Skip to main content

திருச்சி போலிஸ் மீது நம்பிக்கையில்லை: உஷா வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற கணவர் ராஜா மனு! 

Published on 16/03/2018 | Edited on 16/03/2018

 

 

USHA


திருச்சியில் போக்குவரத்து ஆர்.ஐ. காமராஜ் எட்டி உதைத்ததில் கீழே விழுந்து இறந்த உஷாவின் வழக்கை, திருச்சி போலிஸ் மீது நம்பிக்கையில்லை சிபிசிஐடிக்கு மாற்றக் கோரி அவரது கணவர் மதுரை உயர் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
 

உஷா மரணத்திற்கு நீதி வழங்க கோரியும், இந்த விபத்துக்கு காரணமான காவல் ஆய்வாளரை கைது செய்யக்கோரி 3000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 3 மணி நேரத்திற்கு மேலாக நீடித்த போராட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். அப்போது அங்கிருந்த பேருந்துகள், காவல்துறை வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட பலர் கைது செய்யப்பட்டனர். இந்த போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 26 பேருக்கும் திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் 500 ரூபாய் சொந்த பிணையில் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. 
 

இந்த நிலையில் திருவரம்பூர், அரசு மருத்துமனையில் போராடிய மக்கள் அதிகார அமைப்பினர்களுக்கும், கைதானவர்களுக்காக நீதிமன்றத்தில் ஜாமீனுக்கு போராடி மக்கள் அதிகார வழக்கறிஞர்களை திருச்சி நீதிமன்றத்தில் சந்தித்து அவர்களுக்கு நன்றி தெரிவித்தார் உஷாவின் கணவர் ராஜா. 
 

இந்த நிலையில் தான் திருச்சி போலிஸ் மீது நம்பிக்கையில்லை சிபிசிஐடிக்கு மாற்றக் கோரி அவரது கணவர் மதுரை உயர் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
 

அதில், ”நான் பணம் கட்டாத வண்டிகளை ரெக்கவரி பண்ணும் நிறுவனத்தில் வேலை செய்கிறேன். நானும், என் மனைவி உஷாவும் காதலித்து திருமணம் செய்துகொண்டோம். நானும், மனைவியும் மார்ச் 7ஆம் தேதி மாலை 6.45 மணியளவில் தஞ்சாவூரில் இருந்து திருச்சி நோக்கி டூவிலரில் சென்றோம். 

துவாக்குடி சுங்கச்சாவடி அருகே போக்குவரத்து போலீஸார் எங்கள் வாகனத்தை நிறுத்தினர். போலீஸார் நின்றிருந்த இடத்திலிருந்து சில அடி தொலைவில் வாகனத்தை நிறுத்தினேன். அவரிடம் உரிய ஆவணங்களைக் காட்டினேன்.
 

வாகனத்தை எடுத்தபோது, போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜர் மோசமான வார்த்தைகளால் திட்டி வாகனத்தை பலமுறை எட்டி உதைத்தார். அப்போது, மூன்று மாத கர்ப்பிணியாக இருந்த என் மனைவி உஷா கீழே விழுந்து பலத்த காயமடைந்து உயிரிழந்தார்.
 

இதுதொடர்பாக, போலீஸார் சாதாரண பிரிவுகளில் ஆய்வாளர் காமராஜ் மீது வழக்கு பதிவு செய்து, கைது செய்து சிறையில் அடைத்தனர். இதை எதிர்த்து திருச்சியில் 3,000 பேர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். அதுமட்டுமில்லாமல், அவர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்தனர்.
 

என் மனைவி இறந்தது சம்மந்தமாக வழக்கு பாய்லர் தொழிற்சாலை காவல் நிலையத்தில் இருந்து மாநகர குற்றப்பிரிவு மாற்றப்பட்டுள்ளது. குற்றப்பிரிவு போலீஸாரும் திருச்சி மாநகர் காவல் பிரிவுக்கு உட்பட்டவர்கள் தான். விசாரணை அதிகாரி புகழேந்தி ஆர்.ஐ. காமராஜைக் காப்பாற்றும் நோக்கத்தில் போலீசார் செயல்படுகின்றனர். மருத்துவர்களைப் பயன்படுத்தி என் மனைவி தொடர்பாக அவதூறு தகவல்களைப் பரப்பி வருகின்றனர். இந்த வழக்கை போலீஸார் விசாரிப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. அதனால், என் மனைவி மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
 

கடந்த சில தினங்களுக்கு முன்பு இறந்த உஷா கர்ப்பிணி அல்ல என்றும், ராஜா மது அருந்தியிருந்ததாகவும் குறிப்பிட்ட மருத்துவ அறிக்கை நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டு பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. 
 

ஜெ.டி.ஆர். 

சார்ந்த செய்திகள்