
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே பஞ்சு மூட்டைகளை ஏற்றி வந்த லாரி மீது மாருதி வேன் மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் சம்பவ இடத்திலேயே மூன்று இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த தருமபுரம் பகுதியைச் சேர்ந்த சின்னப்பன் என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த அகஸ்டின், ராபர்ட், ஜான் கென்னடி, ஜெயக்குமார் உள்ளிட்டவர்களுடன் சேர்ந்து மாருதி வேனை எடுத்துக் கொண்டு கேரள மாநிலத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்திற்கு புனித வெள்ளி நாளை முன்னிட்டு பிரார்த்தனைக்காக சென்றுள்ளார்.
ஆறு பேரும் பிரார்த்தனையை முடித்துக் கொண்டு மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்த பொழுது திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சாலையில் சென்று கொண்டிருந்த பொழுது பஞ்சு மூட்டை ஏற்றுக் கொண்டு வந்த லாரி மீது மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் காரின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்ததால் காரில் பயணித்த சின்னப்பன், ஜான் கென்னடி, ராபர்ட் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மீதம் உள்ளவர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் இந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.