
கூட்டாட்சி தத்துவத்தைக் காக்க போராட வேண்டியுள்ளது எனக் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது அகில இந்திய மாநாடு மதுரையில் நடைபெற்று வருகிறது. நேற்று (02.04.2025) தொடங்கிய இந்த மாநாடு ஏப்ரல் 06ஆம் தேதி (06.04.2025) வரை நடைபெற உள்ளது. அந்த வகையில் இன்று (03.04.2025) ‘கூட்டாட்சிக் கோட்பாடே இந்தியாவின் வலிமை’ என்ற தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கம் இன்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மத்தியக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத், செயற்குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், கர்நாடக மாநில உயர் கல்வித்துறை அமைச்சர் எம்.சி. சுதாகர், சு. வெங்கடேசன் எம்.பி. எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் பேசுகையில், “1980ஆம் ஆண்டு காலவாக்கில் அமைக்கப்பட்ட சர்க்காரிய ஆணையம் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். நம் நாட்டு அரசியல் ஒற்றைத் தன்மையை நோக்கிச் செல்லும் நிலையில் உள்ளது. எனவே கூட்டாட்சி தத்துவத்தைக் காக்க போராட வேண்டியுள்ளது” எனப் பேசினார். முன்னதாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் இல்லத்திற்கு நேரில் சென்ற முதல்வர் மு.க. ஸ்டாலின், அண்மையில் சு.வெங்கடேசனின் தந்தை இரா.சுப்புராம் காலமானதையொட்டி அவரது உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.