ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மகன் ராகுல் (வயது 27). நடன இயக்குநரான இவர் ராகுல் டிக்கி (Rahul Tikki) என்ற யூட்யூப் சேனலை நடத்தி வந்தார். அதோடு இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் பிரபலமாக வலம் வந்துள்ளார். இதன் மூலம் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதே சமயம், இவருக்கும் ஈரோடு கவுந்தப்பாடி நேரு நகரைச் சேர்ந்த வேலுமணியின் மகள் தேவி ஸ்ரீ என்பவருக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.
இந்நிலையில் ராகுல், கவுந்தப்பாடியில் உள்ள மாமியார் வீட்டிற்குத் தனது மனைவியை அழைத்து வர நேற்று (16.01.2025) இரவு சுமார் 10:30 மணியளவில் தனது இரு சக்கர வாகன மூலம் சென்றுகொண்டிருந்தார். அப்போது கவுந்தப்பாடி அருகே எதிர்பாராத விதமாகச் சாலையில் தடுப்பின் மீது ராகுல் மோதியுள்ளார். இதனால் ராகுல் படுகாயம் அடைந்தார். இதனைக் கண்ட அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டுக் கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ராகுல், வரும் வழியிலேயே உயிரிழந்ததாகத் தெரிவித்தனர். அதனைத்தொடர்ந்து அவரது உடல், பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் இந்த விபத்து குறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்கள் மற்றும் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.