Skip to main content

தமிழ் சினிமாவிற்கு வரப்பிரசாதம் - ‘சத்திய சோதனை’ விமர்சனம்

Published on 21/07/2023 | Edited on 21/07/2023

 

Sathiya Sothanai Interview 

 

ஒரு கிடாயின் கருணை மனு படம் மூலம் திரையுலகைத் திரும்பி பார்க்க வைத்து கவனம் ஈர்த்த இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில் அடுத்ததாக வெளியாகி இருக்கும் திரைப்படம் சத்திய சோதனை. தன் முந்தைய படம் போல் இந்தப் படமும் ரசிகர்களிடையே கவனம் பெற்றதா?

 

சங்குப்பட்டி என்ற கிராமத்தில் ஒரு கொலை நடக்கிறது. கொலை செய்த நபரை அவர் கை, கழுத்தில் பல சவரன் நகைகளோடு அவரை ஒரு வனாந்தரத்தில் வீசிவிட்டுச் சென்று விடுகின்றனர் கொலைகாரர்கள். அப்போது அந்த வழியே வந்த பிரேம்ஜி, அந்தப் பிணத்தின் மீது இருந்த அவரது வாட்ச், செல்போன் மற்றும் அரை பவுன் நகையை மட்டும் எடுத்துக்கொண்டு சங்குப்பட்டி காவல் நிலையத்தில் வந்து ஒப்படைக்கிறார். வந்த இடத்தில் அவரை போலீஸ்காரர்கள் பிடித்து வைத்துக் கொண்டு மற்ற நகைகள் எங்கே என அவரை விசாரிக்கின்றனர். இதற்கிடையே கொலை செய்த நான்கு பேரும் போலீசில் சரணடைகின்றனர். அப்பொழுது அவர்கள் வாக்குமூலத்தின் படி பிணத்தின் மீது பல சவரன் நகைகள் இருந்தது தெரிய வருகிறது. போலீசின் கவனம் முழுவதும் பிரேம்ஜி பக்கம் திரும்புகிறது. இதையடுத்து அந்த முழு நகைகளையும் திருடியது யார்? அதைப் போலீசார் கண்டுபிடித்தார்களா, இல்லையா? என்பதே இப்படத்தின் மீதிக் கதை.

 

தன் முதல் படத்தில் இதேபோல் ஒரு விபத்து மரணத்தைச் சுற்றி ஒரு கதையை உருவாக்கி அதைத் திறம்படக் கூறி கவனம் பெற்ற இயக்குநர் சுரேஷ் சங்கையா, இப்படத்தில் ஒரு கொலை, அதைச் சுற்றி நடக்கும் நகைத் தேடல் சம்பவத்தை மிக ஜனரஞ்சனமாகவும், அதேசமயம் அதை ரசிக்கும் படியும் கொடுத்து மீண்டும் ஒருமுறை கவனம் பெற்று, கைதட்டலும் பெற்று இருக்கிறார். ஒரு சின்னக் கதையை வைத்துக்கொண்டு ஒரு சிறிய கிராமத்தில் ஒரு ஐந்து ஆறு நடிகர்கள் மட்டுமே இடம்பெறும் வகையில் காட்சிகளை அமைத்து மிகவும் எதார்த்தமாகவும், எளிமையாகவும் காட்சிகளை நகர்த்தி, அதை ஜனரஞ்சகமாகவும் உருவாக்கி, சிறப்பான திரைக்கதை அமைத்திருப்பது இப்படத்திற்கு பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. படம் ஆரம்பித்தது முதல் இறுதி வரை எந்த ஒரு இடத்திலும் அயற்சி ஏற்படாமல் பார்த்துக்கொண்டு தேவையில்லாத டூயட் காட்சிகள், சண்டைக் காட்சிகள் என கமர்சியல் அம்சங்கள் எதையும் சேர்க்காமல் எதார்த்த சினிமாவை மிக எளிமையாகக் கொடுத்து ரசிக்க வைத்து படத்தை கரை சேர்த்துள்ளார் இயக்குநர் சுரேஷ் சங்கையா. இந்த மாதிரியான சின்ன பட்ஜெட் படங்கள் சிறப்பாக எடுக்கப்பட்டு, தமிழ் சினிமாவிற்கு  ஒரு வரப் பிரசாதமாக அமைகிறது.

