திரைத்துறையைத் தாண்டி கார் ரேஸில் ஆர்வமுள்ள அஜித் நீண்ட இடைவெளிக்குப் பிறகு துபாயில் நடந்து முடிந்த 24ஹெச் சீரிஸ் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். அவரது சொந்த கார் ரேஸ் அணியான ‘அஜித்குமார் ரேஸிங்’ பெயரில் பங்கேற்ற அவர், இந்த போட்டியில் மூன்றாவது இடத்தை பிடித்தார்.
முன்னதாக ‘அஜித்குமார் ரேஸிங்’ அணியை தொடங்கிய பின்பு கார் ரேஸிற்காக பயிற்சி எடுத்து வந்தார். அப்போது அவரது ஹெல்மெட் மற்றும் அவரது அணியின் காரில் தமிழ்நாட்டு விளையாட்டுத் துறை லோகோ இடம் பெற்றிருந்தது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவ, துணை முதல்வர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி, அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா உள்ளிட்ட சில அமைச்சர்கள் அஜித்திற்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த நிலையில் 24ஹெச் சீரிஸ் போட்டிக்கு பின் அஜித் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அங்கு ஒரு பேட்டியில் பேசிய அவர், “தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மோட்டார் ஸ்போட்ஸுக்கு நிறைய விஷயங்கள் செய்கிறது. சென்னையில் முதல் முறையாக கார் ரேஸ் இரவு நேரத்தில் நடத்தியது. அதற்காக தமிழக அரசுக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கும் துணை முதல்வர் உதயநிதிக்கும் என்னுடைய நன்றிகள். இந்த முன்னெடுப்பு இந்தியாவில் மோட்டார் ஸ்போர்ட்ஸை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்ல உதவும்” என்றார்.