மனித மூளையில் சிப் பொருத்தி அதை தொழில்நுட்பத்துடன் இணைக்கும் ஒரு ஆராய்ச்சியை தன்னுடைய நியூராலிங்க் எனும் நிறுவனத்தின் மூலம் செய்து வருகிறார் எலான் மஸ்க்.
இது குறித்தான ஆராய்ச்சிகள் பல ஆண்டுகளாகவே நடந்து வருகின்றன. இதன் மூலம் பிறவியிலேயே நரம்பியல் பிரச்சனைகள் உள்ளவர்கள் மற்றும் பின்னாட்களில் விபத்தினால் நரம்பியல் அமைப்பு பாதிக்கப்பட்டு செயல்பட முடியாமல் இருப்பவர்களுக்கு இந்தக் கண்டுபிடிப்பானது பெரிதும் பயனுள்ள வகையில் இருக்கும் எனக் கூறப்படுகிறது. தற்போது இந்த ஆராய்ச்சியானது அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி முதல்முறையாக பன்றியின் மூளையில் ஒரு கணினி சிப்பை பொறுத்தி, அதனுடைய நரம்பியல் செயல்பாடுகள் கணினி மூலம் பதிவு செய்யப்பட்டன. அந்தப் பன்றிக்கு எலான் மஸ்க் கெர்ட் ரூட் எனப் பெயரிட்டுள்ளார்.
கெர்ட் ரூட் எனப் பெயரிட்ட இந்தப் பன்றியின் முன் ஒரு குவளையில் உணவு வைக்கப்பட்டது. அதைப் பன்றி பார்க்கும் போது அதன் நரம்பியல் அமைப்பில் ஏற்படும் மாற்றத்தை அந்த சிப் அனுப்பும் சிக்னல்கள் மூலம் ஒரு கணினியில் பதிவு செய்து தன்னுடைய எதிர்காலத் திட்டத்தின் தற்போதைய நிலையை வெளிஉலகிற்கு காட்டியுள்ளார். இது குறித்து எலான் மஸ்க் கூறும் போது, "இனி வரும் காலத்தில் செயற்கை நுண்ணறிவு மனித குலத்திற்கே எதிரான ஒன்றாக மாறிவிடும். அதனைத் தடுக்க நமக்கு இது பயன்படும்" என்றார்.