Skip to main content

கர்ப்பம் ஆனதால் விரட்டப்பட்ட பள்ளிச்சிறுமி!

Published on 23/11/2019 | Edited on 23/11/2019

“நான் ஒரு உண்மைக் கிறித்தவர்..”  என அறிமுகம் செய்துகொண்ட அவர் “இந்த உலகத்தை சிறப்பானதொரு இடமாக்குவதற்கான வேலையைத்தான் மிஷனரிகள் செய்துவருகின்றன. உலகம் முழுவதும் 4,40,000 கிறித்துவ மிஷனரிகள் உள்ளன. இந்திய அளவில் 15 சதவீத பள்ளி மாணவர்களும், 10 சதவீத கல்லூரி மாணவர்களும் கிறித்தவ நிறுவனங்களில்தான் படிக்கின்றனர். 15 சதவீத மருத்துவ சேவையும்கூட கிறித்தவ மருத்துவமனைகளால்தான் அளிக்கப்படுகின்றன. சி.எஸ்.ஐ. எனப்படும் தென்னிந்திய திருச்சபையானது, சமூகத்தில் நிலவும் தீமைகளைப் போக்கவும், சமூக நீதிக்காக உழைக்கவும், கல்விப்பணி, மருத்துவப்பணி மூலம் மக்களுக்கு சேவை செய்யவும் தன்னை அர்ப்பணித்து வருகிறது.” என்றவர், “சிவகாசி தட்டுமேட்டுத் தெருவிலும் ஒரு சி.எஸ்.ஐ. தொடக்கப்பள்ளி இருக்கிறது. சுதந்திரம் வாங்குவதற்கு முன்னால் 1939-ல் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது. நகரின் மையப்பகுதியில் செயல்படும் அரசு நிதி உதவி பெறும் அந்த ஈராசிரியர் பள்ளியில், ஆசிரியர்கள் இருவரும், ரூ.60 ஆயிரத்துக்கும் மேல் சம்பளம் பெற்றும், மாணவர்கள் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? வெறும் 17 பேர்தான். அந்த 17 பேரும்கூட தற்போது பள்ளிக்கு வருவதை நிறுத்திவிட்டார்கள். ஏன் தெரியுமா?” என்றார் ஆதங்கத்துடன்.  

 

school incident in sivakasi


மேலும் அவர் “தொடக்கப்பள்ளி என்பதால் 5-வது வகுப்பு வரையிலும்தான். அங்கு படித்துவந்த சிறுமி கர்ப்பமானாள். அவள் பள்ளிக்கு வரக்கூடாது என்று விரட்டியடிக்கப்பட்டாள். அவள் கர்ப்பமானதற்குக் காரணம் வெளிநபர் என்றாலும், பள்ளிச் சூழலும் ஆராக்கியமானதாக இல்லை. பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜகுமார் எந்நேரமும் போதையில்தான் இருப்பார். தள்ளாடியபடியேதான் பள்ளிக்கு வருவார். வந்ததுமே படுத்துவிடுவார். முதலில் சேரில் அமர்ந்தவாறே தூங்குவார். அது அசவுகரியமாக இருப்பதை உணர்ந்ததும், தரையில் படுத்துவிடுவார். ஆசிரியர் பொறுப்பின் உன்னதம் மறந்து. பேன்ட்டை கழற்றிவிட்டு,  டிரவுசரோடு பள்ளியில் உலா வருவார்.  அவர் பாடமே நடத்துவதில்லை. போதையில் இருக்கும் அவருடைய பொழுதுபோக்கே மாணவர்களை பலம்கொண்ட மட்டும் அடிப்பதும், கெட்ட வார்த்தைகளால் திட்டுவதும்தான். சொல்லவே நா கூசுகிறது. சிறுமிகளிடம் போய்  “காலை நேரே வைத்து உட்கார். உன்னை இந்த பொசிஷனில் பார்த்தால், எனக்கு ……” என்று அசிங்கமாகப் பேசுவார். நடுரூம் என்றொரு அறை உண்டு. ”அங்கே வா..” என்று அழைத்துச் செல்வார். சிறுமிகளை கை, கால் அமுக்கிவிடச் சொல்வார். குடித்துவிட்டு வகுப்பறையில் இவர் வாந்தி எடுப்பதை மாணவிகள்தான் கையினால் அள்ளி சுத்தம் செய்ய வேண்டும். மாணவர்களை கிட்டத்தட்ட  அடிமைகள் போலவே நடத்துகிறார்.

