Skip to main content

பள்ளி, உறைவிட வசதி, இட்லி, பூரி, சப்பாத்தி இலவசம்! -தீயாய்ப் பரவும் தகவலின் பின்னணி!

Published on 13/06/2020 | Edited on 13/06/2020

 

Free Education - whatsapp Information - investigation

 

போலியான பல வாட்ஸ்-அப் தகவல்கள், ஆண்டுக்கணக்கில், உலக அளவில் பரவியபடியே இருக்கின்றன.  காரணம், அந்தத் தகவல் மிகவும் ஈர்க்கக்கூடியதாக அமைந்திருக்கும். ‘அப்படி ஒரு தகவலாகத்தான் இதுவும் இருக்கும்’ என்றே,  அதைப் படிக்கும்போது சந்தேகம் எழுந்தது. 

அந்தத் தகவல் இதுதான் -

‘முற்றிலும் கட்டணம் எதுவும் இல்லாமல் தமிழ் / ஆங்கில வழியில் 1-ஆம் வகுப்பு முதல் +2 வகுப்புகள் வரை SC, ST, BC, MBC, ஆண் / பெண் மாணவ, மாணவிகள் கல்வி கற்க,  பள்ளியும், உறைவிடமும் கூடிய விடுதி வசதி உள்ளது. அத்துடன் தினந்தோறும் காலை, இரவு ஆகிய இரண்டு வேளையிலும் இட்லி, தோசை, ரவை உப்புமா, கோதுமை உப்புமா, பூரி, சப்பாத்தி, வெண்பொங்கல், லெமன் சாதம், தக்காளி சாதம், ஆகிய உணவுகளும், தினந்தோறும் மாலை வேளையில்  டீ, காபியுடன்  ஸ்னாக்ஸ் , ஒவ்வொரு மாதமும் ரூ 80/= வீதம்,  குளியல் சோப், துணி சோப், தேங்காய் எண்ணெய், ஷாம்பு,  புவுடர் ஆகியவையும் வழங்கப்படும். 

 

Free Education - whatsapp Information - investigationவாரம் ஒருமுறை அசைவம், 10, 11, 12,  ஆகிய வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு வழிகாட்டி (நோட்ஸ்), வருடத்திற்கு 4 ஜோடி பள்ளிச் சீருடையோடு, 2  ஜோடி கலர் டிரஸ்சும், பாய், பெட்ஷீட், தலையணையும்,  தாய் அல்லது தகப்பனார் இல்லாத மாணவ, மாணவிகளுக்கு மாதம் ரூ 2000/= வீதம் அரசு உதவித் தொகையும், மாலை நேரங்களில் யோகா, கராத்தே, சிலம்பாட்டம் போன்ற பயிற்சிகளும், முற்றிலும் கட்டணமில்லாமல் வழங்கப்படும்.

ஆதரவற்றோர், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளோர், தாய், தகப்பனார் இல்லாதோர் ஆகியோருக்கு  முன்னுரிமை வழங்கப்படும். தயவுகூர்ந்து இந்தச் செய்தியை அனைத்து நண்பர்களுக்கும், குருப்களுக்கும் பகிருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

 

Free Education - whatsapp Information - investigationசேர விருப்பமுள்ள மாணவ, மாணவிகள் கீழ் உள்ள அலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.  என்று, விருதுநகர் மாவட்டத்திலுள்ள அந்தக் குழந்தைகள் காப்பக முகவரியோடு, இரண்டு மொபைல் எண்களையும் குறிப்பிட்டிருந்தனர். 

அதிலுள்ள மொபைல் எண்ணைத் தொடர்புகொண்டோம். “வாட்ஸ்-அப் தகவல் உண்மைதான். நான்தான் பெருந்தலைவர் காமராஜர் குழந்தைகள் காப்பகத்தின் நிறுவனர்..” என்று அறிமுகப்படுத்திக் கொண்ட அன்புச்செல்வம், “இந்த ஃபீல்டில் எனக்கு 13 வருட அனுபவம் உண்டு. இங்கே சத்திரரெட்டியாபட்டிக்கு வந்து 3 வருடங்கள்தான் ஆகிறது. அதற்கு முன் வத்திராயிருப்பு பகுதியில் காப்பகம் நடத்தினேன். இங்கே உள்ளூரில் 200 மாணவர்களுடன் காப்பகம் செயல்பட்டு வருகிறது. காப்பக மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக, ஆசிரியர் கூட்டணி நண்பர்களிடம் வாட்ஸ்-அப் மூலம் தகவல் அனுப்பினேன். அதுதான், இந்த அளவுக்கு பரவிவிட்டது. வாட்ஸ்-ஆப்பிலிருந்த போன் நம்பரை பார்த்து இதுவரை 1360 பேர் என்னிடம் பேசிவிட்டார்கள். பதில் சொல்லிச் சொல்லி ஓய்ந்துவிட்டேன்.  வெளிமாவட்டத்தை சேர்ந்த 817 மாணவர்கள்  ‘அட்மிஷன்’ கேட்டிருக்கிறார்கள். இதுவே மிக அதிகம். இனிமேல் யாரும் என்னைத் தொடர்புகொள்ளாமல் இருந்தால் நல்லது.” என்று பெருமூச்சுவிட்டார். தகவல் உண்மையோ, வதந்தியோ, வலைத்தளங்களில் தீயாய்த்தான் பரவிவிடுகிறது.