Skip to main content

நான்கு வகையான ஆண்டு கணக்கு; தமிழ் எண்ணில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு கண்டுபிடிப்பு!

Published on 25/03/2025 | Edited on 25/03/2025

 

inscription engraved with four types annual accounts Tamil numerals

புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை நகரில் அமைந்துள்ள நைனாராஜூ தண்டாயுதபாணி கோவிலில் பராமரிப்பு பணியின் போது வெளிப்பட்ட  கல்வெட்டு குறித்து ஜே.பி.ஆர்.பெல் , தொல்லியல் ஆய்வுக் கழக உறுப்பினர் இளங்கோ ஆகியோர் அளித்த தகவலைத் தொடர்ந்து புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தினர் ஆய்வு செய்தனர். அக்கல்வெட்டில் தமிழ் எண்களில் சக ஆண்டு,  கலியுக ஆண்டு, தமிழ் ஆண்டு, ஆங்கில ஆண்டு ஆகிய நான்கு வகையான ஆண்டு கணக்குகள் குறிக்கப்பட்டுள்ளதை கண்டறிந்துள்ளனர்.

இதுகுறித்து புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வு கழகத்தின் நிறுவனர், மங்கனூர் ஆ.மணிகண்டன் கூறியதாவது; கடந்த நூற்றாண்டு வரை தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும், பொதுமக்களின் அன்றாட வாழ்வில் தமிழ் எண்களே பிரதானமாக பயன்பாட்டில் இருந்துள்ளதை தமிழ் எண் மைல் கற்கள் கண்டுபிடிப்பின் மூலம் உறுதி செய்துள்ளோம். இக்கருத்திற்கு வலுசேர்க்கும் விதத்தில், தண்டாயுதபாணி கோவிலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இக்கல்வெட்டு 1858 ஆம் ஆண்டு வரை, தமிழ் எண்களே  பொதுமக்களின் பயன்பாட்டில் இருந்தது வந்துள்ளதை  உறுதி செய்கிறது.

கல்வெட்டு செய்தி: 

ஶ்ரீ உ உ சமபெடி துலோதபவறான வேங்கமறாஜா கட்டியிருந்த விக்கினேசுவறர் கோவில் மண்டபத்தின் மேலனூதன விமானமும் மகா மண்டப கோபுறங்களும் ஆஞ்சனேயாலயும் பிரதிஷையும் சுயம்பாகசாலை திருமதிள்  கூபம் முதலான திறுப்பணியள் ஷே வேங்கமறாஜா பவுத்தரறான கோவிந்தறாஜா  புத்தரறான னாயனன் றாஜானால்  சாலீவாகன வருஷம் 1777 கலியுகதி வருஷம் 4956 இச்சறியான இராக்ஷச வருஷம் வய்யாசி மாஷைத்தியில் செய்த தந்மம் . 1855 வருஷம் மே மாதம்  ஸ்தாபித்தது  உ . 1858 வருஷம் காளயுக்தி வருஷம் அற்பிசி. ஶ்ரீ தேண்டாயுத பாணி சுவாமி பிறதிஷ்ஷை என்று பொறிக்கப்பட்டுள்ளது.

நான்கு வகை ஆண்டு கணக்குகள்:

கல்வெட்டில் சக ஆண்டு 1777, கலியுகத்தில் 4956, தமிழாண்டில் இராக்ஷச வருடம் வைகாசி மாதம் , ஆங்கில வருடம் 1855 மே மாதம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் கல்வெட்டு பொறிக்கக்கப்பட்ட காலத்தில் நான்கு வகையான ஆண்டு கணக்குகள் நடைமுறையில் இருந்துள்ளதை அறிய முடிகிறது.

கல்வெட்டில் பொறிக்கப்பட்ட தகவல்:

வேங்கமராஜா  என்பவர் கட்டியிருந்த விக்னேஸ்வரர் கோவில் மண்டபத்தின், மேல நூதன விமானம், மகா மண்டப கோபுரங்கள்,ஆஞ்சனேயர் ஆலயம் ஆகியவற்றை புதிதாக  கட்டுமானம் செய்து விரிவாக்க பணிகளை வேங்கமராஜா என்பவரின் பேரனும் , கோவிந்தராஜா என்பவரின் மகனுமான நாயனன் (நைனா ராஜா) என்பவர் 1855 பொ.ஆண்டு,  தமிழாண்டில் இராக்ஷச வருடம் வைகாசி மாதம் தொடங்கி, சுயம்பாகசாலை , கோவில்  மதிள் , கூபம் எனும் கிணறு ஆகியவற்றுடன்,  1858  ஆண்டு காளயுக்தி வருஷம் ஐப்பசி மாதம் தண்டாயுதபாணி கோவில் கட்டுமானத்துடன் சிலைகள் நிறுவி   நிறைவு செய்ததை இக்கல்வெட்டு பதிவு செய்துள்ளது. தற்போதும் இக்கோவிலை காட்டிய நைனா ராஜா என்பவரின் பெயரால் நைனா ராஜூ தண்டபாணி கோவில் என்றே அழைக்கப்படுகிறது.

கல்வெட்டில் மன்னரின் பெயர் குறிப்பிடப்படவில்லை என்றாலும் இந்த கல்வெட்டு பொறிக்கப்பட்ட காலத்தில்  ராமச்சந்திர தொண்டைமான் (1839-1886 ) புதுக்கோட்டை சமஸ்தான மன்னராக இருந்துள்ளார் என்பது  குறிப்பிடத்தக்கது. 

ஆய்வின் போது தொல்லியல் ஆய்வுக்கழகத்தின் ஒருங்கிணைப்பாளர்  கஸ்தூரிரங்கன், துணைச்செயலர் மு.முத்துக்குமார், உறுப்பினர் மா.இளங்கோவன்  கோவில் குழுவினர்  சுந்தர்ராஜன், திரு கோகுல்,  விஜயா, சூர்யா, உடனிருந்தனர் .

சார்ந்த செய்திகள்