 

school incident in sivakasi


பாடமே சொல்லிக்கொடுக்கவில்லை என்றால் மாணவர்களுக்கு படிப்பு எப்படி வரும்? பள்ளியின் மாணவர்கள் எண்ணிக்கை எப்படி அதிகரிக்கும்? அந்த மாணவனின் பெற்றோருக்கு கட்டணக் கழிப்பறையில்தான் வேலை. அவன் சரியாகப் படிக்காத மாணவன்தான். அவனை அந்த அடி அடிப்பார்.  அதைவிட கொடுமை.. அவனை அடிக்கும்போது “இந்த சாதியில பொறந்துட்டு நீயெல்லாம் எதுக்கு படிக்க வர்ற? உனக்கெல்லாம் கக்கூஸ்தான் லாயக்கு. அங்கே போயி உட்கார்ந்துக்கோ. அதுதான் உனக்கு சரியா வரும்.” என்று அவமானப்படுத்துவார். சிறுவன் என்றும் பாராமல், தினமும் இவர் பிரயோகித்த வன்முறையால், அந்த மாணவன் பள்ளிக்கு வருவதே இல்லை. சிறுமிகளை அடிக்கும்போது தொடக்கூடாத இடத்திலெல்லாம் அவருடைய கைகள் போகும். பொறுக்கமுடியாத சிறுமிகள், வீட்டில்போய் அழுதார்கள். பெற்றோர் தரப்பிலிருந்து பள்ளியின் தாளாளர் ஸ்டான்லி ஜெயராஜுக்கு புகார் போனது.  தலைமை ஆசிரியர் தாளாளருக்கு ஒருவகையில் உறவினராம். புகாரைக் கண்டுகொள்ளவும் இல்லை. நடவடிக்கை எடுக்கவுமில்லை. அதனால், அந்தக் காலனியிலிருந்து வந்துகொண்டிருந்த அத்தனை மாணவர்களும் பள்ளிக்கு வருவதை நிறுத்திவிட்டனர். வெறும் 3 மாணவர்களை வைத்துப் பள்ளியை ஓட்டிக்கொண்டிருக்கின்றனர்.” என்றார்.

 

school incident in sivakasi


பள்ளிக்கு வராத மாணவன் மகாராஜாவை வீட்டில் சந்தித்தோம். “அந்த சார் இருக்கிற ஸ்கூல் பக்கமே போகமாட்டேன். முதுகுல நங்குநங்குன்னு குத்துவாரு. ஸ்கேலைக் கொண்டு அடிப்பாரு. எனக்கு வலிக்கும்ல.” என்று கண்ணைக் கசக்கினான்.

 

school incident in sivakasi


அவனுடைய பாட்டி தேவயானை “அப்படிச் சொல்லாதடா.. பஸ்ல போட்டிருக்கிற ஊரு பேரையாச்சும் நாலெழுத்து கூட்டிப் படிக்கத் தெரிஞ்சிக்கணும்டா.. படிக்கப்போடா..” என்று கெஞ்சினார். தாத்தா கிருஷ்ணனோ “வாத்திமாரு மேல குற்றம் சொல்லுற அளவுக்கு நான் பெரிய மனுஷன் இல்ல சாமி.. பொழப்பே கக்கூஸ்லதான்.. இவன் என்ன கலெக்டருக்கா படிச்சு கிழிக்கப்போறான்? அந்த வாத்தியாரு இவனைக் கொஞ்சம் நல்லா பார்த்துக்கக்கூடாதா?” என்று பரிதவித்தார்.

அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜகுமாரிடம் பேசினோம்.

 

school incident in sivakasi


“நான் கடவுளுக்கு பயப்படற ஆளு. நான் தலைமை ஆசிரியர் பொறுப்புக்கு வந்து அஞ்சேமுக்கால் வருஷமாச்சு.  எனக்கு இப்ப கெட்ட நேரம். நான் நல்லவன்னு நானே சொல்லுறேன். வேற யாரும் எனக்கு சர்டிபிகேட் தர வேண்டாம். சந்தர்ப்பங்கள் எனக்கு சாதகமா இல்ல. என்னோட பெரிய வீக்னஸ்.. குடிப்பேன். படிக்கலைன்னா அடிப்பேன். அதுவும் கையால அடிக்கமாட்டேன். சின்ன ஸ்கேல் வச்சித்தான் அடிப்பேன். கொஞ்சம் கூடுதலா கண்டிச்சிட்டேன். பொம்பள புள்ளைங்கன்னா அவ்வளவு பாசமா இருப்பேன். என் மேல பாலியல் குற்றச்சாட்டு சொல்லுறதெல்லாம் அபாண்டம். ஸ்கூலுக்கே வந்து பெற்றோர்கள் பிரச்சனை பண்ணுனாங்க. சத்தியமா சொல்லுறேன் அவங்களுக்கு பணம் கொடுத்து என் மீது பொய் புகார் கொடுக்க வச்சிட்டாங்க. எங்ககிட்ட படிச்ச பொண்ணு கர்ப்பமாயிட்டதால, ஸ்கூலுக்கு வரவேணாம்னு சொன்னேன். என்னோட அசிஸ்டென்ட் அருள்மேரி லில்லி,  நான் சமூகசேவை பண்ணுறேன்னு சொல்லி, அந்த ஸ்டூடன்ட் ஸ்கூலுக்கு வரணும்னாங்க. எல்லாத்துக்கும் உள்நோக்கம் இருக்கு. அவங்களுக்கு என்னை ஸ்கூலை விட்டு விரட்டணும். அவங்க எச்.எம். போஸ்டுக்கு வரணும்கிற ஒரே சிந்தனைதான். என்னுடைய கஷ்டங்களை வெளில சொல்ல முடியல.” என்று சொன்னதையே திரும்பத் திரும்ப சொன்னார்.

