
பல்லாவரத்தில் பெண் ஒருவர் கல்லால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை பல்லாவரம் அருகேயுள்ள அனகாபுத்தூர் அருள் நகர் மூன்றாவது தெருவைச் சேர்ந்தவர் பாக்கியலட்சுமி (33). இரண்டு குழந்தைகளுக்கு தாயான பாக்கியலட்சுமி கணவருடன் அடிக்கடி ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 11 மாதங்களுக்கு முன்பு விவாகரத்து பெற்று இரண்டு குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார்.
இந்நிலையில் அவர் வசித்து வந்த பகுதியில் தனியார் தண்ணீர் டேங்கர் லாரியில் பணியாற்றி வந்த ஞானசித்தன் என்பவருக்கும் பாக்யலட்சுமிக்கும் இடையே முறையற்ற தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று சித்தன் பாக்கியலட்சுமி வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது பாக்கியலட்சுமி வேறு ஒரு நபருடன் செல்போனில் பேசி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் சந்தேகம் அடைந்த ஞான சித்தன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் ஏற்பட்ட தகராறில் வீட்டில் இருந்த கடப்பா கல்லை எடுத்து பாக்கியலட்சுமி தலையில் போட்டு கொலை செய்துள்ளார்.
இரண்டு குழந்தைகளையும் வேறொரு அறையில் வைத்து பூட்டி விட்டு அருகில் இருந்த சங்கர் நகர் காவல் நிலையத்தில் ஞான சித்தன் கொலை செய்துவிட்டதாக சரண் அடைந்துள்ளார். அதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட வீட்டிற்கு சென்ற போலீசார் பாக்கியலட்சுமியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து கொலையில் ஈடுபட்ட ஞான சித்தனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.