Skip to main content

18 ல் 12 ஐ கைப்பற்றும் நிலையில் திமுக - உடைக்க முயலும் அதிமுக!

Published on 10/01/2020 | Edited on 10/01/2020


நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் கடந்த ஜனவரி 6ந் தேதி பதவியேற்றுக் கொண்டனர். கிராம பஞ்சாயத்தில் துணை தலைவர் தேர்வு, ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றிய குழு தலைவர், ஒன்றிய குழு துணை தலைவர், மாவட்ட ஊராட்சி குழு தலைவர், துணை தலைவர் தேர்தல் ஜனவரி 11ந்தேதி காலை அந்தந்த மாவட்ட ஊராட்சி குழு அலுவலம், ஒன்றிய குழு அலுவலகம், கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான குதிரை பேரம் பரபரப்பாக நடந்து வருகிறது. திமுகவில் இருந்து அதிமுகவிற்கும், அதிமுகவில் இருந்து திமுகவிற்கும், இரண்டு கட்சிகளும் சுயேட்சைகளையும், பிற கட்சி கவுன்சிலர்களை தங்களுக்கு சாதகமாக இழுக்கும் பணியில் தீவிரமாகவுள்ளனர். சுயேட்சைகள் பக்கம் மட்டும்மல்ல கட்சி சின்னத்தில் நின்று வெற்றி பெற்றவர்களின் தரப்பிலும் பண மழை பொய்கிறது.



திருவண்ணாமலை ஒன்றியத்தில் உள்ள 18 ஊராட்சி ஒன்றியத்தில் திருவண்ணாமலை, தண்டராம்பட்டு, கீழ்பென்னாத்தூர், ஆரணி, தெள்ளார், பெரணமல்லூர், புதுப்பாளையம், போளுர், சேத்பட் என 12 ஒன்றியங்களின் சேர்மன் மற்றும் துணை சேர்மன் பதவிகளை பிடிக்க திமுக திட்டமிட்டுள்ளது. இதில் 10 ஒன்றியங்களில் திமுக எந்தவித போட்டியும் இல்லாமல் தலைவர் மற்றும் துணை தலைவர் பதவிகளில் வெற்றி பெற்றுவிடும். இரண்டு ஒன்றியங்களில் மட்டும் தலைவர் பதவியை பிடிக்க போராடிவருகிறது. அதேநேரத்தில் அதிமுக கூட்டணி மேற்குஆரணி, செய்யார், வெம்பாக்கம், வந்தவாசி, ஜவ்வாதுமலை என 6 ஒன்றியங்களில் அதிமுக வெற்றி பெறும் நிலையில் உள்ளது. இந்நிலையில் சட்டமன்ற கூட்டத்தொடர் முடிந்து அமைச்சர் சேவூர்.ராமச்சந்திரன், திமுக மா.செவும், முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலு இருவரும், திருவண்ணாமலை திரும்பி கட்சியினருடன் தொடர்ச்சியாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். திமுக வெல்லும் இடங்களை தாங்கள் கைப்பற்ற முடியுமா என ஆளும்கட்சியான அதிமுக பிரமுர்கள் அமைச்சர் வீட்டில் ஆலோசனை நடத்துகின்றனர். 

நாம் 12 ஒன்றியங்களில் வெற்றி பெற வேண்டும் அதனை உறுதி செய்யுங்கள் என ஒ.செகளிடம் வலியுறுத்தி, கண்காணித்துக் கொண்டுள்ளார் வேலு.  வெளியூர் சுற்றுலாவில் உள்ள கவுன்சிலர்களை ஊர் திரும்பிச்சொல்லி உத்தரவிட்டுள்ளனர் இரண்டு கட்சி நிர்வாகிகளும். ஜனவரி 10ந்தேதி தங்களது ஊர்களுக்கு திரும்பும் எல்லா கவுன்சிலர்களும் ஜனவரி 11ந்தேதி காலை நேரடியாக தாங்கள் வெற்றி பெற்ற ஒன்றியங்களுக்கு சென்று மறைமுக தேர்தல் மூலம் தலைவர் மற்றும் துணை தலைவரை தேர்வு செய்யவுள்ளனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தலில் வன்முறை; 5 மாவட்டங்களில் மறுவாக்குப்பதிவு

Published on 10/07/2023 | Edited on 10/07/2023

 

West Bengal Local Government Elections inceident Repolling in 5 districts

 

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கானத் தேர்தல் அறிவிக்கப்பட்டு அரசியல் கட்சியினர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் ஆர்வத்துடன் மனுத்தாக்கல் செய்து தீவிரப் பிரசாரம் மேற்கொண்டு வந்தனர். முன்னதாக, வேட்புமனுத் தாக்கலின் போது பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் பின்னர் வன்முறையாக மாறி 12 வயது சிறுவன் உள்ளிட்ட 18 பேர் உயிரிழந்தனர்.

