Skip to main content

தமிழக மீனவர்களை காக்க நடவடிக்கை தேவை! ராமதாஸ்

Published on 31/12/2018 | Edited on 31/12/2018
boat




சிங்களப் படை பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழக மீனவர்களை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

 

வங்கக்கடலில் மீன்பிடிக்கச் சென்ற இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மீது சிங்களக் கடற்படையினரும், சிங்கள மீனவர்களும் இணைந்து பெட்ரோல் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர். சிங்களப் படையினரின் இத்தகைய அத்துமீறல் கண்டிக்கத்தக்கது. இதற்கு உடனடியாக முடிவு கட்டப்பட வேண்டும்.

 

இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் கூடுதலான மீனவர்கள் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் வங்கக்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். கச்சத்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த அவர்களை இலங்கைக் கடற்படையினரும், சிங்கள மீனவர்களும் சுற்றி வளைத்து  பெட்ரோல் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தினார்கள். இதனால் அச்சமடைந்த தமிழக மீனவர்கள் உயிர் பிழைக்கும் நோக்கத்துடன் உடனடியாக அங்கிருந்து தப்பித்து கரைக்கு திரும்பினார்கள்.

 

வங்கக்கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் மீது இத்தகையத் தாக்குதல் நடத்தப் படுவதும், தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படையினர் கைது செய்வதும் புதிதாக நடப்பவையல்ல. காலம் காலமாக இந்த அத்துமீறலும், கொடுமையும் தொடரும் போதிலும், அதைத் தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்பது தான் வருத்தமும், வேதனையும் அளிக்கும் விஷயமாகும்.

 

 Ramadoss

அதிலும் குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் இந்தியக் கடல் எல்லையில் நடத்தப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது இந்திய மீனவர்கள் மீது மட்டும் நடத்தப்பட்ட தாக்குதல் அல்ல. மாறாக, இந்திய இறையாண்மை மீதே நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும். இதற்கு இந்திய அரசின் பதில் என்ன? என்பது தான் தமிழக மீனவர்கள் அறிய விரும்பும் செய்தியாகும்.

 

தமிழக மீனவர்களுக்கு எதிராக சிங்கள அரசு தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த 3 ஆண்டுகளாக தமிழக மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை  திருப்பித் தர இலங்கை அரசு மறுத்து வருகிறது. அதன்பின் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டால், கண்டிப்பாக 3 மாதம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது. அடுத்தக்கட்டமாக, எல்லை தாண்டி மீன் பிடிக்கும் மீனவர்களுக்கு ரூ.1.50 கோடி வரை அபராதம் விதிக்கும் சட்டத்தை இலங்கை அரசு கொண்டு வந்து நிறைவேற்றியது. அச்சட்டத்தின்படி தமிழக மீனவர்கள் 8 பேருக்கு ரூ.60 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால், இலங்கை அரசின் இந்த அத்துமீறல்கள் எதையும் இந்தியா கண்டிக்காதது தான் இலங்கைக்கு அதீத துணிச்சலை தந்துள்ளது.

 

இலங்கைப் படையினரின் அத்துமீறல்கள் இதேபோல் தொடர்ந்தால் தமிழக மீனவர்கள் வங்கக்கடலில் மீன் பிடிக்கவே முடியாது என்ற நிலை ஏற்பட்டு விடும். இலங்கையின் அத்துமீறலுக்கு உடனடியாக முடிவு கட்டப்பட வேண்டும். இந்திய வெளியுறவுத்துறை செயலாளரை உடனடியாக இலங்கைக்கு அனுப்பி தமிழக மீனவர்கள் மீதான அத்துமீறல்களை கைவிட வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும்.  கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். 
 

 

 

 

 

சார்ந்த செய்திகள்