 

Sathiya Sothanai Interview 

 

பிரேம்ஜிக்கு இந்தப் படம் ஒரு திருப்புமுனையாக அமைய நிறைய வாய்ப்பு இருக்கிறது. ஒரு சிறப்பான சிறிய பட்ஜெட் திரைப்படத்தில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி கவனம் பெற்றிருக்கிறார். இந்தப் படம் இவருக்கு ஒரு நல்ல பெயர் வாங்கிக் கொடுத்திருக்கிறது. வழக்கமான நாயகியாக வந்து செல்கிறார் ஸ்வயம் சித்தா. படத்தில் நீதிபதி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஞான சம்பந்தம் அவர்கள், தனக்குக் கொடுத்த வேலையைச் சிறப்பாகச் செய்து மீண்டும் ஒருமுறை கவனம் பெற்றுள்ளார். இவர் வரும் காட்சிகள் எல்லாம் கலகலப்பாக நகர்ந்து ரசிகர்களிடம் கைதட்டல் பெற்றுள்ளது. சங்குப்பட்டி போலீசாக நடித்திருக்கும் சித்தன் மோகன், செல்வன் முருகன் ஆகியோர் சின்னச் சின்ன டைமிங் காமெடிகள் மூலம் கலகலப்பைக் கூட்டி உள்ளனர். இவர்களின் எதார்த்த நடிப்பு படத்திற்கு பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் லட்சுமி பாட்டி வரும் காட்சிகள் எல்லாம் தன் நடிப்பால் தெறிக்க விட்டிருக்கிறார். குறிப்பாக இறுதிக்கட்ட காட்சிகளில் இவரது எதார்த்த நடிப்பு படத்தை வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் சென்று இருக்கிறது. இவரும் திரையரங்குகளில் கைத்தட்டல் பெறுகிறார். மற்றொரு கிராம போலீசாக வரும் ஹலோ கந்தசாமியும் தன் பங்குக்குச் சிறப்பாக நடித்திருக்கிறார். ஒரு சின்னக் கதாபாத்திரமாகவே இருந்தாலும் படம் முழுவதும் பயணித்து சிறப்பான நடிப்பால் கலகலப்பைக் கூட்டி இருக்கிறார் ஸ்பை ராமர். இவரது கதாபாத்திரம் படத்திற்கு பக்க பலமாக அமைந்திருக்கிறது. மற்றபடி, முக்கிய கதாபாத்திரத்தில் வரும் கர்ண ராஜா, ரேஷ்மா பசுபுலேட்டி, ஹரிதா, பாரதி, முத்து பாண்டி ஆகியோர் அவரவர் வேலையை நிறைவாக செய்திருக்கின்றனர்.

 

தீபன் சக்கரவர்த்தி இசையில் ஐயப்ப சாமி பாடல் கவனம் பெற்று இருக்கிறது. அந்தப் பாடலை எழுதிய வேல்முருகன் மிகச் சிறப்பாக எழுதி அவரும் கவனம் பெற்றுள்ளார். ஆர்வி சரண் ஒளிப்பதிவில் போலீஸ் நிலைய சம்பந்தப்பட்ட காட்சிகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

 

ஒரு சிறிய கதையை வைத்துக்கொண்டு ஒரு காவல் நிலையம், அதில் ஒரு பெண் போலீஸ், இரண்டு ஆண் போலீஸ், ஒரு இன்ஸ்பெக்டர், ஒரு பாட்டி, ஒரு இன்பார்மர், ஒரு நாயகன், நான்கு கைதிகள் என இவர்களை மட்டுமே வைத்துக் கொண்டு இரண்டரை மணி நேரப் படத்தை மிக எதார்த்தமாகவும், சிறப்பாகவும், அதே சமயம் ஜனரஞ்சகமாகவும், நகைச்சுவையாகவும் கொடுக்க முடியும் என்று நிரூபித்து, ஒரு கலகலப்பான படத்தைக் கொடுத்து கவனம் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குநர் சுரேஷ் சங்கையா. குறிப்பாக, வெறும் திரைக்கதை மற்றும் வசனங்களை வைத்து ஒரு படத்தை கவனம் பெறச் செய்து ரசிகர்களை ஈர்க்க வைக்க முடியும் என்று சத்திய சோதனை படம் நிரூபித்து இருக்கிறது.

 

சத்திய சோதனை - சோதனை அல்ல சிறப்பு!

 

 

சார்ந்த செய்திகள்