Skip to main content

"வில் வித்தை பயிற்சியாளர் முதல் திகார் சிறை அனுபவம் வரை" - ஷிஹான் ஹுசைனியின் பயணம்!

Published on 25/03/2025 | Edited on 25/03/2025
Shihan Hussaini life and his achievements

ஷிஹான் ஹுசைனி... இந்த பெயரைக் கேட்டதும் பலரும் எதோ சைனீஸ் பெயர் போல் இருக்கிறது என்று யோசிப்பர். ஆனால் அது நம்ம மதுரை ஊர்க்காரரின் பெயர். ஷிஹான் என்றால் மாஸ்டர் என்று பொருள். கராத்தேவில் மாஸ்டராக இருப்பதால் அவரது பெயர் அப்படி மாறி விட்டதாக தெரிகிறது. அவரது முழுப் பெயர் சையத் அலி முர்துசா ஹுசைனி. பின் நாளில் ஷிஹான் ஹுசைனியாக மாறிவிட்டது. கராத்தே மட்டுமல்லாது தற்காப்பு கலை, வில்வித்தை, இசை, ஓவியம் என பல்வேறு துறைகளில் தனது ஈடுபாட்டை செலுத்தி பன்முகக் கலைஞராக இருந்துள்ளார். 

தமிழகத்தில் நவீன வில்வித்தைக்கு முன்னோடியாக இருந்துள்ளவர் இவர்தான். தான் மட்டும் கற்றுக் கொள்வதை விட அடுத்த தலைமுறையினருக்கும் அதை எடுத்து செல்ல வேண்டும் என்ற நோக்கில் கராத்தே மற்றும் வில்வித்தை பயிற்சி கூடம் ஒன்றை ஆரம்பித்து அதன் மூலம் 400-க்கும் மேற்பட்ட வில்வித்தை வீரர்களுக்கு பயிற்சி அளித்து வளர்த்தெடுத்தார். அதோடு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தனது பயிற்சியை மாணவர்களுக்கு சொல்லி கொடுத்து வந்தார்.  

Shihan Hussaini life and his achievements

இப்படி தற்காப்பு கலை மற்றும் வில்வித்தையில் தேர்ச்சி பெற்ற இவர், கே.பாலச்சந்தர் - கமல் கூட்டணியில் வெளியான ‘புன்னகை மன்னன்’ படம் மூலம் நடிகராக அறிமுகமானார். அவரது கராத்தே வேகத்தை போல் படங்களும் வேகமாக அடுத்தடுத்து அவருக்கு அமைந்தது. ஆனால் அது ரொம்ப தூரம் போகவில்லை. ஆனால் நடித்த சொற்ப படங்களிலே ரஜினி(வேலைக்காரன்), கமல் என முன்னனி நாயகர்களோடு நடித்தார். குறிப்பாக ரஜினி நடித்த ஒரே ஆங்கில படமான ‘பிளட்ஸ்டோன்’(Bloodstone) படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனிடையே விஜய்யின் பத்ரி படத்தில் அவருக்கு பயிற்சி கொடுக்கும் ஆசிரியராக நடித்து ரசிகர்கள் மத்தியில் இன்னும் பிரபலமடைந்தார்.

அதன் பிறகு சினிமா பக்கம் தலைகாட்டாமல் இருந்தார். ஆனால் உயிரைக் காக்க உதவும் தற்காப்பு கலைகளில் ஈடுபட்டு வந்தார். பின்பு நீண்ட இடைவெளிக்குப் பிறகு விக்னேஷ் சிவன் - விஜய் சேதுபதி கூட்டணியில் வெளியான ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடித்திருந்தார். இதனிடையே 2022ஆம் ஆண்டு தனித் திறமையைக் காட்டும் நிகழ்ச்சி ஒன்றில் ஜட்ஜாக இருந்தார். அதற்கு முன்னதாக ‘அதிரடி சமயல்’ என்ற தலைப்பில் சமயலை அதிரடியாக செய்திருந்தார். இது பார்வையாளர்களுக்கு ரசிக்கும்படியாக அமைந்தது. 

Shihan Hussaini life and his achievements

தனது திறமையை சினிமாவிலும் தொலைக்காட்சியிலும் காட்டி கவனம் பெற்ற அவர், அதை தனது அரசியல் நிலைப்பாட்டிலும் தொடர்ந்தார். அ.தி.மு.க.வின் முன்னாள் பொதுச்செயலாளரும் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியான இவர் 2005 ஆம் ஆண்டு, ஜெயலலிதாவின் 56 வது பிறந்தநாளை முன்னிட்டு தனது சொந்த இரத்தத்தைப் பயன்படுத்தி 56 ஜெயலலிதா உருவப்படங்களை வரைந்தார். பின்பு 2013 ஆம் ஆண்டில், தனது சொந்த இரத்தம் உட்பட மற்ற வில்வித்தை வீரர்களின் 11 லிட்டர் இரத்தத்தைப் பயன்படுத்தி ஜெயலலிதாவின் மார்பளவு சிலையை உருவாக்கினார். இது பெரும் சர்ச்சையை உருவாக்கியது.

