கடலூர் மாவட்டம், வேப்பூர் கூட்ரோடு அருகே இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் தலைமையிலான போலீசார் 26ஆம் தேதி இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூரு மார்க்கெட் பகுதியிலிருந்து 300 மூட்டைகள் வெங்காயம் ஏற்றிக்கொண்டு கும்பகோணம் நோக்கி சென்றுகொண்டிருந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது லாரி ஓட்டுநரும் லாரியில் அமர்ந்திருந்த இரண்டு பேரும் ஒருவருக்கொருவர் முன்னுக்குப்பின் முரணான தகவலைக் கூறியதால் சந்தேகமடைந்த இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், லாரி முழுவதையும் சோதனை செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டார்.
போலீசார் சோதனை செய்ததில், 18 பெட்டிகளில் 864 மதுபான பாட்டில்களை மறைத்துவைத்து கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. அதையடுத்து லாரியைப் பறிமுதல் செய்து 3 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் முழு ஊரடங்கால் தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதால் பெங்களூருவில் இருந்து வெங்காயம் ஏற்றிவந்த லாரியில் மதுபாட்டில்களைக் கடத்திவந்து ஊரில் விற்பனை செய்ய திட்டமிட்டிருந்ததை ஒப்புக்கொண்டனர்.
அதையடுத்து லாரி ஓட்டுநரான கள்ளக்குறிச்சி மாவட்டம் புது உச்சிமேடு பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (43), அதே பகுதியைச் சேர்ந்த உதயகுமார் (29), துரை (38) ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்து, வெங்காயம் ஏற்றிவந்த லாரியைப் பறிமுதல் செய்தனர்.