
அண்மையில் நெல்லை மாவட்டத்தில் ஓய்வு பெற்ற எஸ்.ஐ ஜாகிர் உசேன் பிஜிலி காலை நேரத்தில் தொழுகையை முடித்துவிட்டு வீடு திரும்புகையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த வழக்கில் பலர் கைது செய்யப்பட்ட போதும் வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் கிருஷ்ணமூர்த்தி என்கிற முகமது தௌபிக்கை காவலில் எடுத்து விசாரிக்க நெல்லை போலீசார் அனுமதி கோரியிருந்த நிலையில் நீதிமன்றம் அதற்கான அனுமதியை வழங்கி இருக்கிறது.
வக்பு சொத்து பிரச்சனை காரணமாக ஜாகிர் உசேன் பிஜிலி கொலை செய்யப்பட்ட நிலையில் இது தொடர்பாக மொத்தம் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏழு பேரும் நீதிமன்ற காவலில் உள்ள நிலையில் முக்கிய குற்றவாளியான கிருஷ்ணமூர்த்தி என்ற முகமது தௌபிக்கை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வேண்டும் என காவல்துறை தரப்பில் நெல்லை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தியை இன்று முதல் நாளை மதியம் 1:30 மணி வரை ஒருநாள் போலீசார் கஸ்டடியில் எடுத்து விசாரணை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.