Skip to main content

நீட் தேர்வில் அரசே தவறு செய்கிறது -ஈஸ்வரன்

Published on 27/08/2019 | Edited on 27/08/2019

 

"அரசின் இலவச நீட் பயிற்சி வகுப்புகள் காலதாமதமாக தொடங்கப்படுவதால் அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவப்படிப்பில் சேர இடம் கிடைப்பதில்லை." என கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் கூறியுள்ளார்.

 

e r eswaran







இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

"தனியார் பள்ளிகளில் மருத்துவப்படிப்புக்கான நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் ஜூன் மாதமே தொடங்கப்பட்டு தொடர்ந்து நடந்து வருகிறது. அரசாங்க பள்ளிகளுக்கு நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் இன்னும் தொடங்கப்படவில்லை. அக்டோபர் மாதம் தான் தொடங்குவார்கள் போல் தெரிகிறது. இந்த காலதாமதம்தான் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான மருத்துவப்படிப்பு கனவுகளை தகர்த்தெறிவது. சென்ற ஆண்டு அரசாங்கத்தின் சார்பில் செப்டம்பர் மாதம் தான் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டது. அதன் காரணமாக தான் மருத்துவப்படிப்பில் சேருவதற்கு ஒருவருக்கு மட்டுமே இடம் கிடைத்தது. ஆனால் தமிழக அமைச்சர் ஒருவர் இல்லை இருவருக்கு இடம் கிடைத்திருக்கிறது என்று பெருமையாக கூறியதையும் பார்த்தோம். நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் மாணவர்களுக்கு தமிழக அரசு காலதாமதமாக தொடங்கியதே அரசு பள்ளி மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்று மருத்துவப்படிப்பில் சேர முடியாமல் போனதற்கான முக்கிய காரணம்.


இந்த ஆண்டும் அரசு பள்ளி மாணவர்களுடைய நீட் தேர்வு தேர்ச்சி விகிதம் சென்ற ஆண்டை போலதான் அமைய வாய்ப்பிருக்கிறது. அரசாங்கம் தவறு செய்துவிட்டு ஆசிரியர்கள் மீதும், மாணவர்கள் மீதும் பழியை தூக்கிப்போடுவது நியாயமல்ல. 12-ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்றும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாத காரணத்தால் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வும் தொடர்கதையாகிவிட்டது. தமிழக அரசின் அலட்சியத்தால் அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை, நடுத்தர மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும். எனவே தமிழக அரசின் இலவச நீட் பயிற்சி மையங்களில் உடனடியாக பயிற்சி வகுப்புகளை தொடங்கி அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் தயார்ப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக கல்வி அமைச்சரையும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியையும்  கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்." என்றார்.



 

சார்ந்த செய்திகள்