
பள்ளி மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டு மாணவன் ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில் உறவினர்கள் ஆசிரியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டி அடுத்துள்ள வரகூர் பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் நாவல்ப்பட்டி பகுதியைச் சேர்ந்த மாணவன் ஒருவன் உடன்படிக்கும் சக மாணவனின் காலணியை ஒளித்து வைத்து விளையாடியதாகக் கூறப்படுகிறது. இதனால் பள்ளியில் இருந்த சக மாணவர்களுடன் மோதல் ஏற்பட்டது. இதில் மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதில் ஆகாஷ் என்ற மாணவர் சம்பவ இடத்திலேயே மயக்கம் அடைந்தார். உடனடியாக அங்கிருந்த ஆசிரியர்கள், மாணவனை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்தனர். அங்கு மாணவன் ஆகாஷை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
இதனையடுத்து மாணவனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுதொடர்பாக எருமைப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், மேலும், மாணவனின் வகுப்பறை மற்றும் சக மாணவர்கள், ஆசிரியர்களிடம் மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) விஜயன் நேரில் சென்று ஆய்வு மற்றும் விசாரணை மேற்கொண்டு வந்தார்.
இந்த நிலையில், பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் சுரேஷ் உள்பட 10க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், மாணவனின் உடலை பார்ப்பதற்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளனர். அப்போது அங்கிருந்த மாணவனின் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர்கள் ஆசிரியர்களை சூழ்ந்துகொண்டு பல்வேறு கேள்விகளை எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக, ‘மாணவர்கள் சண்டை போட்டுக்கொண்டிருந்த போது ஆசிரியர்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?. அரை மணி நேரத்திற்கு மேலாக நீடித்த சண்டையை ஆசிரியர்கள் ஏன் அவர்கள் விலக்கவில்லை?. உங்களை நம்பி எப்படி மாணவர்களை பள்ளிக்கு அனுப்புவது?’ என பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர். இருப்பினும், நடந்ததை குறித்து உறவினர்களிடம் ஆசிரியர்கள் எடுத்துக் கூறியும், அவர்களுக்கு அனுதாபத்தை தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. ஆனாலும், உறவினர்கள் அதை ஏற்க மறுத்து தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்ததால், நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.