Skip to main content

கேரளாவிற்கு திரும்பி நினைத்ததை சாதித்தாரா? - ‘எல்2; எம்புரான்’ விமர்சனம்

Published on 29/03/2025 | Edited on 29/03/2025
mohanlal prithviraj L2E Empuraan review

பிரித்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் லூசிபர் திரைப்படம் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி மலையாள சினிமாவில் மிகுந்த வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி பெற்றது. தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகமாக இந்த லூசிபர் 2 எம்புரான் திரைப்படம் வெளியாகி இருக்கிறது. ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி இருக்கும் இத்திரைப்படம் போதிய வரவேற்பு பெற்றதா, இல்லையா? 

முதல் பாகத்தில் கட்சியை டோவினோ தாமஸிடம் கொடுத்துவிட்டு வெளிநாட்டுக்கு மோகன்லால் சென்று விடுவது போல் படம் முடியும். இந்த பாகத்தில் குஜராத் கலவரத்தில் ஒரு அரண்மனைக்காக ஒரு குடும்பத்தையே பாரபட்சம் இன்றி கொடூரமாக கொலை செய்கிறார் வில்லன் அபிமன்யூ சிங் குரூப். அதிலிருந்து சிறுவயது பிரித்விராஜ் மட்டும் தப்பித்து விடுகிறார். அதேசமயம் கேரளாவில் ஐயூஎஃப் கட்சி முதல்வராக இருக்கும் டொவினோ தாமஸ் அந்தக் கட்சியை விட்டு விலகி ஒரு புதிய கட்சியை ஆரம்பித்து தேசிய அளவில் தலைவர் ஆவதற்காக வில்லன் அபிமன்யு சிங் உடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டி போட முடிவு எடுக்கிறார்.

mohanlal prithviraj L2E Empuraan review

இதனால் அவரது சகோதரி மஞ்சு வாரியர் உட்பட கேரள மக்கள் மற்றும் கட்சிக்காரர்கள் அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாகின்றனர். அதோடு அவரது சகோதரி மஞ்சு வாரியரையும் ஐயூஎஃப் கட்சிக்கு வரவிடாமல் தடுக்கிறார். இந்த விஷயம் வெளிநாட்டில் மிகப்பெரிய டானாக இருக்கும் மோகன்லாலுக்கு தெரிய வர அவர் மர்மமாக கேரளாவுக்கு வருகிறார். வந்த இடத்தில் டொவினோ தாமஸுக்கு பாடம் புகட்டினாரா, இல்லையா? மஞ்சு வாரியரை கட்சியை காப்பாற்ற அனுப்பினாரா, இல்லையா? வில்லன் அபிமன்யு சிங்கை பிரித்விராஜ் பழி வாங்கினாரா, இல்லையா? என்பதே இந்த லூசிபர் 2 எம்ரான் படத்தின் மீதி கதை. 

முதல் பாகத்தைப் போலவே இந்த படத்தையும் ஒரு விறுவிறுப்பான ஹாலிவுட் பட ரேஞ்சில் இயக்கி ரசிகர்களுக்கு விருந்து அளித்திருக்கிறார் இயக்குநர் நடிகர் பிரித்விராஜ். முதல்முறையாக மலையாள சினிமாவில் இருந்து உலக தரத்தில் ஒரு பிரம்மாண்ட திரைப்படமாக இந்த எம்புரான் படம் அமைந்திருக்கிறது. முதல் பாதி படம் ஆரம்பித்து விறுவிறுப்பாக ஹாலிவுட் தரத்தில் செல்கிறது. இரண்டாம் பாதி சற்றே ஆரம்பித்து பிளாஷ்பேக் காட்சிகள் மூலம் வேகம் குறைந்து போகப் போக இறுதி கட்ட காட்சிகளில் மீண்டும் வேகம் எடுத்து மூன்றாம் பாகத்திற்கான லீடோடு படம் முடிகிறது. மோகன்லால் ஸ்கிரீன் பிரசன்ஸ் படம் முழுவதையும் ஆர்ப்பரித்து ரசிகர்களையும் ஆர்ப்பரிக்க வைக்கிறது. கதையாக பார்க்கும் பட்சத்தில் படம் ஆரம்பத்தில் பலருக்கும் சற்றே குழப்பமாக இருந்தாலும் போகப் போக புரியும்படி அமைந்து பார்ப்பவர்களை படத்தோடு ஒன்ற வைத்து நல்ல ஹாலிவுட் தர படத்தைப் பார்ப்பது போல் ஒரு உணர்வை தந்திருக்கிறது. 