 

school incident in sivakasi


ஆசிரியை அருள்மேரி லில்லி நம்மிடம் “நான் எதையும் சொல்ல விரும்பல. பிரச்சனைன்னு வந்தால் ஸ்கூல் மேனேஜ்மென்ட்கிட்ட சொல்லிருவேன்.” என்றார்.

நாம் தொடர்பு கொண்டபோதெல்லாம் பள்ளியின் தாளாளர் ஸ்டான்லி ஜெயராஜ் தவிர்த்த நிலையில், சிவகாசி கல்வி மாவட்ட அலுவலர் கிருஷ்ணமூர்த்தியின் கவனத்துக்கு விஷயத்தைக் கொண்டுசென்றோம். “விசாரித்து நடவடிக்கை எடுக்கிறேன்..” என்று உறுதியளித்தவர், விசாரணைக்குப்பிறகு நம்மைத் தொடர்புகொண்டார்.
 

”முதலில் டி.இ.ஓ.க்களை அனுப்பினேன்.  பிறகு நானும் அந்தப் பள்ளிக்குச் சென்று விசாரித்தேன். நடந்ததெல்லாம் உண்மைதான். ஆனால், அந்த எச்.எம். மறுக்கிறார். குழந்தைகளிடம் விசாரித்தபோது அவரால் பட்ட கொடுமைகளைச் சொன்னார்கள். குழந்தைகளிடமே எழுதி வாங்கியிருக்கிறோம். இதற்குமுன் ஒரு தடவை இதே தலைமை ஆசிரியர் ராஜகுமார் போட்டோ ஆதாரங்களுடன் கல்வித்துறை அதிகாரிகளால் எச்சரிக்கப்பட்டிருக்கிறார். அப்படி இருந்தும் அந்தப் பள்ளி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒண்ணு அவரை டிரான்ஸ்பர் பண்ணிருக்கணும். இல்லைன்னா நடவடிக்கை எடுத்திருக்கணும். ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? இதையே காரணமாக வைத்து கல்வித்துறை ஏன் இந்தப் பள்ளிக்கூடத்தை மூடக்கூடாது? என்று பிஷப் மற்றும் தாளாளர் ஆகிய இருவரிடமும்  விளக்கம் கேட்டிருக்கிறோம். அந்தக் குழந்தைகளை நான் விசாரித்தபோது சாப்பாடுகூட கிடைக்கல என்றார்கள். அத்தனை குழந்தைகளும் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள். வறுமையின் கொடுமையினை அனுபவித்துவரும் குடும்பங்களில் இருந்து பள்ளிக்கு வரும் குழந்தைகளிடம் தலைமை ஆசிரியர் பொறுப்பில் இருப்பவர் எத்தனை ஆதரவாக நடந்திருக்கவேண்டும்? அவர்களுக்கு ஆறுதலாக இருந்திருக்க வேண்டும்? ஸ்கூலுக்கு மது குடித்துவிட்டு வந்து வாந்தி எடுத்து, மாணவிகளை அள்ள வைத்திருக்கிறார் என்றால்.. கொடுமையிலும் கொடுமை அல்லவா?” என்றார் வேதனையுடன்.  

பள்ளிக்கே சென்று ஆய்வு நடத்தி அங்கு மாணவர்கள் படும் அவதியை நேரில் கண்டும்,   தலைமை ஆசிரியர் ராஜகுமார் மீது கல்வித்துறையோ, பள்ளி நிர்வாகமோ,  இத்தனை நாட்கள் கடந்தும் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பெற்றோர் தரப்பில் நம்மிடம் குமுறினார்கள்.  

அரசுப் பள்ளிகளும் சரி.. அரசு உதவிபெறும் பள்ளிகளும் சரி.. இதுபோல் கவனிப்பாரற்று இருந்தால்.. அங்கு படிக்கின்ற மாணவர்களின் நிலை என்னவாகும்? அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும்.

 

 

சார்ந்த செய்திகள்