பின்பு ஜெயலலிதா ஷிஹான் ஹுசைனியை அழைத்து இது போன்ற செயல்களில் ஈடுபடாதீர்கள் என அறிவுரை வழங்கினார். இருப்பினும் அதை விட அடுத்தபடியாக 2015ஆம் ஆண்டு ஜெயலலிதா பதவி இழந்த நேரத்தில், அவரை மீண்டும் ஆட்சியில் அமரவைக்க வேண்டும் என 300 கிலோ எடையுள்ள மர சிலுவையில் தனது கைகளையும் கால்களையும் ஆணி அடித்துக் கொண்டு 6 நிமிடங்கள் 7 வினாடிகள் சிலுவை நின்றார். இது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. இந்த செயல்கள் எல்லாம் வினோதமாக தெரிந்தாலும் இது போன்ற செயல்களை தனது தற்காப்பு கலைகளில் காட்டி சாதனை படைத்துள்ளார். 

ரியோ ஒலிம்பிக்கில் கொரிய வில்வித்தை அணிக்கு மனப் பயிற்சியாளராக பணியாற்றியுள்ளார். அந்த போட்டியில் கொரிய வில்வித்தை அணி பங்கேற்ற அனைத்து பிரிவிகளிலும் தங்கப் பதக்கம் வென்றது. ஒரு முறை தனது வலது கையின் மேல் 101 கார்களை ஓட வைத்து பின்பு அதே கையால் 5,000 ஓடுகள் மற்றும் 1,000 செங்கற்களை உடைத்தார். 140 லிட்டர் பெட்ரோல் ஊற்றப்பட்டு எரிக்கப்பட்டு மீண்டுள்ளார். 4 விஷ நாகப்பாம்புகளால் கடிக்கப்பட்டு உயிர் பிழைத்துள்ளார். மேலும் தனது நெற்றியில் டன் கணக்கில் பனியை அடித்து நொறுக்கினார். இது போன்று உடலை வருத்திக்கொள்ளும் பல சாதனைகளை அவர் படைத்துள்ளார்.

தமிழகத்தில் வில்வித்தையில், ‘ரீகர்வ் வில் (1979)’, ‘காம்பவுண்ட் வில் (1980)’ ஆகியவற்றை அறிமுகப்படுத்தியவரும் ஷிஹான் ஹுசைனி தான். 6 உலக வில்வித்தை சான்றிதழ்களைக் கொண்ட உலகின் ஒரே வில்வித்தை நிபுணரும் இவர்தான். தமிழ்நாடு வில்வித்தை சங்கத்தின் நிறுவனர் மற்றும் பொதுச் செயலாளராக பொறுப்பு வகித்தார். அப்போது 7000க்கும் மேற்பட்ட வில்வித்தை வீரர்களுக்கு பயிற்சி கொடுத்துள்ளார். மேலும் அதில் பயிற்சி பெற்ற மாணவர்கள் உள்விளையாட்டு வில்வித்தையில் 4 உலகக் கோப்பைகளை வென்றுள்ளனர். இவர் சென்னை அரசு நுண்கலைக் கல்லூரியில் முதுகலைப் பட்டம் பெற்றவர் என்பது கூடுதல் தகவல்.  

சாதனைகள் போல் சில சர்ச்சைகளிலும் சிக்கியுள்ளார். 1980களின் பிற்பகுதியில், அவர் ஒரு இலங்கை போராளி என்று பொய்யாகக் குற்றம் சாட்டப்பட்டு திகார் சிறையில் 10 நாட்கள் அடைக்கப்பட்டார். அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திய அவர் 'திகார் ரிட்டர்ன் ஹுசைனி' என்ற தலைப்பில் ஒரு கலை கண்காட்சியை நடத்தினார். தனக்கு எது வருமோ அதில் உறுதியாக நின்ற ஷிஹான் ஹுசைனி அதை தனது ஆர்வத்துக்கு பயன்படுத்தி அதன் மூலம் பலரது கவனத்தை ஈர்த்தார். ஆனால் சமீப காலமாக ரத்த புற்றுநோயால் அவதிப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது சிகிச்சைக்கு இடைவெளியில் படுத்தபடியே வீடியோ வெளியிட்டு நம்பிக்கையிடன் திரும்பி வருவதாக கூறியிருந்தார்.

மேலும் விஜய்யிடம், அவர் தமிழகம் முழுவதும் வீட்டுக்கு ஒரு வில்வித்தை வீரர், வீராங்கனையை உருவாக்க வேண்டும் என வீடியோ வழியாக கோரிக்கை வைத்தார். ஆனால் தொடர் சிகிச்சையில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதற்கு முன் தனது உடலை தானம் செய்யவுள்ளதாக தெரிவித்து தனது இதயத்தை மட்டும் அவரது வில்வித்தை, கராத்தே மாணவர்களிடம் பாதுகாப்பதற்காக ஒப்படைக்குமாறு கேட்டுக்கொண்டார். இது அம்மாணவர்களை நெகிழ்ச்சியடையச் செய்தது. மண்ணை விட்டு மறைந்தாலும் அவரது சாதனைகளும் முன்னெடுப்புகளும் அவரது மாணவர்கள் மத்தியில் நீங்காது நிலைத்து நிற்கும்.