'தேர்தலை காரணம் காட்டி அடுத்த வருடம் பொங்கல் பரிசு தருவதாக திமுக சொல்வது மக்களுக்கு தெரியாதா?' என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுரையில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா நிகழ்ச்சி கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசுகையில், ''எங்கள் ஆட்சியில் 10 வருஷம் நான் தான் கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்தேன். எங்கள் காலத்தில் 99 மக்கள் பொங்கல் பரிசினை வாங்கிக் கொண்டார்கள். கொடுத்தது நான். எடப்பாடி ஆட்சிக் காலத்தில் பொங்கல் தொகுப்புடன் 2,500 ரூபாய் கொடுத்தார்கள். 99 விழுக்காடு கொடுத்தோம்.
இன்று என்ன ஆனது 32 லட்சம் பேர் மக்கள் பொங்கல் தொகுப்பை வாங்கவில்லை. ''போ வேண்டாம்'' என்று சொல்லிவிட்டார்கள். உன் பொங்கல் தொகுப்பு வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். அன்று நாங்கள் 2,500 ரூபாய் கொடுக்கும்பொழுது ஐயாயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என திமுகவினர் சொன்னார்களே நீங்கள் வந்தீர்களே செய்தீர்களா? துணை முதல்வர் சொல்கிறார் அடுத்த வருடம் கொடுப்பார்களாம். அடுத்த வருடம் தேர்தல் வரும் என்றும் மக்களுக்கு தெரியாதா?
அடுத்த வருடம் 5,000 ரூபாய் கொடுத்தாலும் சரி, 10,000 ரூபாய் கொடுத்தாலும் சரி, வீட்டு வீட்டுக்கு தங்க கட்டியே கொடுத்தாலும் சரி அடுத்து வரப்போவது எடப்பாடி பழனிசாமி தான். ஆளப்போகும் கட்சி அதிமுக தான். எழுதி வைத்துக் கொள்ளுங்கள். ஒரு முறைக்கு மறுமுறை திமுக ஆட்சிக்கு வந்தது கிடையாது. எம்ஜிஆர் மூன்று முறை முதலமைச்சர் ஆனவர். அரிதாரம் பூசியவன் அரசியல் பண்ண முடியுமா என்று வீர வசனம் பேசிய கலைஞரை கோட்டை பக்கமே 11 ஆண்டுகள் வரவிடாமல் வனவாசம் போக வைத்தவர் எம் ஜி ஆர்''என்றார்.