Skip to main content

பாராளுமன்றத்தில் கஜா புயல் பாதிப்பு குறித்து விவாதிக்க தயாரா? ராஜா சவால்

Published on 07/12/2018 | Edited on 07/12/2018
c

 

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அனைத்துக் கட்சியினரும் கலந்து கொண்டனர்.  ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு தென்னை சங்கத்தின் மாநில பொது செயலாளர் மாசிலாமணி தலைமை வகித்தார். ஆலங்குடி தொகுதி எம்.எல்.ஏ மெய்யநாதன் முன்னாள் எம்.எல்.ஏக்.கள் ராஜசேகரன், புஷ்பராஜ், முன்னால் அமைச்சர் சந்திரசேகரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் மாதவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி ராஜா எம்.பி. பேசியதாவது..  ‘’கஜா புயலால் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பாதிப்புகளை  மத்தியக் குழு ஆய்வு செய்தது. ஆனால் அந்தக் குழுவின் அறிக்கை மீது எந்த விதமான நடவடிக்கையை எடுத்துள்ளது என்பதை பகிரங்கமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.

 

சேதம் அடைந்த தென்னை மரங்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரணம் போதுமானதாக இல்லை. எனவே தலா ரூ. 20 ஆயிரம் வீதம் வழங்கவேண்டும். புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை பேரிடர் பாதித்த மாவட்டங்களாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். விவசாயிகளின் அனைத்து கடன்களையும், மகளிர் சுய உதவி குழு கடனையும் கல்விக் கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும். புயலால் பாதிக்கப்பட்டு 20 நாட்களைக் கடந்தும்கூட மத்திய, மாநில அரசுகள் மக்களுக்கு எதையுமே செய்யவில்லை. அதனால்தான் தற்போது ஆங்காங்கே மக்கள் போராட தொடங்கியுள்ளனர். அரசு அறிவித்துள்ள நிவாரணமே போதாது என்ற நிலையில், அரசு அறிவித்த தொகையைக் கூட கொடுப்பதற்கு முன்வரவில்லை.

 

c

 

தமிழ்நாட்டில் கடந்த காலங்களில் ஏற்பட்ட தானே, ஒக்கி புயல் பாதிப்புகளின் போது மத்திய அரசு எப்படி நடந்து கொண்டதோ அதே போன்று தான் இந்த புயல் பாதிப்பு நிவாரணம் வழங்குவதிலும் நடந்து கொள்கிறது. கேட்கும் தொகையை கொடுக்காத மத்திய அரசு மீது மாநில அரசு அழுத்தம் கொடுக்க ஏன் மறுக்கிறது?. 

 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கொடுக்கும் அழுத்தத்தைக்கூட மாநில அரசு கொடுக்கவில்லை. நடைபெற உள்ள நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் கஜா புயல் பாதிப்பு குறித்து விவாதிக்க வேண்டும். இந்த கோரிக்கையை அவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக வலியுறுத்தும். ஆனால் இது பற்றி பா.ஜ.க விவாதிக்க விடாமல் கோயில் கட்டுவது பற்றியே விவாதிப்பார்கள். பா.ஜ.க கஜா புயல் பாதிப்பு குறித்து விவாதிக்க தயாராக? என்று கேள்வி எழுப்பினார்.


தொடந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் சுயஉதவிக்குழு கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டுமென  ராஜாவிடம் வலியுறுத்தினர். மேலும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலிசாரிடம் கஜா புயல் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்ததுடன் அவர்கள் பல நாட்களாக விடுப்பின்றி வேலையில் ஈடுபட்டுள்ளதை அறிந்து பாராட்டினார்.

 

cpi

 

 ஆர்ப்பாட்டத்தில் ஆலங்குடி தொகுதி எம்.எல்.ஏ மெய்யநாதன் பேசும் போது,   இத்தனை பெரிய இழப்பை விவசாயிகள் சந்தித்துள்ளனர். ஆனால் அரசு இயந்திரம் மொத்தமாக செயல்பட வில்லை. விவசாயிகள் செய்வதறியாது நிர்கதியாக நிற்கிறார்கள். ஆறுதல் சொல்ல வேண்டிய மத்திய, மாநில அரசுகள் ஒதுங்கி நிற்கிறது.  அதனால் அந்தந்த பகுதி இளைஞர்கள் அனைத்துப் பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகளுக்கு சரியான நிவாரணம் கிடைக்கவில்லை. சேலத்தில் ஒரு தென்னை மரத்துக்கு ரூ. 50 ஆயிரம் வழங்க முன்வந்த அரசுகள் டெல்டா விவசாயிகளுக்கு ரூ. 1100 என்று சொல்வது விவசாயிகளில் வேற்றுமை காண்கிறது. கணக்கெடுப்பு பணிகளும் முறையாக நடைபெறவில்லை. அதனால் விரைவில் ஒட்டுமொத்த விவசாயிகளையும் இணைத்து பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றார்.


        

சார்ந்த செய்திகள்