 

இதையடுத்து மேற்கு வங்க மாநிலத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கானத் தேர்தல் கடந்த சனிக்கிழமை (ஜூலை 08) ஒரேகட்டமாக நடைபெற்றது. இந்தத் தேர்தலில் சுமார் 5 கோடியே 67 லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி பெற்று இருந்தனர். அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில் சுமார் 65 ஆயிரம் மத்திய காவல்படை போலீசாரும், 70 ஆயிரம் மாநில போலீசாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

 

இருப்பினும் கூச்பெகார் என்ற பகுதியில் வாக்குப்பதிவு தொடங்கிய சிறிது நேரத்திலேயே வாக்குச் சாவடிக்குள் புகுந்த மர்ம நபர்கள் சிலர் வாக்குச் சாவடியை சூறையாடினர். அதே பகுதியில் உள்ள மற்றொரு வாக்குப்பதிவு மையம் ஒன்றில் இருந்து வாக்குப் பெட்டியை இளைஞர் ஒருவர் தூக்கிக்கொண்டு ஓட்டம் பிடித்த சம்பவங்களும் நடைபெற்றது. மேலும், ஹூக்ளியில் உள்ள தம்சா வாக்குச் சாவடியில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக தொண்டர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு இரண்டு வாக்குப் பெட்டிகளைக் குளத்தில் வீசினர். பல்வேறு இடங்களில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களால் ஒரே நாளில் 15 பேர் உயிரிழந்தனர்.

 

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை நடந்த உள்ளாட்சித் தேர்தலில் ஏற்பட்ட வன்முறையால் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் சார்பில் முடிவு செய்யப்பட்டது. அந்த வகையில் புருலியா, பிர்பூம், ஜல்பைகுரி, நதியா மற்றும் தெற்கு 24 பர்கானாஸ் ஆகிய ஐந்து மாவட்டங்களில் உள்ள 697 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு இன்று  நடைபெற்று வருகிறது. காலை முதல் வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். மேலும் பதற்றமான வாக்குப்பதிவு மையத்தில் மத்தியப் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

 

 

Next Story

மேற்கு வங்க உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவில் உச்சகட்ட பரபரப்பு

Published on 08/07/2023 | Edited on 08/07/2023

 

west bengal local body election secnerio

 

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு அரசியல் கட்சியினர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் ஆர்வத்துடன் மனுத்தாக்கல் செய்து தீவிரப் பிரசாரம் மேற்கொண்டு வந்தனர். முன்னதாக, வேட்புமனுத் தாக்கலின் போது பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் பின்னர் வன்முறையாக மாறி 12 வயது சிறுவன் உள்ளிட்ட 18 பேர் உயிரிழந்தனர்.

 

இதையடுத்து மேற்கு வங்க மாநிலத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இன்று ஒரேகட்டமாக நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதல் வாக்காளர்கள் வாக்குச்சாவடிகளில் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். இந்த தேர்தலில் சுமார் 5 கோடியே 67 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். அசாம்பாவிங்களைத் தவிர்க்கும் வகையில் சுமார் 65 ஆயிரம் மத்திய காவல்படை போலீசாரும், 70 ஆயிரம் மாநில போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

இந்நிலையில் மேற்கு வங்க மாநிலம் கூச்பெகார் என்ற பகுதியில் வாக்குப்பதிவு தொடங்கிய சிறிது நேரத்திலேயே வாக்குச்சாவடிக்குள் புகுந்த மர்ம நபர்கள் சிலர் வாக்குச்சாவடியை சூறையாடினர். மேலும் வாக்குச்சாவடியில் இருந்த வாக்கு சீட்டுகளுக்கும் தீ வைக்கப்பட்டது. இந்த சம்பவத்தை கண்டித்து தேர்தலில் வாக்களிக்கச் சென்ற மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த் போஸை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் முற்றுகையிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. வாக்குச்சாவடி சூறையாடப்பட்ட சம்பவத்தால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

 

பல்வேறு இடங்களில் நடைபெற்ற வன்முறை சம்பவங்களால் ஒரே நாளில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கலவரங்களைத் தடுக்கும் விதமாக போலீசார் தடியடி நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. கூச்பெகார் மாவட்டத்தில் உள்ள வாக்குப்பதிவு மையம் ஒன்றில் இருந்து வாக்குப் பெட்டியை தூக்கிக்கொண்டு இளைஞர் ஒருவர் ஓட்டம் பிடித்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

மேலும், ஹூக்ளியில் உள்ள தம்சாவில் உள்ள வாக்குச்சாவடியில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக தொண்டர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலுக்கு பிறகு இரண்டு வாக்குப்பெட்டிகளை குளத்தில் வீசினர். வாக்குப்பதிவு மையத்தில் மத்தியப் பாதுகாப்பு படைகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவில்லை என்று மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். முன்னதாக முர்ஷிதாப் என்ற இடத்தில் நேற்று நள்ளிரவு காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.