
விருதுநகர் அருகிலுள்ள சத்திரரெட்டியபட்டியில் நடந்த மக்கள் கிராம சபைக் கூட்டத்தில், திருச்சுழி எம்.எல்.ஏ. தங்கம் தென்னரசு கலந்துகொண்டு பேசியபோது,
“எடப்பாடி தலைமையில் நடந்த 5 வருட ஆட்சியில் அரசாங்க கஜானா காலியாகிவிட்டது. அதே நேரத்தில், மந்திரிகளின் கஜானா கூடிவிட்டது. இந்தப் பணமெல்லாம் எங்கிருந்து வந்தது என்று நாங்கள் கேட்டதற்கு, 'கிராம சபையைக் கூட்டக்கூடாது' என்று சொல்கிறார்கள். இன்றைக்கு மக்களிடத்திலே நாங்கள் தைரியமாக வருகிறோம் என்றால், உங்களுக்கு நல்ல காரியங்கள் செய்திருக்கிறோம். மீண்டும் வருகிறபோது இன்னும் பல நல்ல காரியங்கள் செய்வோம் என்பதனால்.

ஆனால்.. இந்தத் திராணி ஆளுங்கட்சிக்கு இருக்கிறதா என்றால் இல்லை. அரசாங்க கஜானாவை நீங்கள் காலி செய்து இருக்கின்றீர்கள். தமிழரின் பெருமையை மறைத்துள்ளீர்கள். இன்றைக்கு பார்த்தீர்கள் என்றால், திருவள்ளுவருக்கு பட்டை போட்டு, காவி உடை அணிவித்து கல்வித் தொலைக்காட்சியில் வருகிறது. திருவள்ளுவரை எத்தனை ஆண்டுகளாகப் பார்க்கிறோம். திருவள்ளுவர் என்றைக்கு காவிச் சட்டை போட்டார்? ஆக, நம்முடைய பண்பாட்டு விஷயங்களை அழிக்கக்கூடிய ஆட்சியாக இந்த ஆட்சி இருக்கிறது. மொத்தத்தில், ஆளுமை இல்லாத ஆட்சி. உங்களைக் காப்பாற்ற முடியாத ஆட்சி. உங்களுக்காகக் குரல் கொடுக்காத ஆட்சி. இந்த ஆட்சி நீடிக்கக் கூடாது. நீடிக்கும் என்று சொன்னால் தமிழ்நாடு சுடுகாடாக மாறிவிடும்.
தேர்தல் 2021 மார்ச் மாதத்தில் வருகிறது. உனடியாகச் சொல்கிறார்கள். தைப்பொங்கலுக்கு 2,500 ரூபாய் கொடுக்கிறோம் என்று. அந்த 2,500 ரூபாயையும் அரசாங்க ரேசன் கடையில் கொடுக்க மாட்டோம்; ஆளுங்கட்சியினரை வைத்து டோக்கன் கொடுப்போம் என்று சொல்கிறார்கள். அப்படியென்றால், தேர்தலுக்கு முன்பாகவே, உங்கள் முகத்திரை கிழிந்து தொங்கிக்கொண்டிருக்கிறது. எதற்காகக் கொடுக்கிறீர்கள் பணம்? இத்தனை காலம் எதுவும் செய்யாமல் இருந்தார்கள். இத்தனை நாளும் நாங்கள் பட்ட கஷ்டத்தைக் கண்டுகொள்ளாமல் இருந்த அரசு, இன்று தேர்தலுக்காகச் செய்கிறது. நாங்கள் நிச்சயமாக நீதிமன்றத்துக்குப் போவோம்” என்றார்.