Skip to main content

மீனவர் உயிரிழப்பு: மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

Published on 24/04/2018 | Edited on 25/04/2018


தூத்துக்குடியில் நடுகடலில் மீனவர் உயிரிழப்புக்கு காரணமான கப்பலை கண்டறிந்து கப்பல் உரிமையாளரிடம் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு பெற்றுதர கோரிய வழக்கில் மத்திய மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவு.

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த நாகம்மாள் உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், "என் கணவர் முருகேசன். இவரின் சொந்த மீனவ கிராமமான இரணியன்வலசையில் மீன்பிடி தொழிலில் வருமானம் குறைவாக இருந்ததால் தூத்துக்குடி மாவட்டம், தரவைக்குளம் பகுதியை சேர்ந்த மரிய நெல்சன் என்பவரிடம் 5 வருடங்களாக பணிபுரிந்தார். இந்நிலையில் என் கணவர் மற்றும் சிலர் கடந்த ஜனவரி 25 ஆம் தேதி வழக்கம்போல் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். ஜனவரி 30 ஆம் தேதி காலை 6.15 மணியளவில் கன்னியாகுமரியில் இருந்து தெற்கே 23 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது கிழக்கு திசையில் இருந்து ஒரு கப்பல் அதிவேகமாகவும், எச்சரிக்கை ஒலி எழுப்பாமலும் என் கணவர் சென்ற விசை படகின் மீது மோதியது.

இதில் என் கணவருக்கு தலையில் அடிபட்டு இறந்ததாக தெரிவித்தனர். எந்த சர்வதேச கப்பலும் அல்லது வணிக கப்பலும் 24 மைல் தூரத்திற்குள் வரக்கூடாது என சர்வதேச சட்டமும், இந்திய கடலோர எல்லை சட்டமும் கூறுகிறது. சமீபத்தில் கன்னியாகுமரி, இராமேசுவரம் போன்ற பகுதிகளில் விசைபடகு மீன்பிடி தொழில் செய்யும் இடங்களில் சர்வசாதாரணமாக சர்வதேச கப்பல்கள் உள்நுழைந்து பெரும் விபத்துகளை ஏற்படுத்துகின்றன.

எனது கணவர் உயிரிழப்புக்ககு காரணமான கப்பலை கண்டறிந்து கப்பல் உரிமையாளரிடம் இருந்து ஒரு கோடி ரூபாய் இழப்பீடு பெற்றுதர உத்தரவிடுமாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனு இன்று நீதிபதி ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது "இதுகுறித்து மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் மாதத்திற்கு ஒத்திவைத்தார்".

சார்ந்த செய்திகள்