி'' என்கிறார்கள் ஆணைய அதிகாரிகள்.

 

admk



ஆணையருடனான விவாதத்திற்கு பிறகே துணை முதல்வர் ஓ.பி.எஸ்., சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி, மின்துறை அமைச்சர் தங்கமணி உள்ளிட்ட மூத்த அமைச்சர்களுடனும் 9 மாவட்டங்களின் நிர்வாகிகளுடனும் இரண்டு கட்டங்களாக ஆலோசனை நடத்தியிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.

இதுகுறித்து அ.தி.மு.க.வில் விசாரித்தபோது, "உச்ச நீதிமன்ற உத்தரவின்படி மார்ச் 11-க்குள் தேர்தலை நடத்த வேண்டும் என்பதை தேர்தல் ஆணையம் நினைவுபடுத்தியதை அமைச்சர்களிடம் பகிர்ந்து கொண்டதுடன் தேர்தலை எப்போது நடத்துவது? எப்படி எதிர்கொள்வது? என கேள்வி எழுப்பினார். அப்போது பேசிய வேலுமணி, நடந்து முடிந்த தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க. வெற்றியில் பெரிய வித்தியாசம் கிடையாது. லோக்சபா தேர்தலில் பெரிய அளவில் சறுக்கிய நாம், உள்ளாட்சித் தேர்தலில் அப்படியில்லை என்பதை நிரூபித்திருக்கிறோம். மக்களின் ஆதரவு நமக்கு இருக்கிறது. இந்த வெற்றியை வைத்துக் கொண்டு, 9 மாவட்டங்களுக்கான தேர்தலையும் உடனடியாக நடத்திடலாம். தேர்வுகளுக்கு சிரமம் இல்லாத வகையில் பிப்ரவரி கடைசி வாரத்தில் தேர்தலை நடத்துவது சரியாக இருக்கும்'' என விவரித்துள்ளார்.


அப்போது, "பிப்ரவரியில் தேர்தலை நடத்துவதாக இருந்தால் இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டை தேர்தலுக்கு முன்பாக தாக்கல் செய்திடலாம். லோக்சபா தேர்தலுக்காக கடந்த வருட பட்ஜெட்டை பிப்ரவரி முதல் வாரத்திலேயே தாக்கல் செய்தோமில்லையா? அதுபோல, தேர்தலுக்கு முன்பாக பட்ஜெட்டை தாக்கல் செய்யலாமா?' என யோசிக்கலாம் என ஓ.பி.எஸ். சொல்ல, பிப்ரவரி 28-க்குள் தேர்தலை நடத்தவேண்டுமாயின் ஜனவரி 27-ந் தேதி தேர்தலுக்கான நோட்டிஃபிகேசனை வெளியிட வேண்டும். அப்படியிருக்கையில், அதற்கு முன்பாக பட்ஜெட் தாக்கல் செய்வது சாத்தியமில்லை. மத்திய பட்ஜெட்டே பிப்ரவரி 1-ல்தான் தாக்கலாகிறது. அதனால் தேர்தலை பிப்ரவரி கடையில் நடத்திவிட்டு பட்ஜெட்டை மார்ச்சில் வைத்துக் கொள்வது சரியாக இருக்கும்' என்றிருக்கிறார் தங்கமணி.

 

 

admk



இதற்கிடையே, 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலோடு பேரூராட்சி மற்றும் நகராட்சிகளுக்கான தேர்தலையும் நடத்திடலாம் எனவும் யோசனை சொல்லியிருக்கிறார் வேலுமணி. இது குறித்து இ.பி.எஸ்.சும் ஓ.பி.எஸ்.சும் சில சந்தேகங்களை எழுப்ப, அதற்கும் வேலுமணி பல விளக்கங்களை தெரிவித்துள்ளார். இதனையடுத்து, பிப்ரவரியில் தேர்தலை நடத்த எடப்பாடி சம்மதித்துள்ள நிலையில், மாவட்ட நிர்வாகிகளும் உளவுத்துறையினரும் சொல்வதை வைத்து இறுதி முடிவெடுக்கலாம் என தீர்மானிக்கப்பட்டிருக்கிறது'' என சுட்டிக் காட்டுகிறார்கள் அமைச்சர்களுக்கு நெருக்கமான அ.தி.மு.க. சீனியர்கள்.

