
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே மீரான் குளம் சிந்தாமணி இடையேயான சாலையில் கடந்த சனிக்கிழமை(17.5.2025) மாலை 5 மணியளவில் கார் சென்று கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி சாலையோரத்தில் இருந்த 50 அடி ஆழமுள்ள திறந்த வெளி தரைமட்ட கிணற்றில் எதிர்பாராத விதமாக பாய்ந்தது. இதில் காரில் பயணித்த எட்டு பேரும் நீரில் மூழ்கினர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புப் படையினர் கிணற்றில் தத்தளித்த எஸ்தர் ஹெர்சோம்(29), சைனி கிருபாகரன்(26), ஜெனிட்டா(25) ஆகிய மூன்று பேரை உயிருடன் மீட்டனர். ஜேசிபி இயந்திரம் மற்றும் நீர் மூழ்கி வீரர்கள் மூலம் 5 மணி நேரத் தொடர் மீட்பு பணிக்கு பின்னர் காரையும், நீரில் மூழ்கி உயிரிழந்த சந்தோஷ் மகன் ரவி கோயில் பிச்சை (60), இவரது மனைவி ஹெப்சிபா கிருபா (49) தேவதாஸ் மகன் மோசஸ் (50), இவரது மனைவி வசந்தா (49) மற்றும் ஒன்றரை வயது குழந்தை ஸ்டாலின் ஆகிய ஐந்து பேரையும் சடலமாக மீட்டனர்.
உயிரிழந்தவர்களின் சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து சாத்தான்குளம் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிணற்றில் காருடன் மூழ்கி ஐந்து பேர் உயிரிழந்த துயர சம்பவம் சாத்தான்குளம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த துயர சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதனிடையே திறந்த நிலையில் சாலையோரத்தில் உள்ள பாதுகாப்பற்ற கிணறுகளை கணக்கெடுப்பு செய்து வருவாய் துறையினர், உள்ளாட்சித் துறையினர், நெடுஞ்சாலைத் துறையினர் மூடி இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் இந்த பணியை சரிவர செய்யாததால் இந்த துயர சம்பவம் நடந்தேறி உள்ளது. சாலையோர தரைமட்ட கிணறுகளை மூட வேண்டும் என பல்வேறு அரசு உத்தரவுகள் அமலில் உள்ள நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இது போன்ற திறந்த வெளி கிணறுகள் பாதுகாப்பற்ற நிலையில் சாலை ஓரங்களில் மூடப்படாமல் இருந்து வருகிறது. மாவட்ட ஆட்சியர் நேரடி கள ஆய்வு செய்து மெத்தனப்போக்குடன் செயல்பட்ட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்படும் என சமூக செயற்பாட்டாளர் காந்திமதி நாதன் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்திற்கு இடையே, கிணற்றுக்குள் பாய்ந்த காரில் 2 பைகளில் நகைகள் வைத்திருந்ததாகவும், அவை அனைத்தும் தண்ணீரில் மூழ்கியதாகவும் உயிர் தப்பியவர்கள் போலீசில் தெரிவித்தனர். இதனையடுத்து, நேற்று மின்மோட்டார் மூலம் கிணற்றிலிருந்த தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டது. காலை 10 மணியளவில் தொடங்கிய இந்த பணியானது, மாலை 3 மணி அளவில் முடிவடைந்தது. அதன்பின் நகையை மீட்கும் பணிக்காக சாத்தான்குளம் மற்றும் நாகர்கோவில் இருந்து மீட்புப் பணி வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். அதன்பின் வீரர்கள் கயிறு கட்டி கிணற்றுக்குள் இறங்கி நகை வைக்கப்பட்டிருந்த 2 பைகளை மேலே கொண்டு வந்தனர். அந்த பையில் சுமார் 45 பவுன் நகைகளை மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் அந்த நகைகள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர் - எஸ்.மூர்த்தி