mohanlal prithviraj L2E Empuraan review

வழக்கம்போல் தனது மாஸான நடிப்பை அமைதியான முறையிலும் அதிரடியான முறையில் சிறப்பாக காட்டியிருக்கிறார் மோகன்லால். அவரை எந்தெந்த இடங்களில் எப்படி எல்லாம் பயன்படுத்த வேண்டுமோ அப்படி எல்லாம் பயன்படுத்தி சிறப்பான பங்களிப்பை கொடுத்திருக்கிறார் இயக்குநர் நடிகர் பிரித்விராஜ். அவரும் தன் பங்குக்கு மோகன்லாலோடு இணைந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். குறிப்பாக ஸ்டண்ட் காட்சிகளில் மோகன்லால் மட்டும் பிரித்விராஜ் ஆகியோர் சிறப்பாக நடித்து தியேட்டரில் விசில் சத்தம் அதிகரிக்க செய்து இருக்கின்றனர். அழுத்தமான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி காட்டியிருக்கிறார் நடிகை மஞ்சு வாரியர்.

சில காட்சிகளே வந்தாலும் சானியா அயப்பன் மனதில் பதிகிறார். ஆரம்ப கட்டக் காட்சிகளில் பார்ப்பவர்களுக்கே பயம் ஏற்படுத்தும் படியான கொடூர வில்லத்தனம் காட்டும் அபிமன்யூ சிங் போகப் போக வழக்கமான வில்லத்தனம் காட்டி சென்று விடுகிறார். துடுக்கான இளைஞராக வரும் டொவினோ தாமஸ் ஆரம்பத்தில் அதிரடி காட்டி பிறகு அண்ணனிடம் சரணடைந்து விடுகிறார். முக்கிய பாத்திரத்தில் வரும் கிஷோர், சூராஜ் வெஞ்சரமுடு, இந்திரஜித் சுகுமாரன் ஆகியோர் அவரவர் வேலையை சிறப்பாக செய்திருக்கின்றனர். மற்றபடி உடன் நடித்த அனைத்து நடிகர்களுமே அவரவர் வேலையை சிறப்பாக செய்து படத்திற்கு பெரும் பங்களிப்பு சேர்த்திருக்கின்றனர். 

mohanlal prithviraj L2E Empuraan review

சுஜித் வாசுதேவன் ஒளிப்பதிவில் படம் ஹாலிவுட் தரம். குறிப்பாக ஸ்டன்ட் காட்சிகள் மிக மிக உலக தரம் வாய்ந்ததாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இவரது கேமரா கோணங்கள் படத்தை வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. தீபக் தேவின் இசையில் பாடல்களை காட்டிலும் பின்னணி இசை மாஸ். ஒரு உலகத்தரம் வாய்ந்த படத்திற்கு எந்த மாதிரியான இசை வேண்டுமோ அதை சிறப்பாக கொடுத்து இருக்கிறார். 

படம் ஆரம்பித்து கதை எங்கெங்கெல்லாமோ பயணித்து வேறு வேறு திசையில் சென்று படம் புரிவதற்கு சிறிது நேரம் எடுத்துக் கொண்டாலும் போகப்போக விறுவிறுப்பாக காட்டி ரசிகர்களை சீட்டின் நுனிக்கு வர வைத்து இருக்கிறது. இருந்தும் படத்தின் நீளத்தை சற்றே குறைத்து இருக்கலாம். அதேசமயம் இரண்டாம் பாதியில் வரும் வேகத்தடை மிக்க அயற்சி ஏற்படுத்தும் காட்சிகளில் இன்னும் கூட கத்தரி போட்டு இருக்கலாம். மற்றபடி மோகன்லால் ஸ்கிரீன் ப்ரெசென்ஸ் மற்றும் பிரித்விராஜின் பிரம்மாண்ட இயக்கம் என படம் முழுவதும் நம்மை படத்தோடு ஒன்ற வைத்து ஒரு ஹாலிவுட் படம் பார்த்த உணர்வை இந்த எம்புரான் படம் கொடுத்திருக்கிறது.

எம்புரான் (லூசிபர் 2) - உலகத்தரம்!

சார்ந்த செய்திகள்