
பொது நிகழ்ச்சிகளில் ஆபாசமாகப் பேசி சர்ச்சைகளில் அடிக்கடி சிக்கிக் கொள்கிறார்கள் திமுகவினர். வைணவம் மற்றும் சைவ மதங்களின் குறியீடுகளை பாலியல் தொழில் உரையாடலோடு ஒப்பிட்டுப் பேசி பெரும் நெருக்கடிக்கு ஆளானார் அமைச்சர் பொன்முடி. அவருக்கு எதிரான நெருக்கடி, அமைச்சர் பதவியை காவு கேட்கும் அளவுக்கு முற்றிய வருகிறது.
பொன்முடி விவகாரமே முடியாத நிலையில், தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில் பேசிய திமுக ராஜ்யசபா எம்.பி. கல்யாணசுந்தரம், திருமணம் நடந்த நாளிலேயே குழந்தை பிறக்க வேண்டுமானால் அது வேறுவிதமாகத்தான் பிறக்கும் என்று பேசிய பேச்சு சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில், அரசு ஊழியர் ஒருவரை பொது நிகழ்ச்சியில் ஒருமையில் திமுக ஒன்றிய செயலாளர் பேசிய விவகாரம் தற்போது பூதாகரமாகி இருக்கிறது. தமிழகம் முழுவதும் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தி வருகிறது திமுக அரசு. அந்த வகையில் கடந்த வாரம் செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி அரசு சார்பில் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், திருப்போரூர் எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.பாலாஜி, திருக்கழுக்குன்றம் ஒன்றிய சேர்மன் ஆர்.டி. அரசு, சமுதாய நல அதிகாரி பகவதி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
அரசு நிகழ்ச்சிகளில், கட்சிப் பொறுப்புகளில் இருப்பவர்கள் மேடை ஏறக் கூடாது என்பது மரபு. ஆனால், திருக்கழுக்குன்றம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் தமிழ்மணி, மேடை ஏறுவேன் என அடம்பிடித்து மேடை ஏறி இந்த நிகழ்ச்சியை அவர் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டார். மேடையில் அவரது அதிகாரம் எல்லை மீறிப்போனது. நிகழ்ச்சியை முன்னின்று நடத்திய சமுதாய நல பெண் அதிகாரியான பகவதியை, ஒருமையில் மிக மோசமாக அர்ச்சித்தார் ஒன்றிய செயலாளர் தமிழ்மணி. இதனால் மன உளைச்சலுக்கு ஆளானார் அந்த பெண் அதிகாரி. தமிழ்மணியின் ஒருமை வார்த்தைகள் அரசு அலுவலர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட திமுகவினரிடம் விசாரித்தபோது, பொது நிகழ்ச்சியில் எல்லோரையும் எடுத்தெறிந்து பேசுவது தமிழ்மணியின் வழக்கமாக இருக்கிறது. அந்த பெண் அலுவலர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதாலே ஒருமையில் பேசினார் தமிழ்மணி. இதை ஜீரணிக்க முடியாத அந்த பெண் அதிகாரி, ட்ரான்ஸ்ஃபர் வாங்கிக் கொண்டுப் போய்விட்டார். இதுமட்டுமல்ல, தமிழ்மணி மீது ஏகப்பட்ட புகார்கள் இருக்கிறது.

குறிப்பாக, அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மூலம் 10 ஊராட்சிகளுக்கு 3 கோடியே 95 லட்சம் ரூபாய்க்கு திட்டப்பணிகள் வந்தது. ஒவ்வொரு ஊராட்சி மன்ற தலைவர்களிடமும் 10 சதவீதம் கறாராக கமிஷன் பெற்றே பணிகளை செய்ய அனுமதித்தார். திமுககாரர்களிடமே கமிஷன் பெறும் ஒரே ஒ.செ. இவர் தான். இதை திமுகாரர்கள் கேள்விக் கேட்டால் அதிமுகவில் உள்ள தனது நண்பர்களுக்கு வேலையை பிரித்திக் கொடுத்துவிடுகிறார். திமுக ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. இதனால் திமுகவினர் பலரும் மாற்றுக்கட்சிகளுக்கு தாவுவது அதிகரித்துவிட்டது என்று புலம்புகின்றனர் திமுகவினர்.
தற்போது இந்த விவகாரத்தை கட்சி தலைமைக்கு அனுப்பி வருகின்றனர் செங்கப்பட்டு மாவட்ட உடன்பிறப்புகள்.