வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டை காரை பகுதியை சேர்ந்தவர் வஜ்ஜிரவேல். இவரது மனைவி ராணி. 70 வயதாகும் ராணி, சில வீடுகளில் வீட்டு வேலை செய்து அதில் வரும் வருமானத்தில் வாழ்ந்து வருகிறார்.

இவருக்கு சுகுணா என்கிற மகளும், ராஜ்குமார் என்கிற மகனும் உள்ளனர். சுகுணாவுக்கு திருமணம்மாகிவிட்டது. இவர் தனது தாய் வீட்டுக்கு அருகிலேயே குடிசைப்போட்டு தனது குடும்பத்தோடு வசித்து வருகிறார். ராணியின் மகன்க்கு இன்னும் திருமணம்மாகவில்லை. இதனால் தனது தாயாரோடு வசித்து வருகிறார்.

ஏப்ரல் 25ந்தேதி நள்ளிரவு திடீரென ராணியின் குடிசை வீடு தீப்பிடித்து எரிந்தது. இந்த தீ அடுத்தடுத்த வீடுகளுக்கும் பரவியது. தீ பற்றியதை பார்த்து ராணியும், அவரது மகன் ராஜ்குமாரும் வீட்டுக்குள் இருந்து வெளியே ஓடிவந்துள்ளனர். அப்படி ஓடிவந்தபோது அந்த குடிசை வீட்டிற்குள் இருந்த மண் குழியில் கால் தடுத்து ராணி கீழே விழுந்துள்ளார்.
இதனை கவனிக்காமல் ராஜ்குமார் வெளியே ஓடிவந்துள்ளார். பக்கத்து வீட்டில் இருந்த சுகுணாவும் வெளியே வந்துள்ளார். இவர்களின் கதறல் அக்கம் பக்கம் வீட்டுக்காரர்களும் வெளியே வந்துள்ளனர். தீ பற்றிய குடிசைக்குள் சென்று தன் தாயை ராஜ்குமார் காப்பாற்ற முயல, அதற்குள் தீ குடிசை முழுவதும் பரவி, ராணி உடல் முழுவதும் பற்றி எரிந்துள்ளார்.

தங்களது வீடுகளில் இருந்த தண்ணீரை கொண்டு வந்து எரிந்த குடிசை மீது ஊற்றியும் தீ அணையவில்லை. தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைத்துள்ளனர்.
ஏப்ரல் 26ந்தேதி காலை தகவலை கேள்விப்பட்டு ராணிப்பேட்டை எம்.எல்.ஏவான திமுக மா.செ காந்தி நேரில் சென்று அந்த குடும்பத்துக்கு ஆறுதல் கூறி நிதியுதவி தந்துள்ளார். குடிசை வீடுகளே இல்லையென சட்டமன்றத்தில் முழங்குகிறது ஆளும்கட்சி. ஆனால், குடிசை வீட்டில் வசித்து தீக்கு இரையாகியுள்ளார் ஒரு பெண்மணி. என்னச்சொல்லப்போகிறது அரசு நிர்வாகம்.