
'ரெய்டைப் பார்த்து யாருக்கு பயம்?' என கேள்வி எழுப்பி எடப்பாடி பழனிசாமி சமூகவலைத்தள பக்கமான 'எக்ஸ்' பக்கத்தில் பதிவு ஒன்றை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், 'முந்தைய மூன்று ஆண்டுகள் நிதி ஆயோக் கூட்டங்களை 'தமிழ்நாடு புறக்கணிக்கப்படுகிறது' என வீர வசனம் பேசி, தமிழ்நாட்டின் முதல்வராக, தமிழ்நாட்டின் நியாயமான நிதி உரிமையைப் பெறச் செல்லாத நீங்கள், இப்போது மட்டும் செல்ல வேண்டிய காரணம் என்ன? தமிழ்நாடா? இல்லவே இல்லை. உங்கள் குடும்பம் தானே? ரெய்டைப் பார்த்து யாருக்கு பயம்? ஸ்டாலின் அவர்களே. அது கண்ணாடி!... உங்களைப் பார்த்து நீங்களே ஏன் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள்?
டாஸ்மாக்கில் "தம்பி" அடித்த கொள்ளையில் உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் பங்கு இருக்கிறதோ? என்ற சந்தேகம் மக்களிடையே வலுவாக இருக்கிறது. உங்களுக்கு தெம்பு இருந்தால், திராணி இருந்தால், வக்கு இருந்தால், அதற்கு முதலில் பதிலை சொல்லிவிட்டு, மற்றதைப் பேசுங்கள்! உங்களின் எல்லா மடைமாற்று பேச்சுகளுக்கும் பதில் அளிக்க நான் தயார்! ஆனால், மக்களுக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்! மீண்டும் கேட்கிறேன்- யார் அந்த தம்பி?' என தெரிவித்துள்ளார்.

அதேபோல் கோவையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பேசுகையில், ''நிதி ஆயோக் நிகழ்ச்சிகளை இதுவரை புறக்கணித்து வந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இப்பொழுது ஏன் செல்கிறார்? இந்த மாற்றம் எதனால் நடந்தது. அந்த கேள்விதான் எல்லாருடைய மனதிலும் இருக்கிறது. தமிழகத்தினுடைய கருத்துக்களை முன் வைக்க வேண்டிய இடத்தில் எல்லாம் நம்முடைய முதல்வர் புறக்கணித்துவிட்டு, இப்பொழுது ஏன் செல்கிறார். மத்திய அரசு கடந்த நான்கு வருடங்களாக தமிழகத்திற்கு எந்தவித பாரபட்சமும் இல்லாமல் நிதி கொடுத்திருக்கிறது என அவர் ஒத்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் இவர்களுக்கு வேறு ஏதோ ஒரு தனிப்பட்ட காரணம் இருக்க வேண்டும். இதைத்தான் பாஜக கேள்வியாக எழுப்புகிறது'' என்றார்.

இந்நிலையில் முதல்வர் டெல்லி பயணம் குறித்த விமர்சனத்திற்கு அமைச்சர் மனோ தங்கராஜ் பதிலளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்து பேசிய அவர், ''எங்கள் ஊரில் ஒரு பழமொழி சொல்வார்கள் 'வழக்கு புடிச்சாலும் சத்தம் போடும்; வெட்டு புடிச்சாலும் சத்தம் போடும்' என்பார்கள். அப்படி இருக்க கூடாது. ஒரு நல்ல கருத்தை சொல்ல முதல்வர் போகிறார் என்றால் அவரை பாராட்ட வேண்டும். அவர் என்னென்ன காரியங்களை முன்வைக்க வேண்டும் என்ற கருத்தை சொல்ல வேண்டும். நான் ஒரு மீட்டிங் போகிறேன் என்றால் அதற்கு பாராட்டு சொல்லலாம். மீட்டிங்கில் இந்த மாதிரி விஷயங்களை ஹைலைட் பண்ணுங்கள் என்று சொல்லலாம். அதை மிஞ்சி சொல்வதற்கு எதுவும் இல்லை. அப்பொழுது கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் நிதி ஆயோக் கூட்டங்களில் இங்கிருந்து சென்றவர்கள் அங்கு குடும்ப பிரச்சனை தான் பேசிக் கொண்டிருந்தார்களா கடந்த 10 வருடமாக? எங்களுக்கு தெரியாது. நிதி ஆயோக் கூட்டத்தில் குடும்பக்கதை எல்லாம் பேச முடியாது. நிதியை பற்றி தான் பேச முடியும். திமுக அமைச்சர்கள் எப்படி கடந்த காலங்களில் பேசினார்கள் என்பதற்கு வரலாறு இருக்கிறது.வரலாற்றை தெரிந்து கொண்டு பேசுங்கள்'' என்றார்.