Skip to main content

"தமிழ் என்ற வார்த்தை எங்கிருந்து வந்தது?" - செந்தில்குமரன் பகிரும் தமிழ் வரலாறு! 

Published on 31/05/2021 | Edited on 31/05/2021

 

senthilkumaran

 

நடிகர், இயக்குநர், பாடலாசிரியர், பத்திரிகையாளர் எனப் பன்முகத்தன்மையுடன் இயங்கிவரும் செந்தில்குமரன், நக்கீரன் 360 யூ-டியூப் சேனலில் 'தமிழன் என்றோர் இனமுண்டு' என்ற நிகழ்ச்சி வாயிலாக தமிழ் மொழியின் வரலாறு, தமிழர்களின் வரலாறு, தமிழ் மக்களின் வாழ்வியல் உள்ளிட்ட தமிழ் சார்ந்த பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசிவருகிறார். அந்த வகையில், தமிழ் வரலாறு பேசும் மேடைகள்தோறும் ஒலிக்கிற பழமொழியான 'கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி' என்ற பழமொழிக்கான உண்மையான அர்த்தம் என்ன என்பது குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

தமிழ் வரலாறு குறித்துப் பேசினாலே முதலில் கூறப்படும் பழமொழியான 'கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி' என்ற பழமொழியின் உண்மையான அர்த்தம் என்ன என்பதை அடுத்த பகுதியில் பார்ப்போம் எனக் கூறியிருந்தேன். இந்தப்பகுதியில் அது பற்றி விரிவாகப் பார்க்கலாம். 

 

இலக்கியத்தரவுகளை வைத்து தமிழ் வரலாறு பேசலாமா என்று நமக்குள் எழும் சந்தேகத்திற்கு விடையளிக்கும் விதமாகக் கடந்த பகுதியில் பேசியிருந்தேன்.  'கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி' என்ற பழமொழியையே உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். 15 ஆண்டுகளுக்கு முன்பு சுனாமி என்று புதிதாக ஒரு விஷயத்தை நாம் கேள்விப்பட்டோம்.  வழக்கமாக அமாவாசை, பௌர்ணமி நாட்களில் கடல் அலை அதிகமாக இருக்கும். அன்றைய தினங்களில் மீனவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் கடலுக்குச் செல்வார்கள் அல்லது கடலுக்குச் செல்வதைத் தவிர்த்துவிடுவார்கள். கடல் அலை சீற்றத்தைப் பற்றி நமக்குத் தெரிந்தது இவ்வளவே. ஆனால், 2004இல் நடந்த நிகழ்விற்குப் பிறகு சுனாமி என்றொரு சொல் நமக்கு அறிமுகமாகியது. முதலில் அதை டிசுனாமி என்றுதான் பலபேர் உச்சரித்தார்கள். அதன் பிறகே, அதைச் சுனாமி என உச்சரிக்கவேண்டும் எனக் கற்றுக்கொண்டார்கள். கடலுக்கடியில் பூகம்பம் ஏற்படும்போது அலை சீறி எழுந்துகொண்டு வரும்; அதுவே சுனாமி எனப் படித்தோம். உலகத்திலுள்ள பிற இனங்கள் வேண்டுமானால் சுனாமி என்பதை புது விஷயமாகப் படிக்கலாம். ஆனால், நமக்கு அது புதியதல்ல. ஆழிப்பேரலை என்றொரு வார்த்தை நம்முடைய பண்டைய இலக்கியங்களில் உள்ளது. தமிழ் நிலம் சந்தித்த சுனாமிகள் ஏராளம். கடல் தண்ணீரால் மட்டுமின்றி மொழி ரீதியாக, இன ரீதியாக, பண்பாட்டு ரீதியாக என வஞ்சகச் சுனாமிகளையும் இந்த நிலம் சந்தித்துள்ளது.

