
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் 10% முதல் 49% வரையிலான வரிகளை விதிப்பதாக இன்று அறிவித்துள்ளார். இதில், இந்திய பொருட்களுக்கு 26 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
டொனால்ட் டிரம்ப் வரி விதித்தது குறித்து நாடாளுமன்றத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசிடம் கேள்வி எழுப்பினார். மக்களவையில் பேசிய ராகுல் காந்தி, “பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு வெவ்வேறு தத்துவங்கள் உள்ளன. அவர்கள் இடது பக்கம் சாய்வதா அல்லது வலது பக்கம் சாய்வதா என்று கேட்டால், நம் முன் வரும் ஒவ்வொரு வெளிநாட்டவருக்கும் முன்பாக நாங்கள் தலை வணங்குகிறோம் என்று கூறுவார்கள். இது அவர்களின் கலாச்சாரத்தில், அவர்களின் வரலாற்றில் உள்ள ஒன்று.
நமது நட்பு நாடான அமெரிக்கா நம் மீது வரிகளை விதிக்க முடிவு செய்துள்ளது. இது நம்மை முற்றிலுமாக அழித்துவிடும். நமது நிலத்தைப் பற்றி அரசாங்கம் என்ன செய்கிறது?. வரிகள் பிரச்சினையில் நீங்கள் என்ன செய்ய முடிவு செய்துள்ளீர்கள்?. அதிக இறக்குமதி வரிகளால், மருந்து மற்றும் ஆட்டோமொபைல் துறைகள் கடுமையாகப் பாதிக்கும். பொருளாதாரத்தை முற்றிலும் சீரழிக்கும்.
2020 ஆம் ஆண்டில் 20 ராணுவ வீரர்கள் தியாகம் செய்தனர், ஆனால் நமது வெளியுறவு செயலாளர் ஜெய்சங்கர், சீன தூதருடன் கேக் வெட்டுவதைப் பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன். சீனா நமது பிரதேசத்தில் 4,000 சதுர கி.மீ. பரப்பளவில் அமர்ந்திருக்கிறது. இது அனைவரும் அறிந்த உண்மை. நமது நிலத்தை நாம் திரும்பப் பெற வேண்டும்” என்று பேசினார்.