Skip to main content

‘அமைச்சர் பொன்முடி மன்னிப்பு கேட்பதால் எந்த பயனும் இல்லை’ - சென்னை உயர்நீதிமன்றம்

Published on 17/04/2025 | Edited on 17/04/2025

 

Justice Anand Venkatesh says There is no point in Minister Ponmudi apologizing

தமிழக வனத்துறை அமைச்சராக இருக்கும் பொன்முடி கடந்த ஞாயிற்றுகிழமை நடந்த கட்சியின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியவர், பெண்கள் குறித்தும், சைவ - வைனவ சமயம் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில் பலரும் எதிர்வினையாற்றி வந்தனர். சொந்த கட்சியான திமுகவிலே கண்டன குரல்கள் எழுந்தது. 

அதனை தொடர்ந்து, திமுக துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டு திருச்சி சிவா திமுகவின் துணைப் பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டிருந்தார். இதையடுத்து, அமைச்சர் பொன்முடி தன்னுடைய பேச்சுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக அறிக்கை வெளியிட்டிருந்தார். தலைகுனியும் சூழல் ஏற்பட்டுவிட்டது குறித்து வருந்துவதாகவும், மனம் புண்பட்ட அனைவரிடமும் நான் பேசிய பேச்சுக்கு மீண்டும் மீண்டும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் எனவும் தெரிவித்திருந்தார். 

Justice Anand Venkatesh says There is no point in Minister Ponmudi apologizing

இந்த நிலையில், அமைச்சர் பொன்முடியின் சர்ச்சை பேச்சு குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார். இது குறித்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளதாவது, “பொன்முடியின் பேச்சு துர்திஷ்டவசமானது. அமைச்சர் பொறுப்பை வகிப்பவர் பொறுப்புடன் பேச வேண்டாமா?. அமைச்சர் பொன்முடி மன்னிப்பு கேட்பதால் எந்த பயனும் இல்லை. இந்த பேச்சை வேறு எவரேனும் பேசி இருந்தால் 50 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கும். 

ஊழலை எப்படி சகித்துக்கொள்ள முடியாதோ அதே போல வெறுப்பு பேச்சையும் சகித்துக்கொள்ள முடியாது. ஏற்கெனவே, எச்.ராஜா, கஸ்தூரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புகார் அளித்தாலும், இல்லாவிட்டாலும் வழக்குப்பதிவு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் பொன்முடியின் வெறுப்பு பேச்சு தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதா?. மாலை 4.45 மணிக்கு விளக்கம் அளிக்க வேண்டும்” என தமிழக டிஜிபிக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்