Skip to main content

விஜயைப் பற்றி நாங்கள் பேசி, அவருடைய படத்தை ஓடவைக்க வேண்டுமா என்று பார்க்கிறேன்... -தமிழிசை சௌந்தரராஜன்

Published on 05/10/2018 | Edited on 05/10/2018
vijay tamilisai

 

நேற்று பாஜகவின் தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது,
 

யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். போட்டிக்கு வாருங்கள். நாங்கள் ரெடியாக இருக்கிறோம். நீங்க ரெடியா? தாராளமாக வரட்டும். அரசியல் களம் எப்படி இருக்கும் என்பதைத் தெரிந்துகொள்ளட்டும். நடிப்பதற்கும் இதற்கும் எவ்வளவு மாறுபாடுகள் இருக்கின்றன என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்துகொள்ளட்டும்.
 

ஆனால், முதல்வராக இருந்தவர்களெல்லாம் நடித்தார்கள் என்பது போல் விஜய் பேசியிருப்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதே அல்ல. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இன்றைக்கு திரைத்துறையில் இருந்து வருபவர்கள் எல்லோரும் அரசியல்வாதிகளுக்கு எதுவுமே தெரியாது என்பது போல பேசுகிறார்கள், இவர்கள் அந்தக் கேமிராவுக்கு முன்பாக பழக்கப்பட்டவர்கள், இப்போது மீடியா கேமிராவுக்கு முன்பாகவும் பழக்கமாகிக் கொள்கிறார்கள். எல்லா அரசியல்வாதிகளும் திறமையானவர்கள்தான்.
 

கமல்ஹாசன் கூறுகிறார், முழு நேர அரசியல்தேவையில்லை என்று. அவரவர்கள் அவரவர் சூழலுக்குத் தகுந்தபடி சொல்லிக்கொள்கிறார்கள். சினிமா சான்ஸ் கிடைக்கவில்லையென்றால் முழு நேர அரசியல். சினிமாவில் சான்ஸ் கிடைத்துவிட்டால், பகுதி நேர அரசியல் என்று மாற்றி, மாற்றி கூறுகின்றனர். நடிகர்கள் அரசியலிலும் நடித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள், ஆனால் அரசியல்வாதிகள் நடிப்பதில்லை. இதுவரை இருந்த முதல்வர்கள் எல்லாருமே, தமிழகத்துக்கு நல்லதுதான் செய்திருக்கிறார்கள். இனிமேல் ஒருவர் வந்துதான் முன்னுதாரணமாக இருக்கவேண்டும் என்று அவசியமில்லை. படம் வெளியாக உள்ள நிலையில் விஜயைப் பற்றி நாங்கள் ஏதாவது பேசி, அவருடைய படத்தை ஓடவைக்க வேண்டுமா என்று பார்க்கிறேன்.
 

சர்க்கார் படத்தின் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது தொடர்பாக பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்துவருகின்றனர். தமிழிசையும் இதுகுறித்து தனது கருத்தை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

சார்ந்த செய்திகள்