 

தமிழ் என்ற வார்த்தை எங்கிருந்து வந்தது? உடுக்கையின் சத்தத்தில் இருந்து உருவானதுதான் தமிழ் என்ற வார்த்தை என ஒருசாரார் கூறுகின்றனர். அதற்கு அவர்கள் சில ஆதாரங்களை முன்வைத்தாலும் அது முழுமையாக ஏற்றுக்கொள்ளும்படி இல்லை. அமிழ்ந்து... அமிழ்ந்து... அமிழ்ந்து.... இந்த அமிழ்ந்து என்ற வார்த்தையில் இருந்துதான் தமிழ் என்ற வார்த்தையே வந்தது என மற்றொருசாரார் கூறுகின்றனர். அதாவது கடலுக்குள் மூழ்கிமூழ்கி எழுந்த நிலப்பகுதி எனத் தமிழ் நிலத்தைக் குறிப்பிடுகின்றனர். இதற்கு இவர்கள் முன்வைக்கும் ஆதாரங்கள் ஏற்றுக்கொள்ளும் படியாகவும் உள்ளன. இன்றைய இமயமலை ஒருகாலகட்டத்தில் கடலாக இருந்தது என்பது மிக ஆச்சரியமான விஷயம். காலமறியப்படாத ஒரு நேரத்தில் உண்டான ஆழிப்பேரலையில் இரு நிலப்பரப்புகள் மோதி அதில் உயர்ந்த பகுதிதான் இன்றைய இமயமலையாக உள்ளது. அதற்கான உதாரணமாக மீன் படிமங்கள் இமயமலையில் இருப்பதாகக் கூறுகிறார்கள். ஒருகாலத்தில் கடலாக இருந்தது இன்று மலையாக உள்ளது. அதாவது இன்று நாம் பார்க்கும் ஒன்று முந்தைய காலங்களில் வேறொன்றாக இருந்துள்ளது. இதை 'கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி' என்ற பழமொழியோடு பொருத்திப்பாருங்கள். கல் தோன்றி மண் தோன்றா காலத்தே என்பது இன்று நாம் பார்க்கும் கல் கல்லாகத் தோன்றாத காலத்தில், இன்று பார்க்கும் மண் மண்ணாகத் தோன்றாத காலத்தில் எனப் பொருள்படும். வாளோடு முன் தோன்றிய மூத்த குடி என்றால் உலகத்தின் பார்வைக்கு வீரத்தோடு முன்னாள் தோன்றிய குடி எனப் பொருள்படும். இந்தப் பழமொழியினுள் அழகான இலக்கிய நயமும் உள்ளது. இந்த இடத்தில் தோன்றா என்பது அசைச்சொல் வகையிலானது. உதாரணமாக தமிழில் 'அசையா நின்றான்' என்பது அவன் அசைந்தான் எனப் பொருள்படுவதைக் கூறலாம். இது புரிந்துகொள்ளவே சிக்கலானதாகவும் குழப்பமானதாகவும் தெரியலாம். இவ்வளவு சிக்கலானதை எப்படி ஆதாரமாக எடுத்துப் பயன்படுத்தமுடியும் என்றுகூட நீங்கள் நினைக்கலாம். எளிமையாகப் புரிந்துகொள்வதென்றால் "இமயமலை இமயமலையாக இல்லாத காலத்தில்..." என எடுத்துக்கொள்ளலாம். இன்றைய இமயமலை அன்று இமயமலையாக இல்லை என்பதை அறிவியல் ஒத்துக்கொண்டுள்ளது. 

 

இதை அடிப்படையாக வைத்து தமிழ் இலக்கியங்களிலிருந்தும் ஆதாரங்களை எடுத்துக்கொள்ளலாம். கடந்த பகுதியில் நான் குறிப்பிட்டதுபோல அதிலுள்ள இலக்கிய நயங்கள் மற்றும் வியந்து ஓதுதலை விடுத்து, எஞ்சியுள்ளவற்றைப் பகுப்பாய்வு செய்து எடுத்துக்கொள்ளலாம்.