பெங்களூருவில் ரஜினி படித்த பள்ளியில் அலும்னி மீட் நடந்தது. இதில் ரஜினிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால் தற்போது ரஜினி பாங்காங்கில் படப்பிடிப்பில் இருப்பதால் வீடியோ மூலம் அலும்னி மீட் குறித்து பேசியுள்ளார்.
அந்த வீடியோவில், “உங்கள் அனைவருடனும் நான் இருந்திருக்க விரும்புகிறேன். அது ஒரு மறக்கமுடியாத அனுபவமாக இருந்திருக்கும். முதலில் அரசு தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளியில் கன்னட மீடியத்தில் படித்தேன். நான் நன்றாக படிக்கக்கூடிய மாணவன். 98 சதவீதத்துடன் நடுநிலை பள்ளியில் தேர்ச்சி பெற்றேன். அதனால் என் அண்ணன் ஏ.பி.எஸ். பள்ளி இங்கிலீஷ் மீடியத்தில் என்னை சேர்த்தார். அங்கு படிக்க சிரமப்பட்டேன். கன்னட மீடியத்தில் முதல் பெஞ்ச் மாணவனாக இருந்த நான் அங்கு கடைசி பெஞ்ச் மாணவனாக மாறிவிட்டேன். இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் போன்ற பாடங்களில் படிக்க போராடினேன். ஆங்கிலத்தில் பாடங்களைப் பின்பற்றுவது கடினமாக இருந்ததால் நான் மனச்சோர்வடைந்தேன்.
இருந்தாலும் பள்ளியில் இருந்த ஆசிரியர்கள் எனக்கு உதவினார்கள். அதன் மூலம் இங்கிலீஷ் மீடியத்தில் படிக்க சிரமப்பட்டதை எளிதாக கடந்தேன். குறைந்த மதிப்பெண்கள் இருந்தபோதிலும் ஏ.பி.எஸ். கல்லூரியில் சேர முடிந்தது. ஆனால் கல்லூரியில் முதலாமாண்டுக்குப் பிறகு படிப்பை நிறுத்திவிட்டேன். வகுப்பில் நான் பார்த்த படங்களைப் நடித்து காட்டுவேன். இது என் ஆசிரியர்களுக்கு தெரிய வர என்னை நாடகத்தில் நடிக்க வைத்தனர். அது இப்போது எனக்கு உதவுகிறது”என்றார். ரஜினி தற்போது கூலி படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக ஜெயிலர் 2 படத்திலும் நடிக்கவுள்ளார்.