
சென்னையில் வேளச்சேரி, கிண்டி, பல்லாவரம், பம்மல், குரோம்பேட்டை, ஆலந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருகிறது. ஐந்து பரலாங் சாலையில் அதிகமான மழை பெய்த நிலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பொழிந்து வருகிறது.
சென்னை மட்டுமல்லாது தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் மழை பொழிந்து வருகிறது. செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம், கல்பாக்கம், திருப்போரூர் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பொழிந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் வண்டிமேடு, பிடாகம், முண்டியம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பொழிந்து வருகிறது. கள்ளக்குறிச்சியில் உளுந்தூர்பேட்டை, எறையூர், வடக்குறும்பூர், ஆசனூர், பில்ராம்பட்டி, சிவகங்கையில் காரைக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது.
புதுக்கோட்டையில் பொன்னமராவதி, திருமயம், அரிமளம் உள்ளிட்ட பகுதிகளிலும் திண்டுக்கல்லில் ஆர்.எம்.காலனி, நாகல் நகர், மணிக்கூண்டு, என்ஜிஓ காலனி மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பொழிந்து வருகிறது.
இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி அடுத்த மூன்று மணி நேரத்தில் அதாவது காலை 10 மணி வரை 20 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், ராணிப்பேட்டை, வேலூர், சேலம், திண்டுக்கல், மதுரை, தேனி, மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய 20 மாவட்டங்களில் மழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மதுரை மாவட்டத்தில் 6.3 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் 5.1 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.