
டெல்லியில் நடைபெற இருக்கும் நிதி ஆயோக் கூட்டத்தை இதுவரை புறக்கணித்து வந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த முறை கலந்து கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் பலமுறை நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணித்த முதல்வர் இந்த முறை கலந்து கொள்வது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார் பாஜக சட்டமன்ற உறுப்பினரான வானதி சீனிவாசன்.
கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இது குறித்த கேள்விக்குப் பதிலளித்துப் பேசுகையில், ''நிதி ஆயோக் நிகழ்ச்சிகளை இதுவரை புறக்கணித்து வந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இப்பொழுது ஏன் செல்கிறார்? இந்த மாற்றம் எதனால் நடந்தது. அந்த கேள்விதான் எல்லாருடைய மனதிலும் இருக்கிறது. தமிழகத்தினுடைய கருத்துக்களை முன் வைக்க வேண்டிய இடத்தில் எல்லாம் நம்முடைய முதல்வர் புறக்கணித்துவிட்டு, இப்பொழுது ஏன் செல்கிறார். மத்திய அரசு கடந்த நான்கு வருடங்களாக தமிழகத்திற்கு எந்தவித பாரபட்சமும் இல்லாமல் நிதி கொடுத்திருக்கிறது என அவர் ஒத்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் இவர்களுக்கு வேறு ஏதோ ஒரு தனிப்பட்ட காரணம் இருக்க வேண்டும். இதைத்தான் பாஜக கேள்வியாக எழுப்புகிறது'' என்றார்.