தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், பல்வேறு அரசியல் கட்சிகளும் பிரச்சாரம், கூட்டணி எனத் தேர்தல் வேலைகளை முன்னெடுத்து வருகின்றன. இந்நிலையில் தி.மு.க தலைவர் ஸ்டாலினுடன் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் குண்டுராவ் ஆகியோர் இன்று மாலை ஆலோசனையில் ஈடுபட்டனர்.
இதற்கு முன்பாக, இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் தமிழகத்தில் போட்டியிட விரும்பும் தொகுதிகள் குறித்து ஆலோசிக்கப்படுவதாக தகவல் வெளியாகி இருந்தது. அதேபோல், புதுவை காங்கிரஸ் - தி.மு.க கூட்டணியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், அது தொடர்பாகவும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.
கடந்த திங்கள்கிழமை ராகுல்காந்தி தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர்களிடம் 'சூம்' காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தியதில், தி.மு.கவுடன் அனுசரித்துப் போகவேண்டும் என்று கூறியதாகச் சொல்லப்பட்ட நிலையில், இன்று மாலை தி.மு.க தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டது.
இந்த ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் குண்டுராவ், தி.மு.க தலைவர் ஸ்டாலினை சந்தித்தோம். அண்மையில் தமிழக காங்கிரஸ் தலைவர்களுடன் ராகுல்காந்தி விவாதித்து இருந்தார். தேர்தல் பரப்புரையில் பங்கேற்க தமிழகம் வரவிருக்கும் ராகுல்காந்தியின் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பங்கேற்க, தி.மு.க தலைவர் ஸ்டாலினை அழைத்தோம். காங்கிரஸுக்கு இந்தத் தேர்தலில் எத்தனை தொகுதிகள் என்பது பற்றி இந்த ஆலோசனையில் விவாதிக்கப்படவில்லை என்றார்.

அதன் பிறகு, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, இந்தச் சந்திப்பின் முக்கிய நோக்கம், எங்கள் தலைவர் ராகுல் காந்தி தமிழகம் வர இருக்கிறார். அதற்கான ஏற்பாடுகளை தமிழக காங்கிரஸ் செய்துகொண்டிருக்கிறது. தினேஷ் குண்டுராவ் அதன்பொருட்டு இங்கே வருகை புரிந்து, ராகுல் காந்தி கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஸ்டாலின் மற்றும் பிற கூட்டணிக் கட்சித் தலைவர்களும் கலந்து கொள்ள அழைப்பதற்காக அவர் வந்திருக்கிறார். இதைத்தவிர தேர்தலை பற்றியோ தேர்தலில் யார் யாருக்கு எந்தெந்த தொகுதி என்பது பற்றியோ நாங்கள் பேசவில்லை. அதற்கான அவசியமும் இல்லை" என்றார்.
அப்போது செய்தியாளர் ஒருவர் புதுச்சேரி, திமுக - காங்கிரஸ் பிரச்சனை குறித்து கேள்வி எழுப்ப... ''புதுச்சேரி நன்றாக இருக்கிறது'' எனச் சிரித்துக் கொண்டே நகர்ந்தார்.