
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமையன்று (டிசம்பர் 25) மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் கோரிக்கை மனு கொடுப்பதற்காக, சேலம் மாவட்டம் தேக்கம்பட்டி காந்தி நகரைச் சேர்ந்த பட்டறை தொழிலாளி தங்கராஜ் (45) வந்திருந்தார். மனைவி வீரம்மாள் (34), மகள்கள் கார்க்கி (14), காந்த வர்ஷினி (12) ஆகியோரையும் உடன் அழைத்து வந்திருந்தார்.
கோரிக்கை மனுக்களுடன் வரும் பொதுமக்களை காவல்துறையினர் ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் அருகே, முழுமையாக பரிசோதனை செய்த பிறகே உள்ளே செல்ல அனுமதிக்கின்றனர். இந்நிலையில் காவல்துறையினர் பரிசோதிக்கும் முன்பே தங்கராஜ், பாட்டிலில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய்யை தனது உடல் மீது தற்கொலைக்கு முயன்றார். அவருடைய மனைவி, குழந்தைகளும் அதேபோல் தற்கொலைக்கு முயன்றனர்.
அதற்குள் அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் பாய்ந்து சென்று அவர்களின் தற்கொலை முயற்சியை தடுத்து நிறுத்தினர். அனைவரின் உடலின் மீதும் தண்ணீரை ஊற்றினர்.
காவல்துறையினர் கூறுகையில், தங்கராஜ் தனக்குச் சொந்தமான 29 சென்ட் நிலத்தை அடமானம் வைத்து வட்டிக்கு கடன் வாங்கியதாகவும், கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் நிலத்தை விற்றுவிட முயற்சித்தபோது, பக்கத்து நிலத்துக்காரர்கள் முட்டுக்கட்டை போட்டதால் விரக்தி அடைந்து குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்தது.
இது தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.