
‘இழந்தவனுக்கு மட்டும் தான் தெரியும் இழப்பின் வலி...’ என்ற வாசகத்தோடு மனோஜ் பாராதிராஜா பேசிய பழைய நேர்காணல்களை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகின்றனர். பொதுவாக பெரிய பிரபலங்களின் வாரிசுகள் என்றால் அவர்களுக்கு நிறைய பிரஷர் இருப்பதாக சொல்வார்கள். அது தனக்கும் இருந்ததென்று கூறிய மனோஜ் ஒரு கட்டத்தில் அதை கடந்து விட்டேன் என கூறினார்.

முதலில் சினிமாவில் ஆர்வம் இருந்த அவருக்கு மணிரத்னம் இயக்கிய ‘பம்பாய்’(Bombay) படத்தில் உதவி இயக்குநராக பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து அவரை கதாநாயகனாக பார்க்க ஆசைப்பட்ட பாரதிராஜா, ‘தாஜ்மஹால்’ படம் மூலம் அறிமுகப்படுத்தினார். அப்படம் கமர்ஷியல் ரீதியாக எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் ரஹ்மான் இசையில் பாடல்கள் ஹிட்டானது. இதில் ‘ஈச்சி எலுமிச்சி...’ பாடலை மனோஜ் பாடியிருந்தார். ஹீரோவாக முதல் படம் சரியாக போகாததால் ஹீரோவாகவே தொடர்ந்து நடிப்பேன் என முரண்டு பிடிக்காமல் நல்ல கதாபாத்திரத்தில் நடிப்பேன் என இரண்டாவது படமே ‘சமுத்திரம்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இதில் இவரை விட சீனியர் நடிகர்களான சரத்குமார், முரளி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இதையடுத்து மீண்டும் அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம், ஈர நிலம் உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்தார். இதில் வருஷமெல்லாம் வசந்தம் படத்தில் இடம்பெற்ற ‘எங்கே அந்த வெண்ணிலா’ பாடல் எவர்கிரீனாக இருந்தாலும் சமீபத்தில் இன்றையக் கால இளைஞர்களால் ரீல்ஸ் மூலம் கொண்டாடப்பட்டு வருகிறது. கதாநாயகனாக கவனம் செலுத்தவில்லை என்றாலும் முக்கிய கதாபாத்திரத்தில் மகா நடிகன், அன்னக்கொடி, வாய்மை, சாம்பியன் என சீனியர் படங்கள் அல்லாது ஜுனியர் நடிகர்கள் ஹீரோவாக நடித்த படங்களிலும் நடித்து வந்தார். கடைசி படங்களாக சிம்புவின் ஈஸ்வரன் மற்றும் மாநாடு ஆகிய படங்களில் நடித்த அவர் தொடர்ந்து கார்த்தியின் விருமன் படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் தான் அவர் நடித்த கடைசி படமாக மாறிபோய்விட்டது.
உதவி இயக்குநர் தொடங்கி, பாடகர், நடிகர் என பல துறைகளில் கவனம் செலுத்திய மனோஜ் இறுதியாக தனது தந்தையின் ரூட்டான டைரக்ஷனில் கவனம் செலுத்தினார். முதலில் 'விசில்' என்ற தலைப்பில் ஒரு குறும்படத்தை இயக்கிய இவர் முதல் முழுப்படமாக சிகப்பு ரோஜாக்கள் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க விரும்புவதாக கூறி அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வந்தார். ஆனால் கடைசி வரை அவரால் எடுக்க முடியவில்லை. ஆனால் பின்பு நீண்ட இடைவெளிக்குப் பிறகு 2023ஆம் ஆண்டு வெளியான ‘மார்கழி திங்கள்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இப்படத்திற்கு சுசீந்திரன் கதை எழுதி தயாரித்திருந்தார். இது குறித்து பேசிய மனோஜ், “ஒவ்வொரு முறையும் சிகப்பு ரோஜாக்கள் 2 படத்தை கையில் எடுக்கும் போது ஒரு தடங்கள் வந்துவிடும். ஏன் அதையே போட்டு நான் தொங்கிட்டு இருக்கணும். மார்கழி திங்கள் படத்தின் கதை நல்ல கதை, வந்தவுடனே இதை தவறவிட்டுவிடக்கூடாது என ஒப்புக் கொண்டுவிட்டேன்” என்றார்.

இப்படத்தில் பாரதிராஜாவை நடிக்க வைத்திருந்து, தனக்குத் தந்தை சொன்ன ‘ஸ்டார்ட், ஆக்ஷன், கட்’டை தனது தந்தைக்கு சொல்லி நெகிழ்ந்தார். அதோடு படம் வெளியாகும் நேரத்தில், “என் புள்ள புழைச்சுக்கிட்டான்...” என பாராதிராஜா கண்கலங்கியபடி பேசினார். அவரிடம் காலில் விழுந்து அப்போது மனோஜ் ஆசீர்வாதம் பெற்றார். இதனிடையே ஷங்கரிடம் எந்திரன் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றி அதில் சிட்டி ரோபோவுக்கு டூப் போட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து 2024ஆம் ஆண்டு வெளியான ‘ஸ்னேக்ஸ் அண்ட் லேடர்ஸ்’ வெப் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதன் பிறகு இவரைப் பற்றிய எந்த அப்டேட்டும் வராத நிலையில் திடீரென்று மாரடைப்பால் காலமானதாக செய்தி வெளியாகி பலருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்தது. அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், இளையராஜா தொடங்கி பல்வேறு திரை பிரபலங்கள் வரை அஞ்சலி செலுத்தினர். இயக்குநர் பாரதிராஜா தனது 83 வயதில் 48 வயதுள்ள தனது ஒரே மகனை இழந்து வாடும் காட்சி பார்ப்பவர்களை கலங்கடிக்கச் செய்தது. முகத்தில் வெகுளித்தனம், வலியை கடந்த சிரிப்பு என மனோஜின் முகம் பலராலும் மறக்க முடியாதவையாக மாறியது.