
சென்னை மெரினாவில் நடந்த விமான சாகச நிகழ்ச்சியில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தமிழக டிஜிபிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சென்னை மெரினாவில் மிகப்பெரிய அளவில் விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த விமான சாகச நிகழ்ச்சியை பார்க்கக் கூடினர். இதனால் சென்னை மெரினா பீச்சில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றும் வெயிலின் தாக்கம் காரணமாக ஐந்து பேர் உயிரிழந்தனர். சுமார் பத்துக்கும் மேற்பட்டோர் இதில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
விமான சாகச நிகழ்ச்சியை முறையாக முன்னேற்பாடு செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதேபோல் தேசிய மனித உரிமை ஆணையத்திலும் வழக்கறிஞர் எஸ்.கே.சாமி என்பவர் புகார் கொடுத்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் விமான சாகச நிகழ்ச்சி உயிரிழப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு தமிழக டிஜிபிக்கு தேசிய மனித உரிமை ஆணையம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.