
தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக இருந்த கே.எஸ்.அழகிரியின் பதவிக்காலம் முடிந்ததைத் தொடர்ந்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் புதிய மாநில தலைவராக செல்வப்பெருந்தகை தேர்வு செய்யப்பட்டார்.
மத்தியில் ஆளும் பாஜகவிற்கு எதிராக ஆர்ப்பாட்டம், போராட்டம் என அடுத்தடுத்த முன்னெடுப்புகளை மேற்கொண்டாளும், செல்வப்பெருந்தகை மீது கட்சியின் சில முக்கிய நிர்வாகிகள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. அதே சமயம் சில மாவட்டச் செயலாளர்கள் சிலர் செல்வப்பெருந்தகையை தலைவர் பதவியில் இருந்து மாற்ற வேண்டும் என்று டெல்லி தலைமையிடம் புகார் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரத்திடம் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “எனக்கு அந்த பதவி கொடுக்கவே மாட்டார்கள், நான் ஒரு திசையில் எடுத்துச் செல்வேன். ஒரு ஸ்டைலில் நடத்திச் செல்வேன். அதனால் என்னைப் பொறுத்த வரையில் தமிழ்நாட்டில் இருக்கும் காங்கிரஸ் கட்சியோ, டெல்லியில் இருக்கும் அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியோ தயாராக இல்லை. அதனால் என்னை அந்த பதவியில் நியமிக்க மாட்டார்கள் என்று உறுதியாக இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.