Skip to main content

தேர்தல் வெற்றிக்காக தெய்வங்களைத் தேடுகிறார்!  -கே.டி.ராஜேந்திரபாலாஜி தீவிரம்! 

Published on 26/03/2019 | Edited on 26/03/2019

 

நேற்று திருச்சுழி அருகில் சாலை விபத்தில் சிக்கி,  பெண் குழந்தை செல்வராணி, அவளது தந்தை பாலமுருகன் மற்றும் ஒருவர் என மூன்றுபேர் காயங்களுடன் கிடந்தபோது,  அவ்வழியே வந்த அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, தன்னுடைய காரில் ஏற்றிச்சென்று, மூவரையும் திருச்சுழி அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அமைச்சரின் இந்த மனிதநேயம்,   வலைத்தளங்களில் பதிவுகளாகவும்,  நாளிதழ்களிலும் செய்தியாகவும் வந்தது.

 

m


அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியின் கார் ஏன் திருச்சுழி சென்றது? ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில்தானே திருச்சுழி இருக்கிறது? விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்கு அப்பால் எதற்காக அவர் செல்ல வேண்டும்? தேர்தல் பணி குறித்து விவாதிப்பதற்காகச் சென்றார் என்கிறார்களே? என்பது போன்ற கேள்விகள் எழுந்தன. விசாரித்தபோது,  அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியோடு விருதுநகர் தொகுதி தேமுதிக வேட்பாளர் அழகர்சாமியும், சாத்தூர் அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மனும் சென்ற விபரத்தை அறிய முடிந்தது. 

 

m

 

தெய்வ நம்பிக்கை, ஜோதிடம், மந்திரம்,   நியுமராலஜி மற்றும் வாஸ்து போன்றவற்றில் தொடர்ந்து தீவிரம் காட்டி வருபவர் கே.டி.ராஜேந்திரபாலாஜி. அவருடைய சிஷ்யரான சாத்தூர் வேட்பாளர் எம்.எஸ்.ஆர். ராஜவர்மனும் அதே ரகம்தான். தேர்தல் வெற்றிக்காக தொடர்ந்து மஞ்சள் சட்டையை மட்டுமே அணிந்து வருகிறார் ராஜவர்மன்.  எந்த தெய்வத்தை வேண்டினால் தேர்தல் வெற்றி சாத்தியம் என்பதை அனுபவரீதியாக உணர்ந்தவராம் கே.டி.ராஜேந்திரபாலாஜி. அதனாலேயே, வேட்பாளர்கள் இருவரையும், சிவகங்கை மாவட்டம் -  கொல்லங்குடியில் உள்ள வெட்டுடையார் காளி கோவிலுக்கும், ராமநாதபுரம் மாவட்டம் – உத்தரகோசமங்கையில், மரகதத் திருமேனி நடராசர் அருள்புரியும் மங்களேசுவரி சமேத மங்களேசுவரர் சிவன் கோவிலுக்கும் அழைத்துச் சென்றிருக்கிறார். தேர்தல் வெற்றிக்கான வழிபாடு நடத்திவிட்டுத் திரும்பியபோதுதான், திருச்சுழி பகுதியில் விபத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்றி, அரசு மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார். 

 

‘மெகா கூட்டணி என்று  அதிமுகவினர் சொல்லிவரும்  தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக, பா.ஜ.க., பா.மக., தேமுதிக, த.மா.கா. புதிய நீதிக்கட்சி, என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் புதிய தமிழகம் போன்ற கட்சிகள் உள்ளன. ஜாதகம் கணித்து வேட்பாளர்களைத் தேர்வு செய்தவர் ஜெயலலிதா. மக்களோடும் தெய்வத்தோடும் மட்டுமே கூட்டணி என்று சொன்னவர் விஜயகாந்த். அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியும் தன் பொறுப்பிலுள்ள இரண்டு வேட்பாளர்களை, தெய்வத்தோடும் கூட்டணி காணச்செய்து, தேர்தல் வெற்றிக்காக வழிபாடு நடத்தி வருகிறார்.  

 

சார்ந்த செய்திகள்