
தமிழ்நாட்டில் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் அரசியல் கட்சிகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. இதில், திமுக தலைமையிலான கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. மறுபுறம், பிரிந்து கிடந்த அதிமுக - பா.ஜ.க கூட்டணி 2026ஆம் தமிழக சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள மீண்டும் சேர்ந்திருக்கிறது.
அதிமுக-பாஜக கூட்டணி உறுதியானதற்கு பிறகு தமிழக பாஜக தலைமையில் மாற்றம் ஏற்பட்டது. அதன்படி அண்மையில் நயினார் நாகேந்திரன் தமிழக பாஜகவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் திம்மாவரம் பகுதியில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் நயினார் நாகேந்திரன் கலந்துகொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை கொடுத்திருந்தார். அந்த கூட்டத்தில் பேசிய அவர், 'இது இப்படி இது அப்படி என தயவு செய்து யாரும் இந்த கூட்டத்தில் உள்ளவர்கள் மட்டுமல்ல தமிழகத்தில் உள்ள யாருமே அதிமுக பாஜக கூட்டணி குறித்து கருத்துக்கள் சொல்ல வேண்டாம் என அன்போடு கேட்டுக் கொள்கிறேன்' என்றார்.