Skip to main content

“திமுக ஆட்சியைப் பார்த்து வெளிநாட்டு நிறுவனங்களே வந்து இங்கு தொழிற்சாலைகளை நிறுவினர்”- முதலமைச்சர் வெளிநாட்டு பயணத்தை விமர்சித்த ஸ்டாலின்

Published on 12/09/2019 | Edited on 12/09/2019

தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி 14 நாட்கள் பயணமாக இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் சென்று வந்தார். வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கவே இந்த வெளிநாடுகள் பயணம் என்றும் கூறினார். பயணத்தை முடித்துவிட்டு வந்தபின் மீண்டும் இஸ்ரேல் செல்ல இருப்பதாக கூறினார். இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின், முதலமைச்சர் முதலீட்டார்கள் கவர வெளிநாடு செல்லவில்லை, சொந்த காரணங்களுக்காவே அரசுமுறை பயணமாக சென்றிருப்பதாக விமர்சித்துள்ளார்.
 

mk stalin

 

 

சென்னையில் செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெற்ற திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்துகொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “முதல்வர் மட்டும் வெளிநாடு சென்று வரவில்லை. அவருடன் 10-15 பேர் சென்றனர். இன்னும் 7-8 பேர் வெளிநாடு செல்லவிருப்பதாகத் தகவல் வந்திருக்கிறது. மறுபடியும் முதல்வர் வெளிநாட்டுக்குச் செல்லவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. போகட்டும், வேண்டாம் என்று சொல்லவில்லை.

வெளிநாட்டுக்குச் சென்றதால் முதலீடுகளும், வேலைவாய்ப்புகளும் வந்தால் நானே பாராட்டு விழா நடத்துவதாகச் சொல்லியிருந்தேன். அதனை மறுக்கவில்லை. ஆனால், ஸ்டாலின் எங்களுக்குப் பாராட்டு விழா நடத்த வேண்டாம் என்று முதல்வர் கூறியிருக்கிறார். 'சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்'. அதனை அவரே ஒப்புக்கொண்டார்.

இதுகுறித்த வெள்ளை அறிக்கை கேட்டேன். அதிமுக ஆட்சியில் இரண்டு உலக முதலீட்டாளர் மாநாடுகள் நடைபெற்றிருக்கின்றன. ஜெயலலிதா ஆட்சியில் 2.42 லட்சம் கோடி முதலீடுகள் வந்ததாக அறிவித்தனர். அதன்பிறகு, எடப்பாடி பழனிசாமி ஆட்சியில், மூன்றரை லட்சம் கோடி முதலீடுகள் வந்ததாகக் கூறினர். இதன்மூலமாக லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றனர். அந்த ஒப்பந்தங்களில், எவ்வளவு முடிவாகியிருக்கின்றன? எத்தனை நிறுவனங்கள் வந்திருக்கின்றன? எத்தனை தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டிருக்கின்றன? எவ்வளவு வேலைவாய்ப்புகள் உருவாகியிருக்கின்றன? இதைத்தான் வெள்ளை அறிக்கையாக வெளியிடச் சொன்னோம். அதைக்கேட்டால், அமைச்சர் ஜெயக்குமார் திமுகவை வெள்ளை அறிக்கை வெளியிடச் சொல்கிறார்.

திமுக ஆட்சிக்காலத்தில், துணை முதல்வராக இருந்த நான் வெளிநாடு சென்றிருக்கிறேன். முதலீட்டைப் பெறுவதற்காக அல்ல. சில அதிகாரிகளை மட்டும் அழைத்துக்கொண்டு சென்றேன். மெட்ரோ ரயில் குறித்து ஆய்வு செய்வதற்காகச் சென்றோம். ஆனால், அதிமுக ஆட்சியில் முதலீட்டைப் பெறுவதற்காக என்று நாடகம் நடத்திவிட்டுச் சென்றனர். தனிப்பட்ட விஷயங்களுக்காகச் செல்வதாகச் சொல்லிவிட்டு சென்றிருக்கலாம். ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் ரூ.2.42 லட்சம் கோடி முதலீடுகள் பெறப்படவில்லை, 14,000 கோடி ரூபாய்க்குத்தான் முதலீடுகள் வந்ததாக ஆர்டிஐ தகவலில் வெளிவந்துள்ளது. இதற்கு முதல்வர் என்ன பதில் சொல்லப் போகிறார்? அடுத்து நல்லாட்சியை ஏற்படுத்த திமுகவினர் உழைக்க வேண்டும்.

அம்பத்தூர் முதல் ஸ்ரீபெரும்புதூர் வரை உள்ள தொழிற்சாலைகள் திமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்டவை. இவை வெளிநாடு சென்று பெறப்பட்டவை அல்ல. திமுக ஆட்சியைப் பார்த்து அவர்களே வந்து இங்கு தொழிற்சாலைகளை நிறுவினர்," என்று கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்