
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி ஒன்றில் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கிடையே நேற்று (15-04-25) மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில், ஒரு மாணவர் தனது பையில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சக மாணவனை வெட்டினார். பள்ளி வகுப்பறையிலேயே சக மாணவனை, மாணவர் ஒருவர் அரிவாளால் வெட்டிய சம்பவம் திருநெல்வேலி மட்டுமின்றி தமிழகத்தையே உலுக்கியுள்ளது.
அரிவாளால் வெட்டி காவல் நிலையத்திற்கு சரணடைந்த மாணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், பென்சில் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அரிவாள் வெட்டு சம்பவம் நடந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. 18 வயது குறைவாக 13 வயது சிறுவன் என்ற காரணத்தால் அரிவாளால் வெட்டிய மாணவரை சிறிது நேரம் மட்டுமே காவல் நிலையத்தில் வைக்கப்பட்டு அதன் பிறகு, மாவட்ட குழந்தைகள் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட மாணவருக்கு நேற்று இரவு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு இளஞ்சிறார் நீதி குழுமம் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, வருகின்ற ஏப்ரல் 29ஆம் தேதி வரை 14 நாள்கள் மாணவன் நீதிமன்ற காவல் வைக்க உத்தரவிடப்பட்டது. மேலும், சீர்திருத்தப் பள்ளியில் வைத்து தகுதியான நபர்களைக் கொண்டு மனரீதியான ஆலோசனை வழங்கவும் உத்தரவிடப்பட்டது.