அமைச்சர்களிடம் ஆலோசனை நடத்திய கையோடு, நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப் பேட்டை, திருப்பத்தூர், வேலூர் மாவட்ட நிர்வாகிகளிடம் விவாதித்திருக்கிறார் எடப்பாடி. அப்போது, தேர்தலை எதிர்கொள்வது குறித்து பேசிய அவர்களிடம் எடப்பாடி,

"ஊராட்சி மற்றும் ஒன்றியங்களில் மக்களுடன் தொடர்புள்ளவர்கள், சமுதாய வலிமை மிக்கவர்கள், குற்றப் பின்னணி இல்லாதவர்கள் என ஆராய்ந்து சரியான நபர்களுக்கு போட்டியிட வாய்ப்பளியுங்கள். 9 மாவட்டங்களிலும் 80 சதவீத இடங்களை நாம் கைப்பற்றியாக வேண்டும்'' என அட்வைஸ் பண்ணியிருக்கிறார். மேலும், வாய்ப்பளிக்கப்படுபவர்களின் பெயர் மற்றும் அவர்களது முழுமையான அரசியல் விபரங்களையும் அனுப்பி வைக்கவும் நிர்வாகிகளுக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. அந்த தகவல்களை உளவுத்துறையினரிடம் கொடுத்து அவர்கள் தரும் ரிப்போர்ட்டின் அடிப்படையில் முடிவெடுக்கவும் தீர்மானித்துள்ளனர்.


இதற்கிடையே, தேர்தல் நடக்கவிருக்கும் 9 மாவட்டங்களில் நெல்லை, தென்காசியை தவிர மற்ற 7 மாவட்டங்களும் பா.ம.க. கோலோச்சும் வட தமிழகத்தில் இருக்கிறது. அந்த 7 மாவட்டங்களிலும் பா.ம.க.வைத் தவிர தே.மு.தி.க., பா.ஜ.க. கட்சிகளுக்கு சொற்ப அளவில் இடங்களை ஒதுக்கினால் போதும் என மாவட்ட அமைச்சர்களுக்கு எடப்பாடி அறிவுறுத்தியிருக்கிறார்.

தே.மு.தி.க., பா.ஜ.க. கட்சிகளின் வளர்ச்சி தங்களைப் பாதிக்கும் என கருதும் பா.ம.க. தலைமையின் யோசனையின் பேரில் இந்த அறிவுறுத்தலை அமைச்சர்களுக்கு ரகசியமாக சொல்லியுள்ளார் எடப்பாடி. ஆனால், எடப்பாடியின் அந்த ரகசிய உத்தரவை அறிந்துள்ள பா.ஜ.க.வும் தே.மு.தி.க.வும் அதிர்ச்சியடைந்துள்ளன என்கிறார்கள் வடதமிழகத்திலுள்ள அதிமுக மாவட்ட நிர்வாகிகள்.

"வன்னியர், கொங்கு வேளாள கவுண்டர், நாடார், முத்தரையர், அகமுடையார், தேவேந்திர குல வேளாளர் ஆகிய சமூகத்தை ஒருங்கிணைத்து அரசியல் செய்ய திட்டமிட்டு வருகிறது பா.ஜ.க. தலைமை. இந்த நிலையில், வட தமிழகத்தில் கணிசமான இடங்களை பா.ஜ.க.வுக்கு ஒதுக்காமல் எடப்பாடி துரோகம் செய்தால் அதன் விளைவுகளை அடுத்தடுத்து எதிர்கொள்வார்'' என்கிறார்கள் தமிழக பா.ஜ.க.வினர்.