‘அரசியல் சடுகுடு’ என்ற தலைப்பில் நக்கீரன் நடத்தி வரும் நேர்காணலில் அரசியல் தொடர்பான பல்வேறு கருத்துகளை அரசியல் விமர்சகர்கள் பலர் பேசி வருகின்றனர். அந்த வகையில் ம.தி.மு.க. கொள்கை விளக்கச் செயலாளர் வந்தியத்தேவன், தந்தை பெரியார் குறித்து நா.த.க. ஒருங்கிணைப்பாளர் சீமான் அவதூறாக பேசியிருப்பது குறித்து தனது கருத்துகளை நம்மோடு பகிர்ந்துள்ளார்.
திராவிட இயக்கத்தில் உள்ளவர்கள் அவரின் பெயரைச் சொல்லக்கூட கூச்சப்படுகிறோம். அரசியலில் சமமான தலைவர்களுடன்தான் நாங்கள் போட்டிப் போடுகிறோம். ஆனால் அவரை நாங்கள் அப்படி நினைக்கவில்லை. ஏனென்றால் தனிநபர் ஒழுக்கம் அவரிடம் கிடையாது. நேற்றைக்கு ஒன்று இன்றைக்கு ஒன்று என்று பேசக்கூடியவர். அவருடைய பேச்சு தொனி எதிரியிடம் சண்டைக்குப் போவதுபோல் இருக்கும். கருத்தைச் சொல்லும் விதத்தில் இருக்காது. அதுபோலத்தான் தற்போது பெரியார் குறித்து அவதூறாகப் பேசியிருக்கிறார். இப்படி அவர் நிறையத் தலைவர்கள் பற்றிப் பேசி கண்டித்திருக்கிறார். இதுதான் அவருடைய கடந்த கால வரலாறு. ஆனால் அவர் பா.ஜ.க-வும் சங்பரிவார் அமைப்பும் உயர்த்தி பிடிக்கும் நபரைக் கண்டிக்க மாட்டார். அவர் எங்கேயாவது சங்கராச்சாரியார் பற்றிப் பேசி பார்த்திருக்கிறீர்களா? கண்டிப்பாக பேச மாட்டார். காரணம் அவருக்கு அங்கிருந்துதான் வேலை செய்து வருகிறார்.
திராவிட இயக்கத்தை இந்தளவு பேசும் அவர், சங்பரிவார் அமைப்பையும் விமர்சனம் செய்து பேச வேண்டுமல்லவா? அவர் பெரியாரைப் பற்றி பேச வேண்டாம் என்று நாங்கள் சொல்லவில்லை. ஏனென்றால் பெரியார், தன்னுடைய கருத்தைக்கூட விமர்சனம் செய்யுங்கள் என்று சொன்னார். இதை இன்னும் ஆழமாகச் சொல்ல வேண்டும் என்றால் தன்னுடைய சிந்தனை இப்படியே இருக்காது, இன்னும் 50 வருடம் கழித்து தன்னைவிடப் பெரிய சீர்திருத்தவாதி வருவார்கள். அப்போது தன்னுடைய கருத்துகள் பின்தங்கி இருப்பதைப்போல் இருக்கும். அப்படிப்பட்ட விமர்சனத்தைக்கூடத் தான் வரவேற்பதாக பெரியார் சொன்னார். ஆனால் அவர்(சீமான்) மைதானத்தில் பந்தை அடிப்பதற்குப் பதிலாக கால்களை அடித்து வருகிறார். காரணம் அவருக்கு பந்தை அடித்து வெற்றிபெற முடியாது என்பது தெரியும்.
அவர் எடுத்து வைக்கும் வாதங்களைப் பார்த்தால், 6 வருடத்திற்கு முன்பு எச்.ராஜா போன்றவர்கள் பேசி வாந்தி எடுத்ததைப் பொய் என நிரூபித்த பிறகும் அதை அவர்(சீமான்) தூக்கிப் பிடித்து வருகிறார். அவர் வெளியில் சொல்ல முடியாத அளவிற்கு கேவலமான குற்றச்சாட்டை சொல்லி இருக்கிறார். அன்றைக்கு எச்.ராஜா அதே ஆதாரத்தைத்தான் இவரிடம்(சீமானிடம்) கேட்கிறோம். எச்.ராஜா விடுதலைப் பத்திரிக்கையில் ஒரு தேதியை சொல்லி ஆதாரமாக சொன்னார். அப்போது எச்.ராஜா சொன்ன அந்த நான்கு பங்களையும் பிரிண்டு போட்டு அனைவரது கையில் கொடுத்தோம். அதில் எச்.ராஜா குறிப்பிட்ட ஆதாரம் இல்லாததால் அமைதியாகப் போய்விட்டார். பெரியார் மீது அவர்(சீமான்) ஒரு விமர்சனத்தைச் சொன்னால் அதற்கான ஆதாரத்தைக் கையில் வைத்துக்கொண்டு சொல்ல வேண்டும். அதற்குப் பதில் ஆதாரத்தை நீங்கள் தேடி எடுத்துப் பாருங்கள் என்று சொல்லுவது சட்டப்படி தவறு.
ஒருவர் மீது குற்றம் சாட்டினால் அதற்கான ஆதாரம் இருக்க வேண்டும். இன்றைக்கு பெரியாருடைய படைப்புகளை ராமகிருஷ்ணன், கொளத்தூர் மணி போன்றவர்கள் வெளியிட்டுள்ளனர். அதே போல் அரசாங்கமும் அவரது படைப்புகளை வெளியிட்டுள்ளது. பெரியார் திடலில் இருக்கும் நூலகத்தில் யார் வேண்டுமானாலும் போகலாம். ஏன் அவரே(சீமானே) போகலாம். நல்ல முதிர்ச்சியுள்ள தலைவராக அவர் இருந்தால் பெரியார் மீது குற்றம் சாட்டுவதற்கு முன் அவரைப் பற்றிப் படித்து ஆதாரத்தைக் கையில் வைத்துக்கொண்டு அதன் அடிப்படையில்தான் பெரியாரைக் குற்றம் சாட்டுகிறேன் என சொல்லியிருக்க வேண்டும். திராவிடர் கழகத் தலைவர் கீ.வீரமணி பேசும்போது கூட அவருடைய உயரத்தில் புத்தகங்களை அடுக்கி வைத்துக்கொண்டு அதில் உள்ள சான்றுகளை வைத்துத்தான் பேசுவார். ஆனால் இவர்(சீமான்) ஆதாரத்தை நீங்களே பாரத்துக்கொள்ளங்கள் என சொல்லுவது அவரின் முதிர்ச்சியற்ற தன்மையைக் காட்டுகிறது.