
ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள விளக்கேத்தி, உச்சிமேடு அடுத்த வெளாங்காட்டு வலசு பகுதியில் தோட்டத்து வீட்டில் தனியாக வசித்த ராமசாமி, அவரது மனைவி பாக்கியம்மாள் நகைக்காக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பல அரசியல் கட்சியினரும் கொலையாளிகளை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், நகைக்காக கணவன் மனைவி என இருவரும் அடித்து கொல்லப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்தது. இந்த கொலை குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளைப் பிடிக்க 12 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளிகள் 3 பேரை நேற்று (08-05-25) போலீசார் கைது செய்தனர்.
இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளைப் பிடிப்பதற்காக சிசிடிவி கேமரா காட்சிகளை போலீஸ் ஆய்வு செய்த போது, 3 பேர் ஒன்றன் பின் ஒன்றாக சம்பவ இடத்திற்கு வந்திருந்தது தெரியவந்தது. அதன்படி, தொடர் தேடுதல் வேட்டையில், ஈரோடு மாவட்டம் அரச்சலூரைச் சேர்ந்த ஆச்சியப்பன் (48), மாதேஸ்வரன் (53), ரமேஷ் (52) ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து, கொள்ளையடிக்கப்பட்ட திருட்டு நகைகளை உருக்கிக் கொடுத்ததாக நகைக் கடை உரிமையாளர் ஞானசேகரனை இன்று (19-05-25) போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில், சிவகிரி இரட்டைக் கொலை வழக்கில் சிக்கியவர்கள் 6 மாதங்களில் 5 பேரைக் கொன்று நகைகளை கொள்ளையடுத்தியுள்ளனர் என்பது போலீஸ் வாயிலாக தெரியவந்துள்ளது. இது குறித்து மேற்கு மண்டல ஐஜி செந்தில்குமார் ஈரோட்டில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “ஈரோடு வயதான தம்பதியை மர்ம நபர்கள் கொலை செய்து 10 பவுன் தங்க நகைகளை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் பலகட்ட விசாரணை நடத்தினோம். சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் அரச்சலூர் பகுதியைச் சேர்ந்த ஆச்சியப்பனைப் பிடித்து விசாரித்தோம். அதில் அவர், அதே பகுதியைச் சேர்ந்த மாதேஸ்வரன், ரமேஷ் ஆகியோருடன் சேர்ந்து இந்த கொலை கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டார். இதனையடுத்து, மூன்று பேரும் தங்கள் செய்த குற்றச் செயல்களை ஒப்புக்கொண்டனர். அதன்படி, அவர்களை கைது செய்துள்ளோம். இவர்கள் கொள்ளையடித்த திருட்டு நகைகளை, நகை கடை உரிமையாளர் ஞானசேகரன் என்பவர் உருக்கி கொடுத்துள்ளார். அவரையும் கைது செய்திருக்கிறோம்.
இவர்களிடம் மேற்கொண்டு விசாரணை நடத்தியதில், கடந்தாண்டு இறுதியில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே நகைகளை கொள்ளையடித்து தெய்வ சிகாமணி (76), அவருடைய மனைவி அலமேலு (70), இவர்களது மகன் செந்தில் குமார் (48) ஆகியோரை தாங்கள் தான் கொலை செய்ததாக அவர்கள் கூறியிருக்கிறார்கள். அந்த வழக்கு சிபிசிஐடி விசாரணையில் இருக்கிறது. இது இல்லாமல், வெவ்வேறு பகுதிகளில் வேறு சில குற்றச் சம்பவங்களையும் தாங்கள் செய்துள்ளதாக இவர்கள் கூறியிருக்கிறார்கள். அது பற்றியும் விசாரணை நடத்தி வருகிறோம். இதில், சிவகிரி வழக்கில் இவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். திருடப்பட்ட நகைகள், உருக்கப்பட்ட நகைகள், பயன்படுத்தப்பட்ட ஆயுதம், வாகனம், இறந்து போனவருடைய செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.